காரணம் ஆயிரம்: பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்!

By ஆதலையூர் சூரியகுமார்

பிளாஸ்டிக் பயன்பாடுகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளை மனிதர்களால் அழிக்க முடியாது என்று சொன்னாலும்கூட யாரும் கேட்பதாகவில்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மக்காமல் அப்படியேதான் இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்கூடப் பெரிய சவாலாகவே மாறிவருகின்றன.

நமக்கு வசதியாக இருக்கிறது என்று பயன்படுத்திய ஒரு பொருள் இன்று நமக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. ஒரு புறம் பிளாஸ்டிக்குகளை எந்த ஆபத்தும் இல்லாமல் அழிப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

பிளாஸ்டிக்குகளை வைத்து ஜெர்மனி விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிளாஸ்டிக்கைத் தூள் தூளாக்கி, கசக்கிப் பிழிந்து பெட்ரோலாகத் தயாரித்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இந்தச் சோதனை முயற்சியில் வெற்றியும் கிடைத்துவிட்டது. அதெப்படி பிளாஸ்டிக்கை உருக்கிப் பெட்ரோல் தயாரிக்க முடியும்?

பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கும் முறையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, பிளாஸ்டிக் உருவான விதத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

1907-ம் ஆண்டு லியோ பேகிலாண்டு என்ற விஞ்ஞானிதான் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார். செல்லுலோஸ், நிலக்கரி, வேதி உப்புகள், கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) போன்ற பகுதிப் பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் உருவாக்கும்போது, பகுதிப் பொருட்களின் மூலக்கூறுகளைத் தொடர்ச்சியாகச் சங்கிலி போல் அமையச் செய்கின்றனர். தனி மூலக்கூறுகள் சங்கிலிபோல் மாறியவுடன் அவை புதிய வேதிப் பண்புகளையும், இயற்பியல் பண்புகளையும் பெறுகின்றன. தனி மூலக்கூறுகள் தொடர்ச்சியாகச் சங்கிலிபோல் மாறும். இந்த நிகழ்வை ‘பாலிமரைஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்படித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகள் அதன் புதிய மூலக்கூறு தன்மையால் உடையாத, அழிக்க முடியாத இயல்பைப் பெற்றுவிடுகிறது. இந்த இயல்புதான் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் மனித குலம் தவிக்கக் காரணம். பிளாஸ்டிக்கை அழிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோதுதான் பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் எதேச்சையாகக் கற்றுக்கொண்டார்கள்.

பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். கழிவு பிளாஸ்டிக்குகள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்துவைத்து, கொளுத்திவிட்டால் அவை எரிந்து சாம்பலாகிவிடுமே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அப்படிப் பிளாஸ்டிக்குகள் எரிந்து சாம்பலாகாது என்பதுதான் பிரச்சினை. பிளாஸ்டிக்கை எரித்து அழித்துவிட முடியாது. எரிந்த பின் கரி மாதிரிச் சில வேதிப் பொருட்கள் மிஞ்சுகின்றன. அதனால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடிகிறதே தவிர, முற்றிலுமாக அழிக்க முடியவில்லை.

பிளாஸ்டிக் மறுசுழற்சியின்போது மிஞ்சும் கழிவுப் பொருட்களை என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் விஞ்ஞானிகளுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஹைட்ரஜனைச் சேர்த்து, ஒரு பெரிய கொள்கலனில் போட்டு, அதை அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் அதிக வெப்பத்தால் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் தங்கள் இயல்பான பிளாஸ்டிக் அமைப்பை இழந்து விடுகின்றன.

இறுதியில் இது கச்சா எண்ணெயாக (குரூட் ஆயில்) மாறிவிடுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவிலிருந்து முக்கால் கிலோ குரூட் ஆயில் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடக்கத் தொடங்கிவிட்டன.

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பலன் கிடைத்தால், பிளாஸ்டிக்கும் அழியும்; பெட்ரோலும் கிடைக்கும்.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்