“வடக்கே இமய மலையும், தெற்கே இந்தியப்பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிக்கடலும் இந்தியாவின் எல்லைகளாக உள்ளன. டீச்சர் மேப் வச்சி சொல்லிக்கொடுத்தாங்க. அப்ப கடல் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இருக்கும். அது அவ்வளவும் தண்ணியா இருக்கும். நாம இந்த ஊர்லேருந்து அடுத்த ஊருக்கு நடந்து போவோம். ஆனா, அடுத்த நாட்டுக்கு கடல்ல மெதந்து போகனும்”. இந்தப் பாடம் அம்மாவுக்கு வேற மாதிரி இருந்துச்சாம். அம்மா அவுங்க ஊர அப்படியே மேப் மாதிரி ஆக்கி சொல்லிப் பாத்தாங்களாம்.
பாப்பநாச்சி வயலுக்கு கிழக்கே ஊரல் மலை. மேற்கே கல்லொடைக்கிற குட்ட. தெற்கே கூத்தினிக் கம்மாய். வடக்கே புக்கினிக்கம்மாய். மூன்று புறம் நீராலும் ஒரு புறம் மலையாலும் சூழ்ந்தது அம்மா ஊர்தானாம். அதுமாதிரி அம்மாவுக்கு நல்லாத் தெரிஞ்ச ஊருக்கெல்லாம் எல்லை போட்டு பாத்தார்களாம். தண்ணி நிறைய இருந்தது அம்மா ஊர்லதான்.
மூணு குளங்களும் அம்மாவின் ஆதர்சம். தண்ணியில நடக்கலாம். தண்ணியில குளிக்கலாம். விளையாடலாம். தண்ணியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தண்ணி நிக்கும். ஓடும். பாடும். கண்ணாடி மாதிரி இருக்கும். கலர் கலரா மாறும். தண்ணி சுடும். தண்ணி ஜில்லுன்னு இருக்கும். எதையாவது போட்டால் உள்வாங்கும். தண்ணி மீனின் வீடு. தவளைக்கும். பாசி வளரும் இடம். அழுக்கைக் கழுவும் இடம். தண்ணி பூக்கும். காய்க்க வைக்கும். அம்மாவுக்கு தண்ணியைப் பத்தி இப்படி ஆயிரம் சொல்லத்தெரியும். சொல்லும்போது கேக்கணும். அதில் அழகும் ராகமும் உண்மையும் உணர்வுமாய் இருக்கும். அம்மா ரொம்ப அறிவாளி என்று தோன்றும். அம்மா நாடகத்தில் வசனம் பேசுவது போலவும் இருக்கும்.
“ஆகாயம் தண்ணியில தெரியும், தண்ணி ஆகாயத்துல (வானத்துல) தெரியும்” அம்மாகிட்ட கேட்ட இந்த விஷயத்த எப்ப தண்ணிய பார்த்தாலும் உத்து பார்ப்பேன். தண்ணி அம்மாவ மட்டுமல்ல எல்லாப் பிள்ளைகளையும் சுத்தி சுத்தி வரச் செய்யுமாம். அம்மா ஊர் கம்மாய்கள் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி இருக்குமாம். புயலன்னைக்கு ஒடச்சிகிட்டு ஊருக்குள்ள வந்துடும். வீட்டுக்குள்ளல்லாம் புகுந்துடும். மழை குறஞ்சதும் வடிஞ்சி ஓடிவிடும். பங்குனி, சித்திரைல தண்ணி சுவடே இல்லாம பாலைவனக்காடு மாதிரி இருக்கும்.
மழைத்தண்ணி கொஞ்சமாக் கடக்கும்போது ச்சளப்…ச்சளப்புன்னு சத்தம் கேக்குறமாதிரி நடக்குறது, ஒரு துண்ட எடுத்துட்டுப் போய் கம்மாக்குள்ள மீன் பிடிக்கிறது, சகதியில கால வச்சி ஒட்டி எடுத்து நடக்குறது, மண்ணுல கரச்ச தண்ணிய எடுத்து காபி வேணுமா காபின்னு கேக்குறது, இதல்லாம் அம்மாவோட குட்டி வயசாம்.
யாராவது கம்மாய்க்கு குளிக்கப்போனா கூட சேர்ந்து ஓடுறது. தண்ணியில தத்தக்கா புத்தக்கான்னு தவள நீச்சல் அடிக்கிறது. தனக்கும் எல்லாம் தெரியும்ங்கிறமாதிரி தண்ணியைக் குடிக்கிறது. மூச்சுத்தெணறி பயந்து வெளிய வர்ரது, துணி துவைக்கிற கல்ல புடிச்சிகிட்டு கால தப்பு தப்புன்னு அடிக்கிறது, சைக்கிள் ட்யூபை இடுப்புல மாட்டிகிட்டு ஆழத்துக்கு போறது, இதல்லாம் அடுத்தது.
சுரக்குடுக்கையை முதுகுல கட்டி, மோட்டார் பைக் ட்யூபை இடுப்புல மாட்டி, அம்மாவோட புடவையை இடுப்புல கட்டி வெளிய ஒருத்தர் புடுச்சிகிட்டு கிணத்துல முறையா நீச்சல் கத்துகிட்டது அடுத்தது.
அம்மா செட் எல்லாரும் ஒண்ணா போகவேண்டியது. கம்மாய இந்தக் கரையிலேர்ந்து அந்தக் கரையக் கடக்க வேன்டியது. அது சாதாரண விஷயமில்ல. சாதாரண நீச்சல், போட்டி நீச்சல், முங்கு நீச்சல், பின் நோக்குன நீச்சல், மல்லாக்க நீச்சல்னு எல்லாம் தெரிஞ்சிருந்தாதான் முடியும். அப்படி நீந்தும்போது கடற்கரை சாகசம்னு அம்மா கேட்ட ஒரு கதை ஞாபகம் வருமாம். பொண்ணுங்க இப்படி நீச்சலடிக்கிறதப் பத்தி ஊருக்குள்ள ரெண்டு கருத்து உண்டு.
“இதுகளெல்லாம் பொம்பளப்புள்ளைகளான்னு. இதுகள்ளாம் பள்ளிக்கூடத்துல படிக்குது வேற”. அத சொல்றவுங்களுக்கு நீச்சலடிக்கிற தைரியம் இருக்காது. “இதென்ன எல்லாக் காலத்துலயும் இப்படிதான பொம்பளைகளும் நீச்சலடிச்சி வளந்து வர்ரோம். நாங்கல்லாம் என்ன தெரியுமா பண்ணுவோம். உங்கள மாதிரி அந்தக் கரையில நின்னு மூச்சு வாங்கிட்டு திரும்ப மாட்டோம். கரைய தொட்டுட்டு அப்படியே வருவோம்” இப்டி கூடுதல் சாகசம் பத்தி பேசுற பெண்களும் உண்டாம்.
அம்மாவோட செட்டு சனி, ஞாயிறு வந்தால் காலைல ஒன்பது மணியிலருந்து ரெண்டு மணி வரை தண்ணிதான். முங்கு நீச்சலடிச்சி போயி தொடுற விளையாட்டு. ஒண்ணு ரெண்டு எண்ணி யார் ரொம்ப நேரம் தண்ணிக்குள்ள இருக்குற விளையாட்டு. வானத்தப் பாத்துகிட்டு மல்லாக்க மிதங்கிக்கிடு கிடக்குறது. பாவாடைல பெரிய முட்ட செஞ்சி அந்த முட்ட உடையாம அதுல தலைய வச்சிகிட்டு எல்லாரும் மெதுவா நீந்துறது, அப்படியே கிணத்துலபோய் வரிசையா தொப்பு தொப்புன்னு குதிக்கிறது. அடுத்து உருளைக் கட்ட மேல இருந்து குதிக்கிறது. எல்லாம் முடியும்பொழுது வயிறு கத்தும். தண்ணி வாந்தியா வருமாம். முகம் வெளுத்து கிடக்குமாம். கை கால் தோல் சுருங்கி புழிஞ்ச துணி மாதிரி இருக்குமாம். சத்தமாப் பேச முடியாதாம். ஆனால் நல்லா இருக்குமாம். எப்படா நாளைக்கு வரும் திரும்பப் போகனும்ணு தோணுமாம்.
சாகச அம்மா, தண்ணியில முங்கிப் போன கதைகளும், இழுத்துட்டுப் போன கதைகளும் இருக்கு. அத சொல்லும்போது காரணத்த மொத சொல்லுவாங்க. தப்புப் பண்ணாத நல்லபுள்ள மாதிரி இருக்கும். நீச்சல் குளத்தில் நான் குளிக்கும்போதெல்லாம் அம்மாவைப் போல் நானும் எல்லாம் செய்யனும்ணுன்ற எண்ணத்துலயே செயல்படுவேன். எல்லாம் நிஜமாகவும் கனவாகவும் இருந்துகொண்டே இருக்கிறது.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago