7 வயது ஃபேஷன் டிசைனர்!

By திலகா

அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸ் அலெக்சாண்டர் ஃபேஷன் டிசைனராக இருக்கிறார். 7 வயது மாக்ஸை ‘குழந்தை மேதை’ என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள். 4 வயதிலிருந்தே ஆடைகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார் மாக்ஸ். உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஃபேஷன் டிசைனர் கூச்சியோ கூச்சியின் மறுபிறவி என்று சொல்லிக்கொள்கிறார் மாக்ஸ். 7 வயது அமெரிக்கக் குழந்தைகளுக்கு கூச்சியோ கூச்சியைப் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால், மாக்ஸுக்கு எப்படி அவரைத் தெரிந்திருக்கிறது என்று அவரது பெற்றோர் ஆச்சரியப்படுகிறார்கள்.

மாக்ஸின் அம்மா மேடிசன், “2021 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, மாக்ஸ் தனக்குப் பெண்கள் ஆடைகளை வடிவமைப்பதில் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தான். ஒரு 4 வயது குழந்தை ஃபேஷன் டிசைன் பற்றியெல்லாம் எப்படிப் பேசுகிறது என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு ஒரு பொம்மை வேண்டும் என்று கேட்டான். குழந்தை ஏதோ விளையாட்டாகக் கேட்கிறான் என்று நினைத்தோம். அவன் தொடர்ந்து கேட்ட பிறகு, ஒரு ஆள் உயர பொம்மையை வாங்கிக் கொடுத்தோம். என்னிடமிருந்து தையல் இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று மிக வேகமாகக் கற்றுக்கொண்டான். அவன் ஆடைகளை உருவாக்க ஆரம்பித்த பிறகு எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. மாக்ஸின் தாத்தா, பாட்டி ஆடை வடிவமைப்பு தொழிலில் இருந்ததால், அந்த மரபணு இவனுக்கும் இருக்கிறது என்றுதான் நினைக்கிறோம். மற்றபடி மாக்ஸ் சொல்வது போல இவன் கூச்சியோ குச்சியின் மறுபிறவி என்பதை நாங்கள் ஏற்கவில்லை” என்கிறார்.

முதலில் மாக்ஸின் பெற்றோர் அவரது ஃபேஷன் மீதான ஆர்வம் ஒரு தற்காலிக விருப்பம் என்றே நினைத்தனர். ஆனால், மாக்ஸுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஃபேஷன் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாக்ஸ் வடிவமைத்த நூற்றுக்கும் மேற்பட்ட டிசைன்களுக்கு திரைக் கலைஞர் ஷரோன் ஸ்டோன் உள்பட பல பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் உலகம் முழுவதும் தன்னுடைய ஆடை வடிவமைப்புகள் புகழ்பெறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மாக்ஸ் அலெக்சாண்டர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE