நமது அஞ்சறைப் பெட்டியில் உள்ள நறுமண, மசாலா பொருட்களில் சமீபகாலமாகச் சிறப்பு உணவாகப் பெரிய அங்கீகாரம் பெற ஆரம்பித்திருக்கும் விஷயம் மஞ்சள். இந்த மூலிகை இந்தியா, இந்தோனேசியாவின் இயல் தாவரம்.
ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும் இந்த மூலிகைச் செடியை அரபு வணிகர்கள் 13-வது நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திவிட்டாலும், சமீபகாலமாகத்தான் மேற்கத்தியக் கலாசாரத்தில் அது பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது.
மஞ்சள் தாவரத்தின் வேர் கிழங்கின் குறிப்பிடத்தக்க பண்புகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்களும், பொது மக்களும் நம்ப ஆரம்பித்திருப்பதுதான், அதன் சமீபத்திய பிரபலத்துக்குக் காரணம். பிரகாசமான மஞ்சள் நிறம் கொண்ட மஞ்சளுக்கு Curcuma longa என்ற அறிவியல் பெயரும், இந்தியக் குங்குமப்பூ (Indian saffron) என்ற வேறு பெயரும் உண்டு.
வேற்றுமையைப் போற்றும் இந்தியாவின் பல்வேறு பண்பாடுகளில் மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பவுத்த பிட்சுகளின் மேலாடைக்கு நிறமேற்றவும் மஞ்சளே பயன்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.
குணப்படுத்தும் பண்பு
மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் (curcumin) என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். சக்தி வாய்ந்த குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது.
அழற்சி-வீக்கத்தைக் குறைக்கும் அற்புதமான நிறமி. இதே பண்புகளைக் கொண்ட ஹைட்ரோகார்டிசோன், பினைல்பியூட்டாஸோன் ஆகிய மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மை மஞ்சளில் கிடையாது. ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
இதைவிட ஆச்சரியமான விஷயம் நூற்றாண்டுகளாக, இல்லையில்லை ஆயிரம் ஆண்டுகளாக, மஞ்சளின் முக்கிய குணமான குணப்படுத்தும் பண்பை நமது பாட்டிகளும் முப்பாட்டிகளும் நன்கு புரிந்துகொண்டிருந்ததுதான்.
தலைமுறை தலைமுறையாகப் பல்வேறு நோய்களுக்குக் குணமளிக்க சர்வ ரோக நிவாரணியாக மஞ்சளை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற அறிவை, அவர்கள் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.
மஞ்சள் கலந்த பால்
மார்புச் சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்குப் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.
இத்துடன் கொஞ்சம் ஏலக்காய் சேர்ப்பது ருசியைக் கூட்டுவதுடன், கவலையையும் போக்கும். காரணம், ஏலக்காய் உற்சாக மனநிலையைத் தரக்கூடியது. மஞ்சள் சிறந்த ஆண்டி ஆக்சிடண்ட் என்பதால், முதுமையைத் தள்ளிப்போடுவதற்குப் படுக்கப் போகும் முன் பலரும் மஞ்சள் கலந்த பாலை அருந்துவது வழக்கம். அதேநேரம் பாக்கெட் பாலுக்குப் பதிலாக, மாட்டுப் பாலை இதற்குப் பயன்படுத்துவது சிறந்தது.
சூடாக்கப்பட்ட கடுகு எண்ணெயும் மஞ்சள் பொடியும் சேர்ந்த கலவை, சுளுக்கையும் தசைப் பிசகுப் பிரச்சினைகளையும் குறைக்கும். சேதமடைந்த தோலைச் சீரமைக்க உதவும். மஞ்சள் தூள் கலந்த பால், முடக்குவாதத்தால் ஏற்படும் மூட்டு வீக்கங்களைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.
புற்றுக்கு எதிரி
புற்றுநோயைப் பொறுத்தவரை புற்று செல் வளர்ச்சியைத் தடுக்கவும், உடல் உறுப்புகளில் புற்று பரவுவதைத் தடுக்கவும் மஞ்சள் உதவுகிறது. மேலும் பெருங்குடல், புராஸ்டேட், மார்புப் புற்றுநோய்களை மஞ்சள் தடுக்கிறது. காலிஃபிளவர், மஞ்சள் கலந்த கலவை புராஸ்டேட் புற்றை மட்டுப்படுத்த உதவுகிறது.
மஞ்சளின் மற்றொரு பலன் தரும் குணம், மூளையில் அமிலாய்ட் பிளேக் அதிகரிப்பதைத் தடுப்பதுதான். இது அல்சைமர் என்ற மறதி நோயின் தொடக்கத்தில் ஏற்படுவது. இதன் மூலம் அந்த நோய் தாக்குதலில் இருந்து தடுத்துக் கொள்ளவும், நோய் வரும் வாய்ப்பைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.
பலன்களுக்கு முடிவில்லை
மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஏற்கெனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது. அழற்சி வீக்கத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல், பாக்டீரியாவையும் அழிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவை முறைப்படுத்தவும் சிலர் மஞ்சளைப் பயன்படுத்துகிறார்கள்.
மஞ்சளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்று பார்த்தால் இரும்புச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி6, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை உள்ளன. உணவு என்று பார்த்தால் நாட்டின் பல்வேறு குழம்பு, சாம்பார் பொடிகளில் மஞ்சள் ஒரு அத்தியாவசியப் பொருள்.
சுவை தரும்
மல்லி விதை, சீரகத்துடன் சேர்ந்த மஞ்சள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை செரிக்க வைப்பதிலும், குழம்புகளில் நறுமணத்தைத் தருவதற்கும் பயன்படுகிறது. மஞ்சள் மீதான மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க இப்போது பிரெட், கேக்குகளில்கூட சேர்க்கப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
வண்ணம் சேர்க்கவும் இது கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளின் நல்ல குணத்தைக் கூடுதலாகப் பெறக் கொஞ்சம் மிளகு அல்லது நெய்யைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
சூரிய ஒளி பட்டால் மஞ்சள் வேதிமாற்றம் அடைந்துவிடும் என்பதாலும், வெளிச்சத்தில் வேகமாக நிறத்தை இழக்கும் என்பதாலும், தேவைக்கேற்ப குறைந்த அளவில் வாங்கி, அடர்நிறம் கொண்ட கலனில் சேமித்துப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் மஞ்சளை வாங்குவதே சிறந்தது. நன்றாகப் பேக் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக, பெரிய கடைகளில் கிடைக்கும் மஞ்சள் நம்பகமானது என்று உறுதி கூற முடியவில்லை.
மொத்தத்தில், மஞ்சளை எப்படிப் பயன்படுத்தினாலும் சுவையும் உடல் ஆரோக்கியமும் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் வந்தனா சிவா, நவதான்யா நிறுவனத்தைத் தொடங்கியவர்.
தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago