ஒ
ளிச்சி வைக்கிறது, ஒளிஞ்சி விளையாடுறது மாதிரி ரகசியம் பேசுறதும் அம்மா வாழ்க்கையில் முக்கியமா இருந்திருக்காம். சின்ன புள்ளைல அத ‘குசுகுசு’ன்னு பேசுறதுன்னு சொல்லுவாங்களாம். அம்மா இப்பயும்கூட அதே வார்த்தையைத்தான் பயன்படுத்துவாங்க. "என்ன அங்க ‘குசு குசு’ன்னு பேசுறீங்க?" அப்படின்னு அடிக்கடி கேப்பாங்க. யாருன்னாலும் தைரியமா கேக்குறது மட்டுமல்ல அம்மாவுக்கு அது என்னன்னு தெரிஞ்சே ஆகணும். நடுவுல போய் நின்னு கதையென்னன்னு கேட்டுட்டுத்தான் அடுத்த வேலை. அம்மா இந்த மாதிரி பண்றது பலருக்குச் சங்கடமா இருக்கும். அம்மாவுக்கு அதைப் பத்தி கவலை ஒண்ணுமிருக்காது.
அம்மாவுக்கு மட்டும் ரகசியம் இல்லையா என்ன? எத்தனை தடவ, "நீ அங்க போயேன்" அப்டின்னுட்டுப் பேசுவாங்க. அது மட்டுமல்ல குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்தவங்க திடீர்னு சத்தமா பேசிக்குவாங்க. ரகசியம் முடிஞ்சிடுச்சாம். அம்மாகிட்ட எப்பவாவது என்ன பேசுனீங்கன்னு கேப்பேன். "அதுவா..." அப்டின்னு ஆரம்பிச்சி யோசிப்பாங்க. அதுலயே ஏதோ கதைவிடப் போறங்கன்னு தெரியும். "அது வந்து உனக்கும் எனக்கும் ரகசியம் இருக்குல்ல. அந்த மாதிரி ஒண்ணு, அவுங்ககிட்ட யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு நான் ப்ராமிஸ் பண்ணிட்டேன். அதுனால உட்டுடு" அப்படிம்பாங்க.
"அம்மா என்னை மட்டும் ஒளிவு மறைவு இல்லாம சொல்லச் சொல்றீங்க, நீங்க மட்டும் என்னவாம்?" -அப்படின்னு கேப்பேன். இங்க வான்னு கூப்டுவாங்க. "இன்னைக்கு நீ பள்ளிக்கூடத்துல ரகசியம் பேசினியா இல்லையா?"ன்னு கேட்பாங்க. யோசிச்சிட்டு ஒண்ணுதான் பேசுனேன்னு சொல்லுவேன். சொல்லும்போதே எனக்கு வகுப்பில் மதனும் மாலாவும் பேசிக்கிட்டிருந்ததைப் பத்தி, "பாத்தியா ஜோடி சேர்ந்துடுச்சி…"ன்னு சொன்னது நினைவுக்கு வந்தது. முகத்தைப் பார்த்துவிட்ட அம்மா, "என்ன யாரைப் பத்தியாவது கோள் சொன்னியா?"ன்னு கேட்டாங்க. அம்மாகிட்ட மாட்டிகிட்ட மாதிரியே இருந்துச்சு.
"நாங்க சின்னப் புள்ளையா இருந்தப்ப பேசுன ரகசியத்தைக் கேட்டன்னா, அடேயப்பா அப்படிம்பாங்க. ஆமா சும்மனாச்சுக்கும் யார் முன்னாடியாவது காதுல போயி குசுகுசுன்னு பேசுவோம். பாக்குறவுங்க, என்னைப் பத்திதானே பேசுனன்னு கேப்பாங்க. இல்லையே, நாங்க வேற விஷயம் பேசுனோம்னு சொல்லுவோம்.
இன்னொரு பழக்கமும் எங்ககிட்ட இருந்துச்சு. "இங்க வாயேன். உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். யார்கிட்டேயும் சொல்லாத" அப்படின்னு சொல்லிட்டு, காதுக்குள்ள சொல்லுற ரகசியம் வழியாதபடி புனல் மாதிரி கையைக் கூப்பி மூடிக்கிட்டு ரகசியத்தைச் சொல்லத் தொடங்கணும். அது வந்து வசந்தா இருக்கால்ல, அவ என்ன செஞ்சா தெரியுமா? கூஊஊஊஊஊ குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்டின்னு காதுல கத்தணும். கத்துன கத்துல காது அடச்சி, கூசி, ஏமாந்துடுவாங்க. இந்த விளையாட்ட ஜாலியா விளையாடுவோம். ஆனா இந்த மாதிரி ஏமாந்தவங்க, நெஜ ரகசியம் பேச வரமாட்டாங்க.
மூணு பேர் பேசுற ரகசியம் இன்னும் ஜாலி. இப்ப நம்ம பேசுற விஷயம் யார்கிட்டயும் போகக்கூடாதுன்னு கையை நீட்டி சத்தியம் பண்ணிக்கிட்டுதான் தொடங்குவோம். அவ்ளோ முக்கியமான ரகசியம் என்னன்னா, அந்தப் புள்ளைய எனக்குப் புடிக்கவே இல்ல. அது ரொம்ப கெட்டபுள்ள. எப்டிச் சொல்றன்னா அன்னக்கி ஒரு நாள் யாரும் கிளாஸ்ல இல்லாதப்ப ராணி பையைத் தொறந்து ஏதோ செஞ்சுச்சின்னு சொல்லுவோம். இதெல்லாம்தான் ரகசியம்.
ரகசியத்த வேற பாஷைல பேசுற பழக்கமும் எங்ககிட்ட இருந்துச்சி. ‘க’ தமிழ் பேசுவோம். ‘க’ பாஷை புரியாதவுங்க, சின்ன புள்ளைங்க இருக்குற இடத்துல சத்தமா ரகசியம் பேச இது உதவும். கந கம் கம கநா கலு கபே கர் கம கட் கடு கம் கஇ கங் ககி கரு கந் கது கபோ கயி கப கழ கம் கப கறி கக் கக கலா கம்… இந்த மொழிய ஸ்பீடா பேச எங்களுக்குத் தெரியும். அதேபோல் பேசுறத புரிஞ்சிக்கவும் தெரியும்.
ரகசியத்துல மத்தவங்கள இழிவா பேசிக்குவோம். ஏய், அவ மூஞ்சைப் பாத்தியா அச்சு அசலா கொரங்கு மாதிரியே இருக்குன்னு ரகசியமா பேசிட்டுப் போய் பார்த்து ஆமான்னு அப்ரூவ் பண்ணிட்டு வருவோம். சார் இன்னக்கி…ன்னு ஆரம்பிச்சி ரகசியமா போய் கோள் சொல்லிட்டு வர்றதும் முக்கியமாதான் இருந்துச்சி. குசுகுசு பேசுறது மட்டுமல்ல, பொறணி பேசுறது, அடுத்தவனை மாட்டி விடுறது, நம்மளை யாராவது மாட்டி விட்டுடுவாங்களோன்னு பயப்புடுறதுன்னு இப்படிப் பல வகை உண்டு.
காதுல எதையாவது பேசுறது, மெதுவா பேசுறது, நைசா ஒரு பேப்பர்ல எழுதி காமிக்கிறது… இதல்லாம் எங்க வீட்ல சகஜம். பின்ன என்னன்னு நினைக்கிற. எங்க ஊர்ல அடி வாங்குனதைக்கூட சத்தமா சொல்லி அழுவ மாட்டாங்க. குசுகுசுன்னு சொல்லி சத்தம் வெளிய வராம அழுவுவாங்க. அந்த ரகசியத்த எடுத்துட்டுப் போயி அடுத்த ஆளுக்கு ரகசியமா சொல்லணும். ஊரே தெரிஞ்ச ரகசியத்தைப் பத்தி யாரும் எதுவும் செய்ய வேணாம்.
நாங்க சின்னப் புள்ளையா இருந்தப்ப ஒரு கதை நடந்தது. சுப்பையாவோட மனைவி ரொம்ப அழகு. அவருக்கு எப்பயும் பொண்டாட்டிய பத்திரமா வச்சிக்கணும். அதுக்காக வீட்டைப் பூட்டி அதுக்குள்ள அவுங்கள வுட்டுட்டு டீக்கடைக்குக் கதை பேச வருவாரு. தினம் வருவாரு. அவரை மாதிரி ஒரு கும்பலே கதை பேசும். திரும்பிப் போகும்போது சாவி தொலஞ்சி போச்சு. இருட்டிவேற போச்சி. சாவி தேடுறப்ப எல்லாரும், "சாவி உன் பொண்டாட்டிகிட்ட இருக்கும் பாரு" அப்டின்றாங்க. கடைசியா அவர் மனைவியை வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டு வந்தது ஊருக்கே தெரிஞ்சி போச்சு. தெரிஞ்சி போன கதைய குசுகுசுன்னு பேசுனாங்க பாரு, அப்பப்பா. எனக்கு ரகசியம்னாலே அதுதான் ஞாபகத்துக்கு வரும்" - இப்படி நிறைய சொல்லுவாங்க அம்மா.
நான் அம்மாகிட்ட சொல்றதுண்டு, "எனக்கு எது தெரியுமா ஞாபகம் இருக்கு? என்னங்கன்னு சத்தம் கேக்கும், அடுத்து எதுவுமே பேசிக்க மாட்டீங்க. கண்ணாலயும் சைகையிலும் பேசுவீங்க. உடனே அப்பாவும் எதையோ வாங்க வெளியே கிளம்பிடுவார். எப்படி இப்படிப் புரிஞ்சிக்க முடியும்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்".
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago