செரிமானப் பிரச்சினையா? ஒரு சோடா குடித்துப் பெரு ஏப்பம் விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற கற்பிதம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இன்னும் சிலர் ஒவ்வோர் உணவுக் கவளத்துக்கும் இடையே ஒரு சோடா அல்லது குளிர்பானத்தைப் பருகும் தவறான உணவு முறையைப் பின்பற்றுகின்றனர். இப்படிப் பருகினால் செரிமானம் சிறப்பாக இருக்கும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு!
லேசான செரிமானக் கோளாறுகளுக்குக்கூட மாத்திரை அல்லது டானிக்கை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி பயன்படுத்தும் கூட்டத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சில உணவு வகைகளைச் சாப்பிட்டால் சீரணக் கோளாறு ஏற்படும் என்று தெரிந்தும், சுவைக்கு அடிமையாகும் நவீனங்களைக் குக்கிராமங்கள்வரை பார்க்க முடிகிறது. செரிமானம் சார்ந்த பாதிப்புகள் பேசுபொருளாக மாறியிருக்கும் இப்போதைய சூழலில் அஞ்சறைப் பெட்டியின் முக்கிய உறுப்பினரான ஓமத்திலிருந்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் மருந்தைப் பற்றி அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்!
அதி உணவு, காலம் தவறிய உணவு, குறை உணவு, முறையற்ற உணவு, சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது, உணவை நன்றாக மென்று சாப்பிடாதது, அளவுக்கு மீறிய அசைவ உணவு, முறையற்ற டயட் வகைகள், துரித உணவுக் கலாச்சாரம் போன்ற பல காரணங்களால் செரிமானமின்மை, எதிர்க்களித்தல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று வலி, ஏப்பம், குமட்டல், வாயுப் பெருக்கம், மலக்கட்டு போன்ற செரிமான உபாதைகள் ஏற்படுவது இயற்கை.
செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் உடனடியாக ‘ஆன்டாசிட்’ மருந்துகளைத் தேடி ஓடாமல், முதலில் உணவு முறையில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். அடுத்தகட்டமாக, பாதிப்பை நிவர்த்தி செய்ய இயற்கையான பொருள்களின் ஆதரவை நாடலாம். அவ்வகையில் செரிமானத் தொந்தரவுகளைப் போக்க நம்மிடையே உள்ள பொக்கிஷம்தான் சித்த மருந்தான ஓமத் தீநீர்!
ஓமத் தீநீர்: ஒவ்வொரு வீட்டிலும் முற்காலங்களில் ஓமத் தீநீர் புழக்கத்தில் இருந்தது. அதாவது ‘ஓம வாட்டர்’ அல்லது ‘ஓமத் திராவகம்’ என்று சொன்னால் பலருக்கும் நினைவுக்கு வரலாம். அக்காலத்தில் என்றாவது நடைபெற்ற விருந்து நிகழ்வுகளிலோ, திருமண விழாக்களிலோ அதிகமாகச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரிசெய்ய ஓமத் தீநீரை நாடும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் இருந்தது. இன்று பெருகிவிட்ட விருந்து கலாச்சார உலகில் ஓமத் தீநீரின் பயன்பாடு அளவிட முடியாத விகிதத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஓமத் தீநீர் என்பதையே அறியாத நபர்களே இன்று அதிகம்.
தயாரிக்கும் முறை: ஓமத்தைக் கொஞ்சம் இடித்துக்கொண்டு தண்ணீரில் பல மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ‘வாலை’ இயந்திரத்தில் இட்டுச் சிறு தீயில் எரிக்க நீராவி கிளம்பும். பின் நீராவியைக் குளிர்விக்கும்போது இயந்திரத்திலிருந்து சொட்டு சொட்டாகத் தீநீர் இறங்கும்.
சேகரித்த தீநீர் காரம் மிக்கதாக இருக்கும். காரத்தன்மையை மையப்படுத்தியே தீநீர் என்கிற மருந்துப் பெயர் உருவாகி இருக்கலாம். பதினைந்து மி.லி. அளவு தீநீரைத் தண்ணீரில் கலந்து பருகுவதே முறை. ஓமத் தீநீர் தயாரிப்பின்போது மேலே படிந்திருக்கும் எண்ணெய்யும் ‘ஓம எண்ணெய்’ என்கிற பெயரில் சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் இருக்கிறது.
வாலை இயந்திரம்: சித்த மருந்து தயாரிப்புக் கருவிகளில் வாலை இயந்திரம் நுணுக்கம் நிறைந்தது. ஒன்றின் மேல் ஒன்று மூடிய நிலையில் இரண்டு பானைகளின் வாய் இணைக்கப்பட்டிருக்கும்! மண் சீலை செய்யப்பட்டு பானைகளின் வாய் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும். நீரில் ஊற வைத்த மூலிகைப் பொருள்களைக் கீழே உள்ள பானைக்குள் போட்டு மெல்லிய தீயில் எரிக்க, உள்ளிருந்து எழும்பும் நீராவி பானையின் மேல் மூடப்பட்டிருக்கும் மற்றொரு பானையின் மீது படியத் தொடங்கும். மேல் பானையின் மீது உள்ள நீர் ஊற்றும் அமைப்பில் சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றிக் குளிர்விக்க, மேல் பானையின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் வழியே உள்ளே சேர்ந்த நீராவி, நீர் வடிவ மருந்தாகக் கீழிறங்கும்.
இப்போது வாலை இயந்திரம் நவீனத்துவம் பெற்றுப் பல அமைப்புகளில் உருப்பெற்றிருக்கிறது. தீநீர் தயாரிக்கும் இயந்திரம் அப்போது பல கிராமத்து வீடுகளில் இருந்திருக்கிறது. காலப் போக்கில் இயந்திரத்தோடு சேர்த்து, ஓமத்தை மருந்தாகப் பயன்படுத்தும் வழக்கமும் படிப்படியாகக் குறைந்துவிட்டது.
வாலை இயந்திரத்தின் மூலம் ஓமத்தை மருந்தாக எடுப்பது மட்டுமன்றி, வேனிற் காலங்களில் ஓமத்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து ‘ஓம ஊறல் நீராகவும்’ பயன்படுத்தலாம். மழை, குளிர் காலங்களில் ஓமத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ‘ஓமக் குடிநீரா’கவும் உபயோகிக்கலாம். தயாரிக்கும் முறை எளிது! ஆனால், தீநீராக இறக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளின் நுணுக்கமான மருத்துவக் கூறுகள் சிதையாமல் கிடைக்கும்.
மருத்துவப் பலன்கள்: வாய்வு அகற்றி, இசிவு அகற்றி, உமிழ்நீர்ப் பெருக்கி, பசியைத் தூண்டும் செய்கைகள் ஓமத்துக்கு இருப்பதாகச் சித்த மருத்துவம் தெரிவிக்கிறது. ‘சீதசுரங் காசஞ் செரியாமந்தம் பொருமல்’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடல் செரிமான உபாதைகளில் ஓமத்தின் பங்கு குறித்துச் சுட்டிக்காட்டுகிறது.
செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி செரிமான உபாதைகளைச் சரிசெய்யும் தன்மை ஓமத்திலிருக்கும் சைமீன், பைனீன் ஆகிய வேதிப் பொருள்களால் சாத்தியமாகிறது. தசைப்பிடிப்புகளை இளக்கும் குணமும் ஓமத்துக்கு இருப்பதால் மாதவிடாய்க் காலத்திலும், சுவாசப் பாதை சார்ந்த பிரச்சினைகளிலும் ஓமம் சிறப்பான பலன் அளிக்கும். ஓமத்தில் உள்ள தைமால் சுவாசப் பாதையை மெலிதாக விரிவுபடுத்தி சுவாசத்தைச் சீர்படுத்தும்.
ஓமத்துக்குப் பதிலாக ஓம உப்பைப் பயன்படுத்தி தீநீர் தயாரிக்கப்படுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஓம உப்பின் தரம், பொருளின் இயற்கைத்தன்மையை அறிவது முக்கியம்! செரிமானம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓமத்தைத் தாராளமாக மருந்தாகப் பயன்படுத்தலாம். நீண்ட நாள்களுக்குப் பிரச்சினையின் தீவிரம் நீள்கிறது எனில், மருத்துவரின் ஆலோசனையுடன் பிரச்சினைக்கான அடிப்படையை ஆராய்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது நலம்!
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago