மு
கத்தில் சுவாசக் கருவியை மாட்டிக்கொண்டு கடலுக்குள் நீந்துபவர்களைப் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். விசேஷ கேமராவைக் கொண்டு அவர்கள் வண்ண வண்ண மீன்களைப் படம் எடுப்பார்கள். இது கண் கவர் காட்சியாக இருக்கும்.
கடலுக்குள் இறங்கிப் படம் எடுப்பது என்பது ஒரு தனிக் கலை. தொலைக்காட்சியில் நீங்கள் காணும் கடலடிக் காட்சிகள் பெரும்பாலும் முப்பது அடி ஆழத்தில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். அதுவும் நல்ல வெயில் அடிக்கும்போது எடுக்கப்பட்டிருக்கும்.
கடலுக்குள் ஒருவர் எவ்வளவு ஆழம் இறங்கலாம் என்பது குறித்துப் பல விதிமுறைகள் உள்ளன. மேலே வருவது தொடர்பாகவும் இப்படி விதிமுறைகள் உண்டு.
இவை ஒருபுறம் இருக்க, கடல் வாழ் விலங்குகளில் பெரும்பாலானவை 60 அடி (சுமார் 20 மீட்டர்) ஆழத்துக்குள்ளாகத்தான் வாழ்கின்றன. கடல் வாழ் தாவரங்களும் அப்படித்தான். ஒளிச்சேர்க்கை மூலம் வளருவதற்கு அவற்றுக்குச் சூரிய ஒளி தேவை. கடலில் 200 மீட்டர் ஆழம் வரைதான் வெளிச்சம் இருக்கும். அந்த ஆழத்துக்குக் கீழே மிக மங்கலான நீல நிற வெளிச்சம் சுமார் 1,000 மீட்டர் வரை இருக்கும். கடலில் அதற்குக் கீழான ஆழத்தில் வெளிச்சமே இருக்காது. எப்பொழுதும் இருட்டாக இருக்கும்.
அந்த ஆழத்தில் வசிக்கும் மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவு ஒரு பிரச்சினை. அவை ஒன்றை ஒன்று தாக்கி உண்ண வேண்டும். அல்லது மேலிருந்து உணவு வரும் என்று காத்திருக்க வேண்டும். கடலின் மேல் மட்ட்த்தில் வாழும் உயிரினங்கள் மரித்த பின்னர், அவற்றின் உடல்கள் கடலில் கீழ் நோக்கி இறங்கும். ஆழத்தில் வசிக்கும் உயிரினங்களுக்கு இவைதான் உணவு. அந்த அளவில் கடலில் எப்போதும் உணவு மழை இருந்துகொண்டே இருக்கும்.
ஆழ்கடலில் கும்மிருட்டில் வாழும் மீன்களிடம் ஒளியை உண்டாக்கும் உறுப்புகள் உண்டு. மீன்களின் உடலில் உள்ள சில வேதியியல் பொருட்கள் மூலம் இந்த ஒளி உண்டாக்கப்படுகிறது. இது மின்மினிப் பூச்சிகளின் ஒளி போன்றதே. இது உயிரிஒளி என்று அழைக்கப்படுகிறது. சில மீன்களுக்கு இந்த ஒளி உறுப்புகள் முன்புறத்தில் அமைந்திருக்கும். தூண்டில் மீன் இதற்கு உதாரணம். இந்த வகை மீனின் தலைப்புறத்தில் நீண்ட உறுப்பு உண்டு. இது முன்புறமாக நீட்டிக்கொண்டிருக்கும். இதன் முனையில் ஒளிரும் பகுதி அமைந்திருக்கும். தூண்டில் மீன்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. இவை சுமார் 3,000 அடி ஆழத்தில் வாழ்பவை.
ஒளி உமிழும் உறுப்புகளை இந்த மீன்கள் பெற்றுள்ளதற்கு இரண்டு காரணங்கள். என்னை நெருங்காதே என்று எச்சரிக்கை விடுப்பதாக இருக்கலாம். அல்லது அந்த ஒளியைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே வருகிற வேறு உயிரினங்களைப் பாய்ந்து பிடிப்பதற்கான உத்தி என்றும் கூறலாம்.
கும்மிருட்டில் ஆழ்கடலில் வாழும் மீன்கள் பொதுவாக விகாரமாகக் காட்சி அளிக்கின்றன. சில வகை தூண்டில் மீன்கள் பயங்கரமான உருவில் காணப்படும்.
ஒரு காலத்தில் ஆழ்கடலில் உயிரினமே இருக்காது என்று கருதப்பட்டது. பின்னர்தான் ஆழ்கடலிலும் பல வகை உயிரினங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் மரியானா டிரெஞ்சில் உள்ள சேலஞ்சர் மடு. இது பசிபிக் கடலில் உள்ளது. அங்கு கடல் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். 1960-ம் ஆண்டில் விசேஷ மூழ்குகலம் மூலம் இரு நிபுணர்கள் அந்த இடத்தில் இறங்கினர். மூழ்குகலத்தின் ஜன்னல் கண்ணாடி வழியே அவர்கள் பார்த்தபோது சில மீன்கள் தென்பட்டன. அந்த ஆழத்திலும் உயினங்கள் இருக்கின்றன என்பது தெரியவந்தது.
கடலில் மிக ஆழத்தில் வாழும் உயிரினங்கள் கடலின் மேல் மட்டத்துக்கு வருவது கிடையாது. அதேபோல கடலில் முப்பது அல்லது நாற்பது அடி ஆழத்தில் வாழும் மீன்கள் ஆழ்கடலுக்குள் இறங்குவது கிடையாது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago