அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்: கரோலின் ஹெர்ஷல் - ஸ்நேகா

By செய்திப்பிரிவு

* ஜெர்மனியில் 1750ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று கரோலின் ஹெர்ஷல் பிறந்தார்.

* கரோலினுக்குப் பத்து வயதானபோது டைபஸ் நோய் தாக்கியது. அதன் காரணமாக அவரது வளர்ச்சி குறைந்தது.

* அண்ணன் வில்லியம் ஹெர்ஷல், கரோலினைத் தன்னுடன் லண்டனுக்கு அழைத்துச் சென்று, இசை வகுப்பில் சேர்த்துவிட்டார்.

* இசையோடு பகுதி நேரமாக வானியல் ஆராய்ச்சியில் இறங்கினார் வில்லியம். தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ந்து, குறிப்புகள் எடுப்பார். அந்தக் குறிப்புகளை வரிசையாக எழுதும் பணியையும் டெலஸ்கோப்புக்கான கண்ணாடிகளை உருவாக்கும் பணியையும் விரும்பிச் செய்தார் கரோலின்.

* 1781ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷல் ‘யுரேனஸ்’ என்கிற புதிய கோளைக் கண்டுபிடித்தார். காலை உணவின்போது, வில்லியம் தன் அனுபவங்களை எல்லாம் கரோலினிடம் பகிர்ந்துகொள்வார். கரோலினின் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது. வில்லியம் ஆராய்ச்சி செய்யாதபோது, டெலஸ்கோப்பை எடுத்து வானை உற்று நோக்க ஆரம்பித்தார். அவருடைய ஆர்வத்தைக் கண்ட வில்லியம், தனியாக டெலஸ்கோப் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.

* அண்ணனுடன் பணிபுரிந்த அனுபவத்தில் கரோலினும் திறமையான வானியலாளராக மாறினார். 1782ஆம் ஆண்டில் இருந்து அவர் ஆராய்ச்சியைத் தனியாகப் பதிவு செய்தார்.

* 1780-1790 வரை 8 வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தார் கரோலின். மூன்றாம் ஜார்ஜ் மன்னர் கரோலினுக்குச் சம்பளம் கொடுத்தார். 18ஆம் நூற்றாண்டில் அறிவியலில் தன்னுடைய சொந்த பங்களிப்புக்காக ஊதியம் பெற்ற முதல் பெண் கரோலின் மட்டுமே!

* தொடர்ந்து ஏராளமான நெபுலாக்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார். அவற்றைப் பட்டியலிட்டு, தொகுத்தார். 1795இல் என்கே என்கிற வால் நட்சத்திரத்தை மீண்டும் கண்டறிந்தார். 1798இல் அவருடைய ஆராய்சிகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட்டது லண்டன் ராயல் அஸ்ட்ரானமிகல் சொசைட்டி.

* 1828இல் லண்டன் அஸ்ட்ரானமிகல் சொஸைட்டியின் தங்கப் பதக்கம் 75 வயது கரோலினுக்கு வழங்கப்பட்டது. அந்த சொஸைட்டியின் கௌரவ உறுப்பினர் பதவியும் கிடைத்தது.

* கணிதவியலாளர், வானவியலாளர், எழுத்தாளர், இசைக் கலைஞராகத் திகழ்ந்த கரோலின், 98 வயதில் மரணம் அடைந்தார். குறுங்கோள் ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE