ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அராபிய விஞ்ஞானி ஒருவர் இருந்தார். ஒளியியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை அவர் செய்திருக்கிறார். ஆனால், அவருடைய பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்களுள் ஒன்றாகவே இப்போதுவரை இருக்கிறது.
ஒளி விலகல் (refraction), ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion) போன்றவற்றை கண்டுபிடித்தது யார்? ஐசக் நியூட்டன் கண்டறிந்தார் என்றுதானே பாடப் புத்தகங்களில் படிக்கிறோம். ஆனால், நியூட்டனுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அதைப் பற்றி அந்த அராபிய விஞ்ஞானி விளக்கியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அதுமட்டுமல்ல, இயற்பியலில் இன்றைக்கு ஒரு பிரிவாகத் திகழும் ‘ஒளியியல்' பற்றி தனி புத்தகமே அப்போது எழுதியுள்ளார். அவர்தான் அல் ஹாசன்.
இஸ்லாமிய பொற்காலம்
அல் ஹாசன் அல்லது அபு அலி அல் ஹாசன் என்ற பெயரைக் கொண்ட அவருடைய பின் பாதிப் பெயர் இப்ன் அல் ஹேதம். கி.பி. 965-ல் இராக் நகரமான பாஸ்ராவில் பிறந்தார். பண்டைய இராக்கில் அவர் பிறந்தாலும், தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோவில்தான் அவர் பெரும்பாலும் வாழ்ந்தார். ஐரோப்பியர்கள் இருண்ட காலத்தில் தளர்ந்துபோயிருந்தார்கள். அப்போது, அராபியர்கள் பொற்காலத்தில் இருந்தனர். அந்தக் காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இஸ்லாமிய விஞ்ஞானச் சிந்தனையாளர்தான் அல் ஹாசன்.
இஸ்லாமிய நாகரிகத்தின் பொற்காலம் என்றழைக்கப்படும் காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறை சார்ந்த ஆராய்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. ஸ்பெயினில் இருந்து சீனாவரை பரவியிருந்த நிலப்பரப்பில், அந்தக் காலத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. அவற்றில் பல இன்றைக்கும் நமக்குப் பயனளிக்கின்றன. ஆனால், அவை போதிய அளவுக்குப் பாராட்டையோ அங்கீகாரத்தையோ பெறவில்லை.
பார்வையும் கேமராவும்
ஒளி நம்முடைய கண்ணுக்குள் ஊடுருவுவதால்தான், நம்மால் பார்க்க முடிகிறது. இதை முதன்முதலில் சொன்னவர் அல் ஹாசன். ஒளி ஊடுருவும் தன்மையை நம் கண் இழக்கும்போது, பார்வையை இழந்துவிடுகிறோம். அதற்கு முன்னதாக விஞ்ஞானிகள் யூக்ளிடும் தாலமியும் கண்ணிலிருந்து ஒளி வெளிப்படுவதாகவே கூறியிருந்தார்கள்.
நமது கண் செயல்படும் முறையையும் அவர் விளக்கியுள்ளார். ஒரு ஊசித்துளை கேமராவைப் போலவும் (pinhole camera), இருட்டறையில் போடப்படும ஒரு துளை எதிர்ப்புறம் உள்ள காட்சியை அப்படியே பிரதிபலிப்பதைப் போல (camera obscura) நமது கண் செயல்படுவதை அல் ஹாசன் விளக்கினார். இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் ஒளிப்படக் கருவிகள் (camera) கண்டறியப்பட்டன. இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கைபேசியில் செயல்படும் கேமராவரை, அல் ஹாசன் விளக்கிய தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இப்படியாக நம்முடைய பார்வை, பார்வையியல், ஒளியியல் (optics) போன்றவற்றைப் பற்றி அல் ஹாசன் விரிவாக ஆராய்ந்தார்.
ஒளியியலின் தந்தை
தண்ணீர், எண்ணெய் போன்ற அடர்த்தியான ஊடகங்களில் ஒளி மெதுவாக நகர்வதால்தான் ஒளி விலகல் (refraction) ஏற்படுகிறது என்று மிகச் சரியாக அல் ஹாசன் விளக்கியிருக்கிறார். ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion) பற்றிகூட விளக்கம் தந்துள்ளார். அவருடைய பரிசோதனை முறைகளும் ஒரு கொள்கையைப் பரிசோதித்துப் பார்க்கும் முறையும் நவீன அறிவியல் முறையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதிபலித்தன.
ஒளியைப் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சிகளைப் பற்றி ‘கிதாப் அல்-மனாசிர்’ (Kitab al-Manazir) என்ற புகழ்பெற்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். அது ‘De Aspectibus’ என்ற பெயரில் லத்தீனில் 12-ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது. புகழ்பெற்ற விஞ்ஞானி ரோஜர் பேகன் அந்தப் புத்தகத்தை சுருக்கி வெளியிட்டிருக்கிறார். வானியலில் 'கோள்களின் இயங்குமுறை' தொடர்பாக அல் ஹாசன் அளித்த விளக்கம், யோஹான்னஸ் கெப்ளருக்கு (16-ம் நூற்றாண்டு) உத்வேகம் அளித்தது.
ஐரோப்பிய மறுமலர்ச்சி கால விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் அல் ஹாசன் புத்தகம் பெரும் தாக்கம் செலுத்தியது. இன்றைக்கு ‘நவீன ஒளியியலின் தந்தை' என்று அவர் போற்றப்படுகிறார். நவீன அறிவியல் முறைகளை முதன்முதலில் பயன்படுத்தியவராகவும் அவர் கருதப்படுகிறார். உலகின் முதல் நவீன விஞ்ஞானியும் அவரே.
வீட்டுச்சிறை
அல் ஹாசனின் வாழ்க்கையில் சில தடுமாற்றங்களும் இருந்தன. அந்தக் காலத்தில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளம் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்தும் திறமை தன்னிடம் இருப்பதாக அல் ஹாசன் அதீத தன்னம்பிக்கையுடன் கூறினார். அந்த நிலப்பகுதியை ஆண்டுவந்த மாட் காலிப், அதை செயல்படுத்திக் காட்டுமாறு அல் ஹாசனை அழைத்தார். நைல் நதி வெள்ளத்தை நிறுத்துவது சாத்தியமில்லை என்பதைப் பின்னர்தான் அல் ஹாசன் உணர்ந்தார். இதனால் தனக்கு தண்டனை கிடைக்குமோ என பயந்து மனநிலை தவறியதைப் போல நடிக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக 1011-ம் ஆண்டிலிருந்து அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 1021-ல் காலிப் இறந்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், வீட்டுச் சிறையில் இருந்த காலத்தை அல் ஹாசன் வீணடிக்கவில்லை. அறிவியல் பரிசோதனைகள் செய்வதிலும், புத்தகங்களை எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். அவருடைய புகழ்பெற்ற ஒளியியல் தொடர்பான புத்தகம் வீட்டுச்சிறையில் இருந்த காலத்தில்தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago