திடீரென்று நடுவழியில் அந்தப் படகு தடுமாற ஆரம்பித்துவிட்டது. பெரிய பெரிய அலைகள். நல்ல மழை. இடியும் மின்னலும் போட்டிப் போட்டுக்கொண்டு அச்சுறுத்திக்கொண்டிருந்தன. படகில் இருந்த எல்லோருமே பயந்துவிட்டார்கள். ஒருவேளை படகு கவிழ்ந்தால் என்னாகும்? கடலில் என்னென்ன ஆபத்தான விலங்குகள் இருக்குமோ? சுறா மீன் கடித்துச் சாப்பிட்டுவிட்டால் என்னாவது? கடல் பூதம் என்றொன்று இருப்பதாகச் சொல்கிறார்களே, அது வந்து விழுங்கிவிட்டால் என்ன செய்வது?
அந்தப் படகில் இருந்த அலெக்சாண்டர் ஹம்போல்ட்டும் கவலையோடுதான் இருந்தார். ஆனால் மற்றவர்களுக்கும் அவருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. ஹம்போல்ட் அச்சப்பட்டது தன் உயிரைப் பற்றியல்ல, தன்னிடமுள்ள பெட்டிகளைப் பற்றி. ‘எப்படியாவது இந்தப் பெட்டிகளைக் கரை சேர்த்துவிட்டால் போதும்’ என்று நொடிக்கொருமுறை புலம்பிக்கொண்டிருந்தார் அவர். சுற்றியிருந்தவர்கள்கூட ஒரு கணம் தங்கள் கவலையை மறந்துவிட்டு அவரைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள்.
ஹம்போல்ட் தன்னைச் சுற்றிலும் கிட்டத்தட்ட இருபதுக்கும் அதிகமான பெட்டிகளைக் குவித்து வைத்திருந்தார். எல்லாமே மூடப்பட்டிருந்தன. ஒருவர் கேட்டார். “ஐயா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அந்தப் பெட்டிகளில் அப்படி என்ன வைத்திருக்கிறீர்கள்?” ஹம்போல்ட் தன் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொன்னார். “நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். மெக்சிகோ, வெனிசூலா என்று பல நாடுகளில் சுற்றித் திரிந்து பல விலைமதிக்க முடியாத பொருள்களைச் சேகரித்திருக்கிறேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை, இந்தப் பெட்டிகள் பத்திரமாக இருக்கவேண்டும்.”
கேள்வி கேட்டவருக்கு இப்போது சுத்தமாக கவலை போய்விட்டது. அப்படியென்ன விலை மதிக்க முடியாத பொருள் அது? மெக்சிகோவில் நிறைய தங்கம் கிடைப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். வெனிசூலாவில் ஒருவேளை வைரங்கள் கிடைத்திருக்குமோ? பத்து பெட்டி தங்கம், பத்து பெட்டி வைரம் இருக்குமா? அப்பப்பா, இவர் ஜெர்மானிய அரசரைவிடப் பெரிய செல்வந்தராகத்தான் இருக்கவேண்டும். தயங்கித் தயங்கி கேட்டார். ”ஐயா, ஒரே ஒரு முறை ஏதேனும் ஒரு பெட்டியைத் திறந்து காட்டமுடியுமா?”
ஹம்போல்ட்டின் முகம் மலர்ந்தது. தாராளமாக, இப்படி வாருங்கள் என்று சொல்லியபடியே முதல் பெட்டியைத் திறந்தார். அருகில் வந்து ஆசையாகக் குனிந்து பார்த்த அந்த நபர் அதிர்ந்துவிட்டார். பெட்டி முழுக்க குச்சிகள், கம்புகள், இலைகள், மரப்பட்டைகள். அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு கேட்டார். இரண்டாவது பெட்டியில் என்ன வைத்திருக்கிறீர்கள்? இதோ காட்டுகிறேன் என்று அதையும் திறந்தார் ஹம்போல்ட். உள்ளே முழுக்க முழுக்க எலும்புகள்.
பிறகு மூன்றாவதையும் திறந்து காட்டினார். முழுக்க கண்ணாடி பாட்டில்கள். உள்ளே வண்ண ரசாயனங்களில் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள், கடல் பிராணிகள் ஆகியவை மிதந்துகொண்டிருந்தன. உயிருள்ள பாம்புகூட இருக்கிறது பார்க்கிறீர்களா என்று நான்காவது பெட்டியை அவர் திறப்பதற்குள் கேள்வி கேட்டவர் பாய்ந்து ஓடிவிட்டார். படகு நல்லபடியாக கரை ஒதுங்கிய பிறகும் அவர் ஹம்போல்ட் பக்கம் திரும்பவேயில்லை. ஓடியே போய்விட்டார்.
1799-ம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகள் தென் அமெரிக்காவைச் சுற்றிவந்தார் ஹம்போல்ட். அப்போது அவரைச் சந்தித்த பலரும் குழம்பிப் போனார்கள். சுமார் முப்பது வயது இருக்கலாம். பார்ப்பதற்குப் பெரிய இடத்து ஆள் போல இருக்கிறார். படித்தவர் போலவும் தோற்றமளிக்கிறார். ஆனால் ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கிறார்? யாராவது சட்டைப் பையில் கல்லையும் மண்ணையும் செடி கொடிகளையும் போட்டு வைத்திருப்பார்களா? யாராவது காய்ந்து போன இலைகளையும் பூக்களையும் மரப்பட்டைகளையும் நாள் முழுக்கத் தேடித் தேடிச் சேகரிப்பார்களா? மிருங்களின் எலும்புகளையும் பதப்படுத்தப்பட்ட பூச்சிகளையும் தவளைகளின் கால்களையும் யாராவது விலை மதிக்க முடியாத செல்வம் என்று அழைப்பார்களா?
குழந்தையாக இருந்ததிலிருந்து ஹம்போல்டுக்கு இவைதான் செல்வம். ஒரு மலையைப் பார்த்தால் அதில் ஏறிவிடவேண்டும். எரிமலை என்றால் அது வெடிக்கும்போது பக்கத்தில் இருந்து பார்க்கவேண்டும். நீர் வீழ்ச்சி என்றால் அது தொடங்கும் இடத்துக்குப் போயாக வேண்டும். தவளையோ மானோ பட்டாம்பூச்சியோ எது கிடைத்தாலும் பிடித்து வைத்து ஆராயவேண்டும். கல், மண், குச்சி, கம்பு, பூச்சி, ஈ, கொசு, பாம்பு, சிங்கம், மீன் எல்லாமே முக்கியம். எல்லாவற்றையும் நாம் ஆராயவேண்டும். கிண்டல் அடிப்பவர்களையும் சிரிப்பவர்களையும் நினைத்து கவலைப்படாமல் தன் ஆய்வை இறுதிவரைத் தொடர்ந்துகொண்டிருந்தார் ஹம்போல்ட்.
சரி, அப்படி என்ன கண்டுபிடித்தார் அவர்? மிக எளிமையான ஓர் உண்மையை. ‘பூ, மலை, அருவி, வெயில், மழை, மேகம், கடல், பட்டாம்பூச்சி, நத்தை, யானை, நீங்கள், நான் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இயற்கை. எல்லா உயிர்களும் சமமானவை. எல்லாப் பொருள்களும் மதிப்பு மிக்கவை. யாருக்கும் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. இயற்கையை மதிக்கவேண்டும். ரசிக்கவேண்டும். இயற்கையிடமிருந்து நிறைய கற்கவேண்டும்.’
நீங்கள் தயாரா? அப்படியானால் ஒரு பெட்டியை எடுத்து இப்போதே நிரப்ப ஆரம்பித்துவிடுங்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago