பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய கவின் சோகமாக இருந்தான். நிலா டீச்சரும் பள்ளியிலிருந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தார்.
“கவின்... உடம்புக்கு ஏதும் முடியலையா?” என்று விசாரித்தார் நிலா டீச்சர்.
“எனக்கு ஒன்னுமில்லை. என் ஃபிரண்டு பாலாவுக்குதான் உடம்புக்கு முடியலையாம். அவன் இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல. அவங்க அப்பாதான் வந்து எங்க டீச்சருகிட்டே பேசிகிட்டிருந்தாரு. பாலாவுக்கு ரெண்டு நாளா பயங்கர காய்ச்சலாம். இப்போ ஆஸ்பத்திரிலே இருக்கானாம். அவன் பள்ளிக்கூடம் வர இன்னும் நாலஞ்சு நாளாகும்னு பாலா அப்பா சொல்லிட்டு போனாரும்மா” என்றான் கவின்.
“போன வாரம் பாலாவைப் பார்த்தோமே. அப்பெல்லாம் அவன் நல்லாதானே இருந்தான். சரி, ரஞ்சனி ஸ்கூல்ல இருந்து வரட்டும். அப்புறமா நாம ஆஸ்பத்திரி போய் பாலாவைப் பார்த்திட்டு வருவோம்” என்றார் நிலா டீச்சர்.
அதற்குள் ரஞ்சனியே வீட்டுக்கு வந்துவிட்டாள்.
“பாலாவுக்கு என்னாச்சிம்மா?” என்று கேட்டாள் ரஞ்சனி.
“அவனுக்கு பயங்கரமான காய்ச்சலாம். ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காங்களாம். சீக்கிரம் கிளம்பு. போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்று கூறினார் நிலா டீச்சர்.
மூன்று பேரும் மருத்துவமனைக்கு கிளம்பினர். பாலா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டை விசாரித்து, அங்கு போய் சேர்ந்தனர். கடும் காய்ச்சல் காரணமாக சோர்ந்து போன பாலா, தூங்கிக் கொண்டிருந்தான்.
பாலாவின் அம்மா தண்ணீரில் துணியை நனைத்து, அதை பாலாவின் உடம்பெங்கும் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தார்.
“இப்போ எப்படி இருக்கான்?” என்று கேட்டார் நிலா டீச்சர்.
“இப்போ பரவாயில்லைங்க. காலையிலே காய்ச்சல் ரொம்ப கடுமையா இருந்துச்சு. உடம்பு பூரா ஒரே சூடு. தண்ணியில துணிய நனச்சி ஒத்தி எடுத்திட்டு இருங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஒத்தி எடுத்தப்பறம்தான் உடம்புல சூடு குறைஞ்சிருக்கு. ரெண்டு நாளா அவனால தூங்க முடியல. இப்போதான் கொஞ்சம் தூங்குறான்” என்றார் பாலாவின் அம்மா.
“சரி, பத்திரமா பார்த்துக்கங்க. பாலா கண் முழிச்சப் பிறகு கவினும் ரஞ்சனியும் வந்தாங்கன்னு சொல்லுங்க. வீட்டுக்கு வந்து அப்புறம் பார்க்கிறோம்” என்று கூறிய நிலா டீச்சர், அங்கிருந்து புறப்பட்டார்.
வீட்டுக்கு வரும் வழியில் ஈரத் துணியால் பாலாவின் உடம்பை துடைத்துவிட்ட காட்சிகள் ரஞ்சனியின் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தன.
“அம்மா ஈரத் துணியால பாலா உடம்புல ஒத்தி எடுத்தாங்களே. அது ஏம்மா?” என்று கேள்வி எழுப்பினாள் ரஞ்சனி.
“பானை தண்ணி எப்படி குளிர்ச்சியா இருக்குன்னு அன்னைக்கு சொன்னேன் இல்லையா. அந்த விளக்கம்தான் இந்த கேள்விக்கும் பதில்” என்றார் நிலா டீச்சர்.
“கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கம்மா” என்றான் கவின்.
“சரி சொல்றேன். காய்ச்சல் ரொம்ப அதிகமாயிடுச்சுன்னா ஜன்னி வந்துடும். அதுபோன்ற நேரங்கள்ல சாதாரண தண்ணியில துணிய நனைச்சி, பிழிஞ்சு எடுத்துட்டு, காய்ச்சல் அடிக்கிறவங்க உடம்பெல்லாம் ஒத்தி எடுக்கணும்.
அப்படி செஞ்சா, துணியில இருக்கற தண்ணி, உடம்புல ஒட்டிக்கும். கொஞ்ச நேரத்துல அந்தத் தண்ணி ஆவியாகிடும். அப்படி ஆவியாகத் தேவையான வெப்பத்தை உடம்புலேர்ந்துதான் தண்ணி எடுத்துக்கும்.
இப்படியே தொடர்ந்து ஈரத் துணியால உடம்ப ஒத்தி எடுத்துக்கிட்டு இருந்தா, உடம்புல படற தண்ணியும் தொடர்ந்து ஆவியாகிக்கிட்டே இருக்கும். ஆவியாகத் தேவைப்படற வெப்பத்தை உடம்புல இருந்து தண்ணி எடுத்துகிட்டே இருக்கிறதலா, நம்ம உடம்போட சூடு கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சு, காய்ச்சலும் குறையும்.
அதனாலதான் பாலா உடம்புல ஈரத் துணியால அவங்க அம்மா ஒத்தி எடுத்தாங்க” என்று சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.
“சாதாரண விஷயங்களில்கூட இவ்வளோ விஞ்ஞானம் இருக்குன்னு தெரியும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்குமா” என்றாள் ரஞ்சனி.
இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். அதற்குள் அப்பா வீட்டுக்கு வந்திருந்தார்.
வீட்டினுள் இருந்த அப்பாவைப் பார்த்து, “என்னப்பா ரொம்ப சோர்வா இருக்கீங்க?” என்று கேட்டான் கவின்.
“என்னன்னு தெரியல. திடீர்னு ஒரே காய்ச்சல். உடம்பு ரொம்ப கொதிக்குது” என்றார் அப்பா.
“ரஞ்சனி சீக்கிரம் வா. போய் துணிய எடுத்து தண்ணியில நனச்சி எடுத்துட்டு வருவோம்” என்றான் கவின்.
கவின் கூறுவதைக் கேட்டு நிலா டீச்சரும், ரஞ்சனியும் சிரித்தனர். அவர்கள் சிரிப்பதன் காரணம் தெரியாமல் அப்பா விழித்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago