அ
ழுத புள்ள சிரிக்குதாம்!
கழுதைப்பாலைக் குடிச்சுதாம்
- இந்தப் பாட்டை அம்மா பாடி பல தடவை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அழுவுற குழந்தைக்காகக் காத்திருப்பதுபோல பாட ஆரம்பிப்பாங்க. இன்னும் இன்னும் அழுவுற மாதிரி சீண்டுவாங்க. பார்க்குற நமக்கு அம்மா மேல கோவமா வரும். அடுத்த கொஞ்ச நேரத்துல புள்ளை சிரிக்கும். சிரிப்பு லேசா ஆரம்பிச்சதும் அம்மா பாட ஆரம்பிச்சிடுவாங்க. சில நேரங்களில், கூட இருக்கிறவுங்களையும் பின் பாட்டுக்குக் கூப்பிட்டுக்குவாங்க. கைய வேற தட்டிக்கிட்டு பாடுனா புள்ளைத் திரும்ப அழுவ ஆரம்பிச்சிடும்.
பொய்யழுக, புளுவழுக, கன்னம் சிரிக்குது, காது சிரிக்குது இப்படி அடுத்தடுத்து பேசி சிரிக்க வச்சிடுவாங்க. சில நேரம் அம்மாவுக்குக் குட்டிப் புள்ளைங்களைக் கொஞ்சுற மாதிரியே தூங்க வைக்கிறது, சோறு ஊட்டுறது, வம்பிழுத்து அழ வைக்கிறதுன்னு எதையாவது செய்வாங்க. ரொம்பக் குட்டிப் புள்ளையா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு உம்ம்ம்ம்ம்ன்னு அழுவுறமாதிரி நடிப்பாங்க. குழந்தை அம்மாவோட கையை எடுத்ததும் ‘ப்ப்பபாஆஆ’ன்னு கத்தி பயமுறுத்துவாங்க. அம்மா அப்படிச் செய்யும்போது சில பிள்ளைகள் பயப்படும், சில பிள்ளைகள் அழும். அழுதா அம்மாவுக்கு இன்னும் ஜாலி.
நான் அழுத கதையை அம்மா சொல்லும்பொழுது கேக்க நல்லா இருக்கும். “நீ அழுததைப் பத்தி கதை கதையா சொல்லலாம். எம்மாஆஆஆன்னு வாயப் பொளந்து அழுதின்னா சங்கு ஊதுற மாதிரியே இருக்கும். அப்ப உனக்கு மூணு வயசு இருக்கும். சில நேரம் உனக்கு முன்னாடி உக்காந்து நீ அழுவுறதையே பார்ப்பேன். ஆஆன்னு பொளந்திருக்கும் வாய் வழியா என்ன தெரியுதுன்னு பார்ப்பேன். சாப்பிட்ட மூணு இட்லியா அது அப்டின்னு சொன்னா போதும் உன்னோட அழுகை இன்னும் பெருசா ஆகும்.
அது மட்டுமில்ல, காலை ஆட்டிக்கிட்டு மூச்சைப் புடிச்சிக்கிட்டு அழுவ. ரொம்ப குட்டிப் புள்ளையா இருக்கும்போது தடுப்பூசி போட்டப்ப, கீழ விழுந்தப்ப, மொட்ட அடிச்சப்ப இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம். நீ விசும்பி விசும்பி அழுவ. கண்ணுல இருந்து தண்ணி மாலை மாலையா கொட்டும். அம்மா உன்னைக் கட்டிப் புடிச்சிக்குவேன். உனக்கு புசுக்கு புசுக்குன்னு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குறதைப் பார்த்தா இழுப்பு வந்துடுமோன்னு பயமா இருக்கும்.
அடத்துக்கு அழும்போது இருக்குற ராகம், வலிக்கு அழும்போது இருக்காது”ன்னு அம்மா சொல்லி முடிச்சதும், “அம்மா நான் கோயில்ல தொலைஞ்சப்ப எப்படி அழுதேன்னு சொல்லுங்க. சைக்கிள்ல கால் மாட்டுனப்ப எப்படி அழுதேன்னு சொல்லுங்க”ன்னு கேட்பேன். அம்மா சொல்லும்பொழுது நான் சின்ன பிள்ளையா இருந்தது எனக்கே தெரியிற மாதிரி இருக்கும்.
அம்மா நான் எப்படி அழுதேன்னு மட்டும் சொல்ல மாட்டாங்க . யார் யார் எப்படி அழுவாங்கன்னு சேர்த்து சொல்வாங்க.
“அழுமூஞ்சி அஞ்சலைன்னு ஒருத்தி எங்க வீட்டுக்கிட்ட இருந்தாங்க. அவங்களுக்கு வயசு 40 ஆனாலும் அழுகை மட்டும் குறையல. அதுக்கேத்த மாதிரி அவங்க புருஷன் ஒரு குடிகாரன். ஒரு நாளில்லன்னா இன்னொரு நாள் சண்ட ஆரம்பிக்கும். ஏழு மணிக்கு ஆரம்பிக்கிற சண்ட அடி, அடுத்து அழுவன்னு முடியும். அய்யய்யோ காளியாத்தா, அம்மாடி மாரியாத்தா, என் தலையெழுத்தை என்ன சொல்லன்னு கதை சொல்லிக்கிட்டே அழுவாங்க. அந்தக் கதை தினம் நாங்க கேட்குற கதைதான். ஆனாலும் வேடிக்கை பார்ப்போம்.
எங்க வீட்டுக்குப் பக்கத்துல ‘சோ’வன்னா ராசுன்னு ஒருத்தன் இருந்தான். அவங்க அம்மா முந்தானையைப் புடிச்சிக்கிட்டு பின்னாடியே போவான். ஆறு வயசானாலும் அவனால அம்மாவ வுட்டுட்டுப் போக முடியல. அம்மா வேற எங்கயாவது போறதும் அவனுக்குப் புடிக்காது. அதுல என்னன்னா அவனுக்குப் பசிச்சிடும். அம்மா “சோ’ அப்டின்னு மொத எழுத்த சொல்லுவான். அடுத்து அம்மா “சோறு” அப்டின்னு நீட்டுவான். அப்புறம் “சோஓஓஓஓஓ று உ உ உ ..”ன்னு அழுவ ஆரம்ச்சிடுவான். அது சோறு சாப்பிடுற வரைக்கும் தொடரும்.”
அம்மா அழுத கதைய கேட்காமலா இருப்பேன் நான். கேட்டதுதான் தாமதம்.
“நான் என்ன மகாராணியா அழுவாம இருக்க? தினம் தினம் அழுத காலமெல்லாம் இருக்கு. கண்ணுல டபக்குன்னு தண்ணி கொட்டும். இவ என்ன தொட்டாச்சிணுங்கி மாதிரி முனுக்குங்குறதுக்குள்ள மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கான்னு சொல்லுவாங்க. இப்ப நீலி கண்ணீர் வடிக்கப் போறா பாருன்னு சொல்லுவாங்க. அது மாதிரி ஒரு வயசுல அடுத்து என்ன நடக்குதுன்னே புரியாது. எதுத்து பேச முடியாததுக்கு அழுவ வரும். பேச்சு எடுபடாததுக்கு அழுவ வரும். வெளிய போகக் கூடாதுன்னு சொல்லும்பொழுது கண்ணுல தண்ணியா கொட்டும்.
இந்தப் படிப்புதான் படிக்கணும்னு சொன்னப்ப அழுவ மட்டுமல்ல ஆர்ப்பாட்டமும் சேர்ந்துக்குச்சி. சாப்பிடாம அடம் பிடிச்சிப் பார்த்தேன். இந்த மாப்பிள்ளையத்தான் கட்டணும்னு சொன்னப்ப நான் அழுத அழுவ… சரி அதைவுடு. அழு அழுன்னு அழ வைக்கிறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு. அதைச் செய்யறதுதான் சரின்னு பேச ஆயிரம் ஆயிரமா மனுசங்க இருக்காங்க. அழும்போது கனமா இருந்த மனசு கரைஞ்சி ஓடுற மாதிரி இருக்கும். அந்த அழுகை மட்டும் இல்லாட்டி மனசு வெடிச்சிருக்குமோ என்னமோ.
அழுவாச்சி அழுவாச்சியா வந்துது அப்ப. கதறி கதறி அழுதேன். விசும்பி விசும்பி அழுதேன் தெரியுமா? தேம்பித் தேம்பி அழுதப்ப யாருக்கும் தெரியாம கண்ணீரா வடிச்சேன். கட்டுப்படுத்தவே முடியல…” - அம்மா இப்படி அதை எடுத்துப் பேசும்போது இப்ப நடக்குற மாதிரியா இருக்கும். “ம்ம்க்கும்.. அழுவையப் பத்தி சொல்லி முடிக்க முடியுமா என்ன? ஒவ்வொரு அழுவைக்கும் ஒரு கதை இருக்கு” அப்படிம்பாங்க. அம்மா சொல்றது அழுவுற மாதிரியே இருக்கும்.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago