காரணம் ஆயிரம் 06: தீயை அணைக்கும் பூதம்

By ஆதலையூர் சூரியகுமார்

தீபாவளி வந்துவிட்டது. பட்டாசு வெடிக்கும்போது பக்கத்திலேயே வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ள அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். கம்பி மாத்தாப்புகளைக் கொளுத்தி அணைப்பதற்காக அப்படிச் சொல்வார்கள் அல்லவா? மத்தாப்புகளை அணைக்க மட்டுமல்ல, தீ விபத்து ஏற்படும்போதும் தண்ணீரை ஊற்றி அணைக்கவும் செய்கிறோம். தண்ணீர் மிகச் சிறந்த தீயணைப்பான்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் நெருப்பு தனித்துவம் மிக்கது. எப்படி? ஏனென்றால் நெருப்பை நாம் உருவாக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். மற்ற எந்த பஞ்சபூத சக்திகளையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. அதனால்தான் பல மதங்களின் வழிபாடுகளில் நெருப்பு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது.

பாரசீகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது ஜொராஸ்ட்ரிய மதம். இந்தச் சமயமும்கூட, ‘அகூர மஸ்தா’ என்ற தீ வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. வரலாற்றில் நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், மனித குல வாழ்வு வேறு பக்கம் திசை மாறியது.

தண்ணீர் காட்டும் நெருப்பு

சரி, நெருப்பின் மீது நீரை ஊற்றியவுடன் நெருப்பு அணைந்துவிடுகிறது அல்லவா? அங்கு என்ன விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? கேள்வி எளிமையானதுதான்! ஆனால், கொஞ்சம் நுட்பமானது!

உண்மையில் நெருப்புக்கு நீர் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என்று நினைக்கிறோம். ஆனால், அறிவியல்படி நெருப்புதான் நீருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எரியும் பொருளின் மீது நீர் பட்டவுடன் அது நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி எரியும் பொருளிலிருந்து பெருமளவு வெப்பத்தை உள்வாங்கிக்கொள்கிறது. நெருப்பிலிருந்து வெப்பம் நீராவிக்குச் சென்றுவிடுவதால் முதலில் எரிதல் மங்கிக் குறைகிறது.

தீப்பற்றி எரியும்போது அவ்வளவு வெப்பத்தையும் நீராவி விழுங்கிவிடுமா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

குளிர்ந்த நீரைக் கொதிக்க வைப்பதற்கு எவ்வளவு வெப்பம் தேவைப்படுமோ, அதுபோல ஆறு அல்லது ஏழு மடங்கு வெப்பம், நீரை நீராவியாக மாற்ற தேவை. அப்படியானால், கற்பனை செய்துகொள்ளுங்கள் நீராவி எவ்வளவு வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும் என்று.

முதலில் நீராவி வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டவுடன் தீ தன்னுடைய சக்தியை இழந்துவிடுகிறது. உடனே எரிதலைக் குறைத்துக்கொள்ளத் தொடங்குகிறது. இதோடு முடிந்துவிடுவதில்லை. நெருப்பைச் சுற்றிலும் பல நூறு கனமீட்டர் இடத்தை நீராவி அடைத்துக்கொள்கிறது (ஒரு கன அடி தண்ணீர், நீராவியாக மாறினால்தான் அது நூறு கன அடி இடத்தை அடைத்துக்கொள்ளும் சக்தி படைத்தது).

இப்படி நெருப்பைச் சுற்றிலும் நீராவி சூழ்ந்துகொள்வதால் எரிதலுக்குத் துணைபுரியும் ஆக்சிஜன், நெருப்பை நெருங்க விடாமல் கவசம் போல சூழ்ந்துகொள்கிறது. எனவே எரிதல் முற்றிலுமாக நின்றுபோகிறது.

தீயணைப்பான்கள்

இந்த அறிவியல்தான் தீயணைப்பான் கருவிகள் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் தீயை அணைக்கப் பயன்படும் தீயணைப்பான் கருவிகளில் நீருடன் வெடிமருந்தைக் கலந்து வைத்திருந்தார்கள். வெடிமருந்து சீக்கிரம் தீப்பிடித்து நீரை, நீராவியாக மாற்றி தீயை அணைக்க உதவியது.

தீயணைப்பான்கள் மனித குலத்துக்கு ஏதோ ஒரு வகையில் பக்க விளைவை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. தீயணைப்பான் கருவியில் கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுத்தப்பட்டால் மனிதர்களுக்கு நேரடியாகவே மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ப்ளோரோ கார்பன்களைப் பயன்படுத்தினால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகிறது.

தற்போது பெரும்பாலும் சோடியம் கார்பனேட் கரைசல் தீயணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.

தீயணைப்பானின் அடிப்பகுதியில் சோடியம் கார்பனேட் கரைசலும், மேல் பகுதியில் நீர்த்த கந்தக அமிலமும் இருக்கும். தீயணைப்பானின் மூடியை உடைத்துப் பயன்படுத்தும்போது சோடியம் கார்பனேட் கரைசலும், நீர்த்த கந்தக அமிலமும் சேர்ந்து கார்பன்-டை-ஆக்ஸைடு உருவாகித் தீயை அணைக்கிறது.

தீயை அணைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்றுதானே நினைக்கிறீர்கள். ‘ஒரு விஷயம் தீ மாதிரி பரவுகிறது’ என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அப்படியென்றால் தீ பெரிய விஷயம்தானே! தீயை அணைப்பதும் பெரிய விஷயம்தான்!

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்

(காரணங்களை அலசுவோம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்