வைணவத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய ராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு இது. திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தில் அமர்ந்து ‘நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்’ என்று அவர் சொல்வதற்கேற்ப உலகத்துக்கெல்லாம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். (ஆனந்த ஜோதி இணைப்பில் வரவேண்டிய கட்டுரை தவறுதலாக இங்கே பிரசுரமாகி விட்டதோ என அவசரப்பட்டு சந்தேகப்பட வேண்டாம்).
தெரிந்தோ தெரியாமலோ அடியேனுக்கும் அவரது பெயரை வைத்திருப்பதால் நானும் ஒரு மந்திர வார்த்தையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். கோபுரம், செல்போன் டவர் போன்ற உயரமான இடங்களின் மீது ஏறி இதைச் சொல்லலாம்தான். ஆனால், பாவமாக இருக்கும். என்னையும் யாரோ போராட்டக்காரர் எனக் காவல்துறையினர் கருதிவிடும் ஆபத்து இருக்கிறதே. அதனால் எழுதியே காட்டிவிடுகிறேன். அவர் சொன்னது எட்டெழுத்து என்றால், நான் சொல்லப்போவது அதில் பாதிதான். நான்கெழுத்து மந்திரம்!!
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என வாத்தியார் பாடுவதுபோல் ‘நான்கெழுத்தில் நம் நலமிருக்கும்’ எனக் கூறலாம். குறிப்பாக மனநலம்.
பிரிக்க முடியாதது
இந்த இடத்தில் மனநலம் பற்றிச் சில வரிகள் கூற வேண்டும். மனம் என்று சொல்லும்போதே, அது ஏதோ உடலைவிட்டு ஓரடி தள்ளியுள்ள விஷயம் எனச் சிலர் நினைக்கக்கூடும். காதலர்கள் வேண்டுமானால் தங்கள் மனதை எங்கோ தொலைத்துவிட்டேன் எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் உடலையும் மனதையும் பிரிக்கவே முடியாது. மனம் நமது மூளையின் இயக்கம். மூளை சிவமென்றால் மனம் சக்தி. ஆகவே, மனநலம் என்பதில் சந்தேகமில்லாமல் உடல்நலமும் அடங்கியுள்ளது. அதனால்தான் சிவாஜிகணேசனைப் பார்த்துப் பத்மினி ‘உடலும் உள்ளமும் நலம்தானா?’ எனக் கேட்டார்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனநலம் என்ற வார்த்தை தமிழில் ரெண்டாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறது என்பது வியப்பானதே! ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்கிறார் திருவள்ளுவர். ஆக்கம் என்றால் செல்வம். தென் தமிழகத்தில் ‘ஆக்கங்கெட்டவனே’ என்பது பிரபல வசைச்சொல். சிறந்த செல்வமான மனநலனைத் தருவதற்கு முக்கியமாக நான் கருதுவது ஒரு நான்கெழுத்த்து மந்திரத்தை!
அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உடல் - மன நலம் என்ற மாளிகையின் திறவுகோலான அந்த நான்கெழுத்துச் சொல் எது?
மந்திரச்சொல்
‘சாப்பாடு’ எனப் பதிலளிக்கும் அவசரக் குடுக்கைகளுக்கு – சாரி, தவறான பதில்!. இருப்பினும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி ‘சாப்பாட்டு ராமன்/ராமி‘ என்கிற பட்டம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ‘லஞ்சம்’ ‘டாஸ்மாக்’ என்றெல்லாம் பதிலளிப்பவர்கள் முறையே இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியும் கருடபுராணத்தின்படியும் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழ்த் திரைப்படங்களில் வரும் காவல்துறையினரின் வருகை போல் அல்லாமல் முதலிலேயே அதைச் சொல்லிவிடுகிறேன். அந்த மந்திரச்சொல் –சமநிலை!
நோயா, பாதிப்பா?
மனநோய்கள் என நாம் தமிழில் அழைத்தாலும் ஆங்கிலத்தில் நோய்களைக் குறித்துப் பயன்படுத்தும் டிசீஸ் (Disease) என்கிற வார்த்தையை, மனநல பாதிப்புகளுக்குப் பயன்படுத்துவதில்லை. சமநிலைச் சீர்குலைவு அல்லது ஒழுங்கின்மை என்ற அர்த்தத்தில் டிஸ்ஆர்டர் (Disorder) என்றே அழைக்கின்றனர். காரணம் நோய்கள் அவற்றை உருவாக்கும் காரணிகளால் அறியப்படுகின்றன. உதாரணம், டெங்கு என்றால் கொசுவால் பரவும் ஒரு குறிப்பிட்ட வைரஸால் ஏற்படும் நோய்.
ஆனால், மனநல பாதிப்புகளைப் பொறுத்தவரை காரணங்களைவிட ஒருவருடைய செயல்பாடுகளில், உணர்வுகளில், சிந்தனைகளில் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக்கொண்டே, ஒருவருக்கு இருக்கும் மனநல பாதிப்பு வகைப்படுத்தப்படுகிறது. விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.
வாழ்க்கையின் அத்தியாவசியம்
சைக்கிள் ஓட்டுவதற்குச் சமநிலை எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுவதற்கும் சமநிலை முக்கியம். சீனாவின் ‘யின்-யாங்க்’ தத்துவம், எல்லா விஷயங்களுமே எதிர்மறையான இரு துருவங்களின் கலவை என்கிறது. அச்சம் X அஞ்சாமை, பணிவு x துணிவு, கருணை x கண்டிப்பு, உழைப்பு x ஓய்வு, செலவழித்தல் x சிக்கனம் என பல விஷயங்களில் இரண்டு எதிர்மறையான விஷயங்களுக்கு நடுவே நாம் பயணித்துவருகிறோம்.
இந்தச் சமநிலை சீர்குலைந்து சாய்ந்துவிட்டால் நாம் ‘தடாலென்று‘ கீழே விழுந்துவிடுவோம். ‘மிகினும் குறையினும் நோய்செய்யும்’ எனக் குறள் சொல்வதுபோல், சமையலில் உப்பைப் போல், இசையின் சுருதியைப் போல் நமக்கும் சமநிலை அவசியம். ஆரோக்கிய பாதையில் அந்தச் சமநிலையைத் தேடி இணைந்து பயணிப்போம்.
(அடுத்த வாரம்: மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?)
தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago