காரணம் ஆயிரம் 04: எரிமலைகளில் ஒரு சூப்பர் ஸ்டார்!

By ஆதலையூர் சூரியகுமார்

“எனக்குள்ள ஒரு எரிமலை உறங்கிக்கிட்டிருக்கு. அதை தட்டி எழுப்பிடாத…” இப்படி வசனம் கேட்டிருக்கிறீர்களா? உண்மையில் எரிமலை உறங்குமா? ஆமாம், சில எரிமலைகள் தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. புவியியல் எரிமலையை மூன்று வகையாக விஞ்ஞானிகள் பிரித்திருக்கிறார்கள். உயிரற்ற எரிமலை, செயல்படும் எரிமலை, உறங்கும் எரிமலை.

நெருப்புடா

உறங்கும் எரிமலைதான் ரொம்பவும் ஆபத்தானது. கோபக்காரரைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது மாதிரி கொந்தளித்துவிடும். அதுபோலவே அது எப்போது வெடிக்கும், எப்படி வெடிக்கும் என்றும் தெரியாது. வெடிக்கும்போது ஊரையே கலங்கடித்துவிடும். உறங்கும் எரிமலைகள் ஒரு காலத்தில் தொடர்ந்து நெருப்புடா என குழம்பைக் கக்கியவைதான். இப்போதுதான் களைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் தூக்கம் கலைந்து எழுந்துவிடலாம். இத்தாலி மற்றும் ஹவாய் தீவுகளுக்குச் சென்றால் இம்மலையின் குறட்டை சத்தம் கேட்கலாம்.

உலகில் சில எரிமலைகள் முன்பு தொடர்ந்து ‘லாவா’ என்னும் எரிமலைக் குழம்பைக் கக்கி வந்திருக்கின்றன. இப்போது அவை நெருப்புக்குழம்பைக் கக்குவதை நிறுத்திவிட்டன. இனிமேலும் அவை வெடிக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றுக்கு உயிரற்ற எரிமலைகள் என்று செல்லப்பெயர் சூட்டிவிட்டார்கள். ‘கிளிமஞ்சாரோ’எரிமலையும் உயிரற்ற எரிமலைதான்.

துடிப்பான வல்கனோ எனப்படும் செயல்படும் எரிமலைகள் ரொம்ப பிரச்சினைக்குரியவை. குறிப்பிட்ட இடைவெளிகளில் லாவா குழம்பைக் கக்கிக்கொண்டே இருக்கும். அந்தமான் தீவில் உள்ள பாரன் எரிமலைகள் இந்த ரகம்தான்.

மதிப்புமிக்க எரிமலை

எரிமலை வெடிப்பது மிகவும் சுவாரசியமான நிகழ்வு. பூமியைக் குறுக்கு வெட்டாகப் பிரித்தால் மூன்று பெரிய அடுக்குகளைப் பார்க்கலாம். வெளிப்புற அடுக்கு என்பது புவி ஓடு (Mantle). அலுமினியம், சிலிக்கன், மக்னீசியம் போன்றவை இந்த மேல் ஓட்டில் இருக்கும்.

இரண்டாவது அடுக்கு மென் இடை மண்டலம். இது ரொம்ப மதிப்புமிக்க அடுக்கு. இந்த அடுக்கில்தான் இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் பல தனிமங்கள் குவிந்து கிடக்கின்றன. சூப்பர் ஸ்டார்களுக்கு இருப்பது போல இந்த இந்த அடுக்குக்கு எடையும் ஜாஸ்தி; மதிப்பும் ஜாஸ்தி;

ஒஜோஸ் டேல் சலாடோ

கருவம்

மூன்றாவது, பூமியின் நடுவில் காணப்படும் ‘கருவம்’. சக்தி வாய்ந்த பகுதி இது. கருவத்தின் வெப்பநிலையைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகூட இங்கே நிலவும். நம் வீட்டு அடுப்பில் கொதிக்கிற சுடு நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்தான். அது நம் மீது கொட்டிவிட்டாலே நமது தோல் வெந்துபோய் விடுகிறது. 5000 டிகிரி செல்சியஸ் என்றால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது இல்லையா?

இந்தக் கருவத்தில் எந்தத் தனிமத்தையும் திட நிலையில் பார்க்க முடியாது. இங்கு இரும்பும், நிக்கலும் அதிக அளவில் மாட்டிக்கொண்டு திருதிருவென்று முழிக்கின்றன. வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த இரண்டு தனிமங்களும் உருகி, உருக்குலைந்து குழம்புபோலத் தவிக்கின்றன. நிக்கல் குறியீட்டையும் (NI ) இரும்புக் குறியீட்டையும் சேர்த்து (FE) நைஃப் என்று கருவத்துக்குப் பெயர்.

இந்த நெருப்புக் குழம்பின் தொடர்ச்சியாகவே எரிமலைகள் பூமியின் மேற்பரப்பில் நீண்டிருக்கின்றன. வெப்பத்தில் வெடித்து வெளியேறத் துடிக்கும் நெருப்புக் குழம்பு, பூமியன் பலவீன மான பகுதியைப் பிரித்துகொண்டு வெளியே வந்துவிடுகிறது.

பசிபிக் கடலோரப் பகுதியில் இந்த எரிமலைக் கூட்டம் ரவுண்டு கட்டி வெடிக்கிறது. வட்ட வடிவத்தில் பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுவதால் இந்தப் பகுதிக்கு ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ ( பசிபிக் நெருப்பு வளையம்) என்று பெயர்.

பாதிப்பும் பலனும்

இந்தோனேசியாவில் 76 எரிமலைகள் கொதித்துத் ததும்பிக்கொண்டிருக்கின்றன. எரிமலையிலும் சிகரம் உண்டு. சிலி-அர்ஜெண்டினா எல்லைப் பகுதியில் மத்திய ஆண்டீஸ் மலைத் தொடரில் இருக்கும் ‘ஓஜோஸ் டேல் சலாடோ’(ojos del salado ) என்ற எரிமலைதான் உலகின் மிக உயர்ந்த செயல்படும் எரிமலை. இதன் உயரம் 22, 595 அடி. எரிமலை வெடிப்பதால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடு இந்தோனேசியா. எரிமலை வெடிக்கும்போது எழும் சாம்பல் எட்டுத் திக்கும் பரவி நிற்கும். சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பித்துவிடும்.

இப்படித்தான் சுமார் 200 ஆண்டுகளுக்கு (1815-ல்) முன்பு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தபோது சுமார் 150 மைல் தூரம் தூசு பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

எப்போதும் பயமுறுத்தும் எரிமலைகளால் சில நன்மைகளும் உள்ளன. எரிமலை வெடிப்பதால் வெளிவரும் பல்வேறு பொருட்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எரிமலைப் படிவுகள் கட்டுமானப் பொருளாகப் உபயோகப்படுத்தப்படுகின்றன. பூமிக்கு அடியிலிருந்து எரிமலை நமக்கு எடுத்து வந்து கொடுத்த பரிசு. எல்லாவற்றையும்விட, எரிமலைகள் பூமிக்கு அடியிலிருந்து நல்ல வளத்தைப் புரட்டியெடுத்து வந்து பூமி மீது பரப்புவதால் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன.

இது எரிமலையின் சின்ன உதவிதான்; ஆனால், மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான உதவி அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்