ஆட்டிசம்: ஊக்கமும் அங்கீகாரமுமே பேருதவி

By செய்திப்பிரிவு

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல. குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சி தொடர்பான ஒரு பாதிப்பு இது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்துடனும் மற்ற குழந்தைகளுடனும் தொடர்பு கொள்ளச் சிரமப்படுவார்கள்; மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைக் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள்; குறைவாகப் பேசுவார்கள்; கைகளைப் பயன்படுத்தி சைகையால் தம் மனத்தில் இருப்பதைத் தெரிவிக்க முயல்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ஆம் தேதி, 'உலக ஆட்டிஸ்டிக் பெருமித நாளா'கக் கொண்டாடப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெருமைகளையும் சமூகத்துக்கு அவர்கள் வழங்கியிருக்கும் மகத்தான பங்களிப்புகளையும் கொண்டாடுவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். இந்தாண்டும் ’ஆட்டிச பெருமித நாள்’ வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்தாண்டின் கொண்டாட்டங்கள், சமூகத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக இருந்தன. முக்கியமாக, வீட்டிலும் வேலையிலும் அவர்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரச்சாரமும் இந்தாண்டில் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த முன்னெடுப்புகளின் ஒருபகுதியாக, சென்னையில் மிலாப், செல்லையா மெமோரியல் டிரஸ்ட், வித்யா சாகர் டிரஸ்ட் ஆகியவை ஒன்றிணைந்து ஆட்டிசம் தொடர்பான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பாசிபிலிட்டி அருங்காட்சியகத்தில் நடத்தின. பாசிபிலிட்டி அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தமிழ்நாடு அரசினால் உருவாக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஆட்டிச குழந்தைகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள் அந்த குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அது மட்டுமல்லாமல், அவர்களின் தனித்திறன்களை அவர்களே தெரிந்துகொள்ளும் விதமாக அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குறை உள்ளவர்களாக நாம் பார்க்கக்கூடாது; அவர்களைத் தனித்து நடத்தக்கூடாது. அவர்களுக்குத் தேவை நமது பச்சாதாபம் அல்ல; ஊக்கமும் அங்கீகாரமும் அவர்களுக்குத் தேவை. நம்முள் ஒருவராக அவர்களை அங்கீகரித்து, மதித்து, நடத்துவதே அவர்களுக்கு நாம் செய்யும் ஆக்கபூர்வ உதவி.

- கௌதம் ஆர், பயிற்சி இதழாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE