மிகச் சிறிய முயல்

By ஸ்நேகா

வட அமெரிக்காவில் வாழக்கூடியவை பிக்மி முயல்கள். உலகிலேயே மிக அரிதான சிறிய முயல் இனம் இவை. நன்கு வளர்ந்த பிக்மி முயல் 350 கிராம் முதல் 500 கிராம் வரை எடை கொண்டவை. நம் உள்ளங்கைகளுக்குள் இரண்டு பிக்மி முயல்களை வைத்துவிடலாம் என்றால், எவ்வளவு சிறிய முயல்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்!

வீட்டில் வைத்து பிக்மி முயல்களை வளர்க்க விரும்பினாலும் வளர்க்க இயலாது. ஏனென்றால் பிக்மி முயல்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை அளவே இருக்கின்றன. அதாவது 130 முயல்கள் மட்டுமே இப்போது காணப்படுகின்றன. அதனால் பிக்மி முயல்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் முயல்களை வளர்க்க விரும்பினால், மற்ற முயல் இனங்களை வளர்த்துக்கொள்ளலாம்.

பிக்மி முயல்களுக்குச் சத்து நிறைந்த உணவு தேவைப்படுகிறது. ஆனால், அந்த உணவை எளிதில் ஜீரணிக்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. பிறந்து, ஓராண்டில் பிக்மி முயல் முதிர்ச்சி அடையும். 27 முதல் 30 நாள்களுக்குள் குட்டிகளை ஈனும். ஓராண்டில் 3 முறை குட்டிகளை ஈனக்கூடியது.

2001ஆம் ஆண்டு பிக்மி முயல்கள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விலங்கு நல ஆர்வலர்களின் முயற்சியில் 16 பிக்மி முயல்கள் மீட்கப்பட்டன. அவற்றை ஆரிகன் விலங்கு காட்சி சாலை தத்தெடுத்துக்கொண்டது. ஆனால், பிக்மி முயல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 2008ஆம் ஆண்டு பிக்மி முயல் இனத்தில் கடைசி ஆண் இறந்துவிட்டது. பிக்மி முயல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக வேறு முயல் இனத்தோடு சேர்த்து, இனப்பெருக்கம் செய்ய வைத்தனர். இப்போது இருக்கும் பிக்மி முயல்கள் எல்லாமே கலப்பு இனங்கள்தாம்.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலான பிக்மி முயல்கள் அழிந்துவிட்டன. மிகவும் போராடி 32 முயல்களை மீட்டனர். தற்போதும் பிக்மி முயல்களின் எண்ணிக்கை கவலை அளிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE