டிங்குவிடம் கேளுங்கள்: பிரானா மனிதர்களைத் தாக்குமா?

By செய்திப்பிரிவு

ராக்கெட் சென்ற பிறகும் ஏன் புகை நகர்ந்து செல்லாமல் அப்படியே நிற்கிறது, டிங்கு?

- சு.அ. யாழினி, 10-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.

எரிபொருள் மூலம் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்கிறது. அப்போது contrail எனப்படும் வெள்ளைக் கோடுகள் போன்று புகை வெளியேறுகிறது. வாகனங்களை இயக்கும்போது வெளியேறும் புகையைப் போன்றுதான் இந்த வெள்ளைக் கோடுகளும்.

ராக்கெட்டிலிருந்து சூடாக வெளியே வரும் வாயுக்களில் உள்ள நீராவி, வெளியே இருக்கும் குளிர்ச்சியான காற்றால் தாக்கப்படுகிறது. இதனால் நீராவி சிறிய நீர்த்துளிகளாக மாறி, பனிப்படிகங்களாக உறைகின்றன. இவைதான் நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது, வெள்ளைக் கோடுகளாகத் தெரிகின்றன. இந்தக் கோடுகள் விரைவில் கலைந்துவிடும், யாழினி.

அழகான, சிறிய பிரானா மீன்கள் மனிதர்களை வேட்டையாடுமா, டிங்கு?

- வி. செந்தில்குமார், 8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

பிரானா மீன்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் பற்கள் எதையும் கடித்துக் கிழிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் கூர்மையானவை. தாடைகளும் வலிமையானவை. அதனால் தங்களைவிடப் பெரிய விலங்குகளைக்கூட இவை கூட்டமாகச் சென்று வேட்டையாடிவிடுகின்றன.

இவற்றில் சிவப்பு வயிறு பிரானாக்கள்தாம் அதிக வலிமையுடையவை. எப்போதும் கூட்டமாகவே இரை தேடிச் செல்கின்றன. இரை அகப்பட்டால் வெகு விரைவில் சதையைத் தின்று, எலும்பை மட்டும் விட்டுவிடுகின்றன. மனிதர்கள் மீதும் பிரானாக்கள் தாக்குதல் நடத்துவதாகச் சொன்னாலும், அதில் உண்மை இல்லை என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

ஆற்றில் தவறி விழுந்து இறந்தவர்கள், மாரடைப்பால் இறந்தவர்களைத்தான் பிரானாக்கள் இரையாக்கியிருக்கின்றன. உயிருடன் இருக்கும் மனிதர்களைத் தாக்கும் சாத்தியம் அதிகம் இல்லை. அதனால் பிரானாக்களால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை, செந்தில்குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE