செவிலியர் தினமும் நைட்டிங்கேலும்

By திலகா

ஒவ்வோர் ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் நாள் கொண்டாடப்படுகிறது. 182, மே 12 அன்று இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகரில் நைட்டிங்கேல் பிறந்தார். அவரைச் சிறப்பிக்கும் வகையில் செவிலியர் நாள் கொண்டாடப்படுகிறது. இது நைட்டிங்கேல் பிறந்து 203வது ஆண்டு.


வசதியான குடும்பத்தில் பிறந்த நைட்டிங்கேல் 16 வயதில் தங்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஏழைகளாகவும் நோயாளிகளாகவும் ஏன் இருக்கிறார்கள் என்று யோசித்தார். மனிதர்களை நோயிலிருந்து காப்பது தன்னுடைய கடமை என்று கருதி, செவிலியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.


செவிலியர் படிப்பை முடித்து, 1850ஆம் ஆண்டு லண்டன் மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்தார். ஓராண்டுக்குள் அங்கு ஏற்பட்ட காலரா மரணங்களுக்கு, சுகாதாரமின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்தார்.

1854ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கும் ஐரோப்பியக் கூட்டணிக்கும் இடையே க்ரீமியா தீவில் போர் நடைபெற்றது. போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 38 செவிலியர்களுடன் சென்றார் நைட்டிங்கேல். அங்கே போரில் காயமடைந்து மரணம் அடைந்தவர்களைவிட, சுகாதாரம் இல்லாததால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கண்டார். சிகிச்சை அளிக்கும் மையத்தில் தூய்மையைக் கொண்டு வந்தார். சத்தான உணவை அளித்தார். இரவும் பகலும் கண்விழித்து நோயாளிகளைக் கவனித்துக்கொண்டதால், ‘கைவிளக்கு ஏந்திய காரிகை’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.


லண்டன் திரும்பிய நைட்டிங்கேல், புள்ளிவிவரங்களுடன் தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் மூலம் ‘மருத்துவப் புள்ளியியல் துறை’ என்ற புதிய பிரிவு உருவானது. எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிகள் குறித்த தகவல்களை ஒரே மாதிரியான படிவத்தில் நிரப்பும்படி ஏற்பாடு செய்தார். இது பின்னர் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் புள்ளியியல் சொஸைட்டியின் தலைவர் பொறுப்பு நைட்டிங்கேலுக்கு வழங்கப்பட்டது.

நவீன செவிலியர் துறையை உருவாக்கிய, மருத்துவ மேலாண்மையியலின் முன்னோடியாக இருந்த நைட்டிங்கேலின் புத்தகங்கள் இன்றும் செவிலியர் படிப்புகளில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE