ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் என் நண்பன் என்னைப் பார்க்க வந்தபோது, ‘இந்தியாவில்தான் டெங்கு மிக அதிகம். வெளிநாடுகளில் அவ்வளவாக இந்த நோய் இல்லை’ என்று சொன்னான்? என்ன காரணம்? நம் நாட்டிலும் அதுபோலத் தடுக்க முடியாதா? ஏனென்றால், சமீபத்தில் எனக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து ரத்தத் தட்டணுக்கள் செலுத்தும் அளவுக்கு நோய் தீவிரமாகி மீண்டேன். பொதுவாக, அம்மை நோய் போன்ற வைரஸ் நோய்கள் ஒருமுறை வந்துவிட்டால். அதே நபருக்கு மறுபடியும் அது தாக்காது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். டெங்குவும் வைரஸ் நோய்தானே! இது மீண்டும் எனக்கு வர வாய்ப்புள்ளதா?
- தேவதாஸ், மின்னஞ்சல்
பொதுவாக, அம்மை போன்ற வைரஸ் நோய்கள் தாக்கும்போது, ஏதாவது ஒரு வகைக் கிருமி மூலம் மட்டுமே நோய் வரும். அதனால், ஒருமுறை அந்த நோய் வந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைத்துவிடுவதால், மறுபடியும் அதே நோய் ஏற்படுவதில்லை. ஆனால், டெங்கு அப்படியில்லை.
டெங்குக் கிருமிகள் மொத்தம் நான்கு வகை. இவற்றில் பல துணை வகைகளும் உண்டு. எந்த வகையினாலும் டெங்கு வரலாம். முதலில் எந்த வகை டெங்குக் கிருமியால் நோய் ஏற்பட்டதோ அந்த வகைக் கிருமிக்கு மட்டுமே டெங்கு சரியானதும், நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மற்ற மூன்று வகைக் கிருமிகளுக்கு அந்த எதிர்ப்பாற்றல் கிடைக்காது. ஆகவே, அடுத்தமுறை அதே நபருக்கு மற்ற மூன்று வகைக் கிருமிகளால் டெங்கு வரும் சாத்தியம் உள்ளது. எனவே, ஒருமுறை டெங்கு வந்தவர்களும் மற்றவர்களைப் போல், கொசுக் கடியிலிருத்து தப்பிக்கத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டால் மீண்டும் டெங்கு வராமல் தப்பிக்கலாம்.
இரண்டாம் முறை டெங்கு வந்தால் ஆபத்தும் அதிகம். உடனடியாக, மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். ஒருவருக்கு டெங்கு வந்திருப்பது, முதல் முறையா, இரண்டாம் முறையா எனத் தெரிந்துகொள்ளவும் ரத்தப் பரிசோதனை உள்ளது.
ரத்தத்தில் ஐ.ஜி.எம். மற்றும் ஐ.ஜி.ஜி. எதிர் அணுக்கள் (IgM and IgG antibodies) இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்த்தால் அது தெரிந்துவிடும். காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாம் நாளில் MAC – ELISA, IgG ELISA எனும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பயனாளிக்கு டெங்கு பாதிப்பு முதல் முறையாக இருந்தால், ஐ.ஜி.எம். அளவு அதிகமாக இருக்கும். ஐ.ஜி.ஜி. அளவு குறைவாக இருக்கும். டெங்கு பாதிப்பு இரண்டாவது முறையாக இருந்தால், ஐ.ஜி.எம். அளவு குறைவாக இருக்கும். ஐ.ஜி.ஜி. அளவு அதிகமாக இருக்கும்.
இப்போது உங்கள் துணைக் கேள்விக்கு வருவோம்.
பொருளாதாரம் மேம்பட்ட அயல்நாடுகளில் டெங்கு அவ்வளவாக இல்லை என்பது உண்மை. இதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை, கொசு உற்பத்திக்கு அவ்வளவாக உதவுவதில்லை. அடுத்த காரணம் அங்குள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையிலும் கழிவுநீரை அகற்றுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். கொசு வளர்வதைத் தடுக்கப் பெரும்பாலான நகரங்களில் பாதாளச் சாக்கடை உதவுகிறது. அதை நன்றாகப் பராமரிக்கின்றனர் என்பதும் மிக முக்கியமானது.
அடுத்து வீடு, அலுவலகம், ஆலைகள், உணவு விடுதிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வெளியேற்றுவதற்கும், அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் முறையான அமைப்புகளை வைத்துள்ளனர். இதன் பலனால் கொசு உற்பத்தி குறைந்துவிடுகிறது. அயல் நாடுகளில் கொசு ஒழிப்புக்கு நிரந்தரத் திட்டங்களை வகுத்துள்ளனர்.
இந்தியாவிலோ கொசுக்கள் வளர இடம் கொடுத்துவிட்டு, அதை ஒழிப்பதற்கு மருந்து தெளித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’ (Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக்களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.
அந்நாடுகளில் டெங்கு வருவதற்குக் கொசு உற்பத்தி காரணமல்ல. சுற்றுலாப் பயணிகள் டெங்குவைச் சுமந்துவந்து அங்கு பரப்பிவிடுகின்றனர் என்பதுதான் முக்கியக் காரணம்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago