‘மகிழ்ச்சி என்பது அதீதங்களில் இல்லை. அது சமநிலை, ஒழுங்கு, லயம் மற்றும் ஒத்திசைவில் உள்ளது’
– அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் மெர்டன்
கபாலிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பிடித்த வார்த்தை மகிழ்ச்சி! ஆனால் அதைத் தேடி ஓடும் ஓட்டத்தில் கவனம் செலுத்தும் நாம், ஓடுவதன் நோக்கத்தை மறந்து கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
சென்ற நூற்றாண்டில் அதிகம் பகிரப்பட்ட மருத்துவ நகைச்சுவை ஒன்று உண்டு. ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் சிக்கலான அறுவைசிகிச்சை ஒன்றைச் செய்தாராம். அப்போதெல்லாம் மயக்க மருத்துவர் எனத் தனியாக யாரும் கிடையாது. நோயாளியின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றும் சிகிச்சை அது.
அறுவைசிகிச்சை செய்த குழு மிகவும் லயிப்புடன் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த நிபுணர் ரொம்பத் திறமையுடன் அந்தக் கட்டியை அகற்றினாராம். பிறகு சட்டென்று ஞாபகம் வந்து, அந்த நோயாளியின் மூச்சைக் கவனித்தார்களாம். அது நின்றுபோய் பல நிமிடங்கள் ஆகியிருந்ததாம். ‘அறுவைசிகிச்சை வெற்றி. நோயாளி மரணம்’ என்ற பகடிச் சொற்றொடர், அதன் பின்புதான் தோன்றியிருக்க வேண்டும்.
தொலைந்து போகும் அடிப்படை
இது போலத்தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, செய்யும் செயல்களில் அப்படியே மூழ்கிப் போய் அடிப்படை நோக்கத்தை மறந்து, நிம்மதியைத் தொலைத்துவிடுகிறோம். ஒரு புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் ஒரு பள்ளி ஒன்றில் உரையாற்றினார். தனது பேச்சிலே நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை இடைவெளி இல்லாமல் வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டார். ஆனால், மாணவர்கள் மறந்தும்கூடச் சிரிக்கவில்லை. ஒரு வேளை அனைத்து மாணவர்களுக்கும் ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ்தான் தாய்மொழியாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சாளர் மனதுக்குள் குழம்பினார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். “நாளைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்குப் பேச ஒரு பெரிய பேச்சாளர் வாறாரு. நீங்க யாராச்சும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைச்சீங்க, தோலை உரிச்சிடுவேன்” என முந்தைய நாளே மாணவர்களிடம் எச்சரித்து வைத்திருந்தார். புதுப் பிரம்புடன் இரண்டு வாத்தியார்களை அதற்கான வேலையிலும் ஈடுபடுத்தியிருந்தார். பிறகு எந்த மாணவனுக்காவது சிரிப்பு வரும்?
நம்முடைய மனமும் பல நேரம் இந்தத் தலைமை ஆசிரியரைப் போன்றே வாழ்க்கையை ரசிக்க வேண்டிய நேரத்தில் ரசிக்காமல் எப்போது பார்த்தாலும் செய்ய வேண்டிய வேலைகளை, அடைய வேண்டிய லட்சியங்களை, கட்ட வேண்டிய மாதத் தவணைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, சிரிப்பதைத் தள்ளிப் போட்டுவிடுகிறோம். இந்த விஷயங்களெல்லாம் நடந்தால்தான் சிரிப்பேன் என மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில முன்நிபந்தனைகளை வேலை வெட்டியில்லாமல் விதித்துக்கொள்கிறோம். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலேயே நமது மகிழ்ச்சியையும் தொலைத்துவிடுகிறோம்.
லட்சியமே வேண்டாமா?
அப்படியென்றால் வாழ்க்கையில் லட்சியங்களே இல்லாமல் இருப்பதுதான் நல்லதா டாக்டர் என்று என்னை மடக்குவதுபோல யாராவது கேள்வியை நீட்டலாம். அப்படியல்ல. லட்சியங்கள் மிகவும் முக்கியம்தான். எல்லா நாளையும் ஞாயிற்றுக்கிழமைபோல் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால், கொஞ்ச காலத்தில் எல்லா நாளும் திங்கட்கிழமைபோல் இழுத்துப்போட்டு வேலையை முடிக்க வேண்டி வந்துவிடும். கடின உழைப்பும் குறிக்கோளும் மிக அவசியமே.
அதேபோல் மிகப் பெரிய லட்சியங்களுக்காக மகிழ்ச்சியைத் தியாகம் செய்யும் லட்சிய வீரர்களும் மேதைகளும் உலகில் உண்டு. இந்தக் கட்டுரைத் தொடர் அது போன்ற லட்சியவீரர்களுக்கானது அல்ல. அவர்களுக்கு இது போன்ற கட்டுரைகளே தேவையில்லை. நம்மை போன்ற சாமானியர்களுக்காகவே இதெல்லாம்.
ஓட்டமும் ஓய்வும்
எதற்காக இவ்வளவு பதற்றம், ஓட்டம் ,போட்டி, பரபரப்பு என்பதைப் பற்றி ஒரு கணம் யோசிக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞானி மசானபு ஃபுகோகா சுட்டிக்காட்டிய விஷயம்: ஒரு மனிதன் பல காலம் இராப்பகலாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தானாம். அதனால் அவனது கண் பார்வையே பாதிக்கப்பட்டதாம். கடைசியில் அவன் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்தானாம். அவன் கண்டுபிடித்தது என்ன தெரியுமா, மூக்குக் கண்ணாடி.
இப்படி சிக்கல்களுக்குத் தீர்வாகும் என நினைத்து நாம் செய்யும் பல செயல்களே அச்சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடும். வாழ்வில் வெற்றி பெறுவது முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்குமான ஒரு சமநிலைதான் நலம்தரும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: உண்மை வீரன் யார்?)
கட்டுரையாளர், மனநலத்துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago