நூற்றாண்டு காணும் ‘ஒளி’ விளக்கு!

By முனைவர் வ.ரகுபதி

‘அரவிந்த்’, உலகின் மிகப் பெரிய கண் மருத்துவ நிறுவனம். ஆண்டுதோறும் 40 லட்சம் கண் நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். ஆறு லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அரவிந்த் மருத்துவமனைகள் நான்காயிரம் படுக்கைகளைக் கொண்டிருக்கின்றன. உலகில் தயாராகும் உள்விழி லென்ஸில் சுமார் 10 சதவீதத்தை ‘அரவிந்த் ஆரோ லேப்’ உற்பத்தி செய்கிறது. தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர். உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை நியாயமான கட்டணத்திலும், இயலாதவர்களுக்குக் கட்டணமின்றியோ வழங்கப்படுகிறது.

உலகத் தரம் வாய்ந்த கண் மருத்துவ சிகிச்சையை லட்சக்கணக்கான ஏழை எளியவர்களுக்குக் கட்டணம் ஏதுமின்றி பரிவுடன் தந்திடும் இந்த மாபெரும் தொண்டுக்கு வித்திட்டவர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கோ. வெங்கடசாமி. 1918-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, விருதுநகர் அருகே வடமலாபுரம் என்னும் கிராமத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தார். கடின உழைப்பு, நேர்மை, உறவைப் பேணுதல் போன்ற பண்புகள் கிராம வாழ்க்கை அவருக்குத் தந்த வரங்கள்.

டாக்டர் வெங்கடசாமி தனது மருத்துவமனைகளை மட்டும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நினைப்புடன் செயல்படவில்லை. கண் மருத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும், அதை உலக அளவிலான இயக்கமாக வளர்க்க வேண்டுமென அவர் கருதினார். அவரது வழிகாட்டுதலால் சுமார் 20 நாடுகளில் நூற்றுக்கணக்கான கண் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.

காந்தியும் அரவிந்தரும்

விடுதலைப் போராட்டக் காலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்த வெங்கடசாமி, மகாத்மா காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ‘ஏழைகளின் கண்களில் வழியும் நீரைத் துடைப்பதே அறம்’ என்கிற காந்தியின் செய்தி, அவரது ஆன்மாவில் கலந்தது. காந்தியின் கிராம வாழ்க்கை நெறி, அவருக்கு வழிகாட்டு நெறியாக மாறியது.

வாழ்க்கையில் கடும் சோதனைகளைச் சந்தித்த தனது இளமைக் காலத்தில் காந்திய அன்பர் ஒருவருடன் அரவிந்தரை வெங்கடசாமி தரிசித்தார். அரவிந்தரைத் தன் ஆன்ம குருவாக ஏற்றார். ‘அர்ப்பணிப்பு பெரும் ஆற்றலைத் தரும்’ என்ற அவரின் செய்தி, வெங்கடசாமியின் வாழ்க்கையை வழிநடத்தியது. குடும்பம், உறவு, தன் மருத்துவமனை, தன் வளர்ச்சி என்ற மனத்தடைகளைத் தாண்டி உலக மக்களுக்கு எல்லாம் கண் மருத்துவத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்ற மிகப் பெரிய லட்சியத்துக்காகத் தனது வாழ்க்கையைத் தயார் செய்துகொண்டார்.

சமூகக் கண் மருத்துவம்

கண் மருத்துவத்தில் வெங்கடசாமி தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்தார். மருத்துவ உலக நடைமுறை எல்லைகளை உடைத்தெறிந்து கோடிக்கணக்கான மக்களின் வாயில்களுக்கு அதைக் கொண்டுசென்றார். 1961-ம் ஆண்டு சமூகக் கண் மருத்துவத்தை வெற்றிகரமான கோட்பாடாக மாற்றிக் காட்டினார். அதன்பின் ‘அனைவருக்கும் கண் மருத்துவம்’ என்பது அவரது உயிர் மூச்சானது.

07chnvk_venkatasamy.jpg வெங்கடசாமி

1956-ம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவின் தலைவரானபோது, அவருக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகின. கண் மருத்துவப் பிரிவைத் தனது லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அரசு மருத்துவமனைகளில் புதிய முயற்சிகள் செய்வது மிகக் கடினம். ஆனால் அவர் சோர்வடையவோ பின்வாங்கவோ இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக கண் மருத்துவத் துறை அவரது கருத்துகளுக்கு ஏற்றவாறு மாறியது. மருத்துவமனைகளுக்கு வரும் கண் நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதில் அவருக்கு நிறைவு கிட்டவில்லை. ஆயிரமாயிரம் கண் நோயாளிகள், கிராமங்களில் வழி தெரியாது தவித்துவந்ததைப் பார்த்தார். அவர்களைத் தேடி ஏன் மருத்துவர்கள் செல்லக்கூடாது என யோசித்தார்.

‘தேடிச் சென்று பணி செய்’ என்பது ஆரம்ப காலத்திலிருந்து அவர் கடைப்பிடித்த கொள்கை. 1961-ம் ஆண்டு கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தனது முதல் கிராமியக் கண் மருத்துவ முகாமை நடத்தினார். சமூகக் கண் மருத்துவ வரலாற்றில் அது முக்கியமான மைல்கல். மருத்துவமனைக்கு வர வாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கான மக்கள் அந்த முகாமுக்கு வந்தனர். சுமார் 350 அறுவைசிகிச்சைகள் அந்த முகாமில் வெற்றிகரமாக நடைபெற்றன. அக்காலத்தில் அது மிகப் பெரிய சாதனை.

அடுத்த 15 ஆண்டுகளில், கிராமியக் கண் மருத்துவத்தில் பல பரிசோதனைகளையும் தலைகீழ் மாற்றங்களையும் டாக்டர் வெங்கடசாமி நிகழ்த்தினார். தேசிய அளவிலும், உலக அளவிலும் அறியப்பட்ட கண் மருத்துவரானார். தனது சேவைக்காக பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.

அரவிந்த் - ஒரு லட்சிய சமூகம்

1976-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தனது லட்சியக் கனவுகளை விரிவுபடுத்திச் செயல்படுத்த உறுதி ஏற்றார். தனது வீட்டில் 11 படுக்கைகள் கொண்ட சிறிய கண் மருத்துவமனையைத் தொடங்கினார். அவரிடம் பெரிய அளவில் மூலதனம் ஏதுமில்லை. அவரது மனஉறுதியும் அவரிடத்தில் குடும்பத்தினர் காட்டிய அளவில்லாத அன்புமே அவரின் மூலதனங்கள்.

‘நமது மருத்துவமனை லட்சக்கணக்கானவர்களுக்கு உலகத் தரத்தில் இலவசமாகக் கண் மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும்’ என அவர் சொல்வதை அவரது சகோதர சகோதரிகள் நம்ப முடியாது வியந்து கேட்டுக்கொண்டனர். தங்களது மூத்த சகோதரர் சொன்னது அவர்களுக்கு வேதவாக்காக இருந்தது. கிராமக் குடும்பத்தின் இயல்பான உயர்பண்பு அது. அவரின் உடன்பிறப்புக்களான ஜி. சீனிவாசன், ஜானகி ராமசாமி, நாச்சியார், நம்பெருமாள்சாமி ஆகியோர் அவரது பணிக்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். லட்சியம் கலந்த உறவுகள் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் அவர்களுடைய பணி மகத்தானது. அதன்பின்னர் அரவிந்த் மருத்துவமனை மகத்தான சக்தியாக எழுந்தது வரலாறு. அதன் வளர்ச்சி குறித்து எத்தனையோ நூல்களும் ஆய்வுகளும் உலகெங்கும் வெளிவந்துவிட்டன.

உலகளாவிய தாக்கம்

டாக்டர் வெங்கடசாமியின் பணிகளின் தாக்கம் இந்தியாவுடன் நின்றுவிடவில்லை. உலகெங்கும் அது பரவியுள்ளது. 1992-ம் ஆண்டு அவர் தொடங்கிய லயன் அரவிந்த் சர்வதேச சமூகக் கண் மருத்துவ நிறுவனம் (LAICO) ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய கண் மருத்துவமனைகளைத் தொடங்குவதற்குப் பெரும் உதவிகளைச் செய்துவருகிறது. சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கு பயிற்சிபெற்றுள்ளனர். லைகோ-வின் உதவியுடன் சுமார் 400 கண் மருத்துவமனைகள் முப்பது நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகளின் மருத்துவமனைகள், முதல் உலக நாடுகளின் மருத்துவமனைகளை விஞ்ச முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய தகுதியை லைகோ வழங்கிவருகிறது.

டாக்டர் வெங்கடசாமி தொடங்கிய ‘ஆரோ லேப்’ மூன்றாம் உலக நாடுகளுக்குச் செய்த பணி வியக்கத்தக்கது. கண் அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உள்விழி லென்ஸ்களை சர்வதேச வணிக நிறுவனங்கள் எட்டாத விலையில் விற்றுவந்தன. ‘ஆரோ லேப்’ அதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. எல்லோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் மிகச் சிறந்த லென்ஸ்களை ‘ஆரோ லேப்’ தயார் செய்து உலகெங்கும் அனுப்பிவருகிறது.

ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு போன்ற பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சிக் களமாகவும், ஆய்வுக் களமாகவும் அரவிந்த் திகழ்கிறது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பயிற்சிபெறுவதற்காக அரவிந்த் மருத்துவ நிறுவனத்துக்கு மருத்துவர்கள் வருகின்றனர். சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை இதழ், அரவிந்த் மருத்துவமனையின் சேவையை 21-வது நூற்றாண்டின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருக்கிறது.

2006-ம் ஆண்டில் டாக்டர் வெங்கடசாமி மறைந்தபோதிலும், அவரது அரிய உழைப்பால் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளியவர்கள் தொடர்ந்து பயன்பெற்றுவருகின்றனர். உலகக் கண் மருத்துவத் துறைக்கே வெளிச்சம் பாய்ச்சும் ஒளிவிளக்காக டாக்டர் வெங்கடசாமி திகழ்கிறார்!

கட்டுரையாளர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: raguevents@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்