மதிய உணவு இடைவேளையில் தன் டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தான் விநோத். அது காலியாக இருந்தது. ஒருபுறம் வருத்தம், இன்னொரு புறம் அவனுக்குக் கோபம் வந்தது.
பூரி என்றால் விநோத்துக்கு ரொம்ப பிடிக்கும். இன்று மதிய உணவுக்காக அவனது அம்மா பூரிதான் கொடுத்தனுப்பினார். ஆசையாகச் சாப்பிடலாம் என்று நினைத்த விநோத்துக்கு ரொம்ப ஏமாற்றமாகப் போய்விட்டது.
கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் நடக்கிறது. இன்றும் பூரியைச் சாப்பிட்டவர்கள் யார் என்று விநோத்துக்கு ஓரளவு தெரியும். அவன் வகுப்பிலுள்ள கண்ணனும் குமாரும்தான் அந்த வேலையைச் செய்திருப்பார்கள். அவர்கள் இப்படிச் செய்வது முதல் முறையல்ல.
சில நாட்களுக்கு முன்பு விநோத்தின் கொழுக்கட்டையும் இப்படித்தான் காணாமல் போயிருந்தது. அப்போது விநோத்தின் நண்பன் கிஷோர்தான் அந்த உண்மையைச் சொன்னான்.
“விநோத்! விளையாட்டு வகுப்பு நேரத்தில் உன் டிபன் பாக்ஸைத் திறந்து கொழுக்கட்டையைச் சாப்பிட்டது கண்ணனும் குமாரும்தான். அதை நான் பார்த்தேன். அவர்களிடம் கேட்க எனக்குப் பயம். அதனால் என்னால் அவர்களைத் தடுக்க முடியவில்லை!” என்று சொன்னான் கிஷோர்.
கிஷோர் தனக்காகக் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தில் பாதியைப் பசியோடு இருக்கும் விநோத்துக்குக் கொடுத்தான். ‘என்னால் கிஷோரும் இன்று குறைவாகச் சாப்பிட வேண்டியதாயிற்றே’என்று விநோத்துக்கு வருத்தமாக இருந்தது.
‘கண்ணனும் குமாரும் கொஞ்சம் முரடர்கள். அவர்களுடன் வேறு எந்த மாணவர்களும் சண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனாலும், நாம் இப்படிச் செய்தால் மற்ற மாணவர்கள் மதியம் என்ன சாப்பிடுவார்கள் என்று அவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்களா?’ நினைத்துப் பார்த்த விநோத்துக்குக் கோபம் வந்தது. ஆனாலும், இந்த ஒருமுறை விட்டுவிடுவோம் என்று நினைத்துவிட்டுவிட்டான்.
ஆனால் தொடர்ந்து கண்ணனும் குமாரும் இப்படியே கொண்டிருந்தார்கள். இன்றும் அவர்கள் இருவரும்தான் தன் பூரியை எடுத்துச் சாப்பிட்டிருக்க வேண்டும்.
‘இனி இதை இப்படியே விடக்கூடாது’என்று நினைத்த விநோத் சாயங்காலம் வீடு திரும்பியதும், தன் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான்.
விநோத் சொன்னதைக் கேட்டுச் சிரித்த அவனுடைய அம்மா, “சரி கண்ணா! நாளைக்கு நான் ஒரு வழி பண்றேன்!” என்றார்.
அம்மா சொன்னதைக் கேட்டு விநோத்துக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. நாளை அம்மா தன்னுடன் பள்ளிக்கு வந்து கண்ணனையும் குமாரையும் பற்றி வகுப்பு ஆசிரியரிடம் புகார் கொடுப்பார் என்று சமாதானம் அடைந்தான் விநோத்.
மறுநாள் விநோத்தின் அம்மா தான் பள்ளிக்கு வருவதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக மூன்று டிபன் பாக்ஸ்களை விநோத்தின் கையில் கொடுத்தார்.
“வினோத்! நீ காலையில் வகுப்புக்குப் போனதுமே கண்ணனுக்கும் குமாருக்கும் டிபன் எடுத்து வந்திருப்பதாய்ச் சொல்லி, அவர்களிடம் ஆளுக்கொரு டிபன் பாக்ஸைக் கொடுத்துவிடு. பிறகு என்ன நடந்தது என்பதை மாலை வந்து என்னிடம் சொல்” என்றார்.
அம்மாவின் செய்கை விநோத்துக்குப் புரியவேயில்லை. ‘என்ன இது? அம்மா பள்ளிக்கு வந்து கண்ணனையும் குமாரையும் கண்டிப்பார் என்று நினைத்தால், இப்படிச் செய்கிறாரே?’ என்று நினைத்தவன், ‘சரி, அம்மா சொன்னபடியே செய்து பார்க்கலாம்’ என்று அம்மா தந்த டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் போனான். வகுப்புக்குப் போனதும் அம்மா சொன்னது போல, கண்ணனையும் குமாரையும் கூப்பிட்டான்.
‘சில நாட்கள் நாம் விநோத்தின் சாப்பாட்டை எடுத்துத் தின்றதற்காக நம்முடன் சண்டைக்கு வருகிறானோ?’ என்று நினைத்து வந்த அவர்களிடம் அம்மா கொடுத்த டிபன் பாக்ஸைக் கொடுத்தான். அம்மா சொன்னதையும் விநோத் சொன்னான். கண்ணனும் குமாரும் பதில் ஏதும் சொல்லாமல் டிபன் பாக்ஸ்களை வாங்கிக்கொண்டார்கள்.
மதிய வகுப்பு முடிந்ததும் உணவு சாப்பிட டிபன் பாக்ஸைத் திறந்தான் விநோத். இன்று அவனுடைய டிபன் பாக்ஸில் சாப்பாடு அப்படியே இருந்தது. அவன் சாப்பிட்டு முடித்தான். இன்னும் வகுப்பு தொடங்குவதற்கு நேரம் இருந்தது.
அந்த நேரத்தில் குமாரும் கண்ணனும் விநோத்தை நோக்கி வந்தார்கள்.
அவர்கள் இருவரும் விநோத்திடம், “விநோத்! எங்களை மன்னித்துவிடு. கடந்த நாலைந்து நாட்களாக நாங்கள் இருவரும்தான் உன்னுடைய டிபன் பாக்ஸிலுள்ள சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டோம். அது உனக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனாலும், எங்களுக்காக உன் அம்மாவிடம் சொல்லி சாப்பாடு எடுத்து வந்திருக்கிறாய். உண்மையிலேயே உன் அம்மா கொடுத்துவிட்ட சாப்பாடு ரொம்ப ருசியாக இருந்தது. இனி நாங்கள் உன் சாப்பாட்டை மட்டுமல்ல, யாருடைய சாப்பாட்டையும் திருட்டுத்தனமாக எடுத்துச் சாப்பிட மாட்டோம். கூடவே நாம் இனி நல்ல நண்பர்களாக இருப்போம். இதோ இன்று நீ எங்களுக்காகச் சாப்பாடு கொண்டு வந்ததற்காக, நாங்கள் உனக்காகச் சாக்லெட் வாங்கி வந்திருக்கிறோம்” என்று சொல்லி ஒரு சாக்லெட்டை விநோத்திடம் கொடுத்தார்கள்.
ஆஹா! அம்மா செய்தது எவ்வளவு நல்ல செயல் என்று இப்போது விநோத்துக்குப் புரிந்தது.
‘ஒருவேளை அம்மா கண்ணனையும் குமாரையும் அழைத்துக் கண்டித்திருந்தாலோ, புகார் சொல்லியிருந்தாலோ அவர்களுக்கும் எனக்குமிடையே பகை வளர்ந்துகொண்டல்லவா போயிருக்கும்? ஆனால், இப்போது அவர்கள் எனக்கு நண்பர்களாக மாறிவிட்டார்கள். கூடவே இனி இதுபோன்ற தவறும் செய்யமாட்டோம் என்று திருந்தியும் விட்டார்களே!’
-மகிழ்ச்சியடைந்த விநோத், வீட்டுக்குப் போனதும் அம்மாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago