அங்கவைக்கும் சங்கவைக்கும் பெற்றோர் இல்லை. கிராமத் தலைவர் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்து, கிடைத்த வருமானத்தில் வாழ்ந்துவந்தனர்.
ஒருநாள் இரவு கனத்த மழை பெய்துகொண்டிருந்தது. அங்கவையும் சங்கவையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
இருவருக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, வாசலில் வயதான ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்.
சட்டென்று கதவைத் திறந்தாள் அங்கவை.
“நான், பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். திடீர்னு மழை அதிகமாயிருச்சு. என்னால ஊருக்குப் போக முடியல. இந்த இரவு மட்டும் திண்ணையில் தங்குவதற்கு அனுமதி கொடுத்தால் போதும்.”
“ஐயா, முதல்ல துவட்டுங்க” என்று சங்கவை ஒரு துண்டை நீட்டினாள்.
“தாத்தா, சாப்பிட்டீங்களா?” சங்கவையின் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.
ஒரு தட்டில் பழைய சாதத்தையும் ஊறுகாயையும் வைத்துக் கொடுத்தாள் அங்கவை. பாய், போர்வையை திண்ணையில் வைத்தாள் சங்கவை.
"ரொம்ப நன்றிம்மா. நீங்கள் இருவரும் தூங்குங்க. நான் சாப்பிட்டு, படுத்துக்கறேன்” என்றார் பெரியவர்.
மறுநாள் காலை. அங்கவையும் சங்கவையும் கதவைத் திறந்தார்கள். தட்டு, சொம்பு, பாய், போர்வையுடன் ஒரு சுரைக்குடுவையும் இருந்தது.
"தாத்தா மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் போலிருக்கு. இந்தக் குடுவையைப் பத்திரமாக வைத்திருப்போம். அவர் வந்து கேட்கும்போது கொடுப்போம்” என்றாள் அங்கவை.
நாட்கள் சென்றன. ஒருநாள் அங்கவை, சங்கவை இருவருக்கும் காய்ச்சல். மூன்று நாட்கள் இருவரும் ஆடு மேய்க்கச் செல்லவில்லை. கையில் பணமும் இல்லை. வீட்டில் பொருள்களும் இல்லை. இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“பக்கத்து வீட்டு ஆயாகிட்ட சாப்பிட ஏதாவது இருக்கான்னு கேட்கட்டுமா?”
“அவங்களே பாவம் சங்கவை. நாளைக்காவது நாம் வேலைக்குப் போனால் தான் தாக்குப்பிடிக்க முடியும்” என்றாள் அங்கவை.
"நம் அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தால், கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்” என்று சங்கவை சொல்லும்போதே அழுதுவிட்டாள். அவளைப் பார்த்து அங்கவையும் அழுதாள்.
அப்போது அலமாரியில் வைத்திருந்த குடுவை அசைந்தது. அரிசி, புளி, மிளகாய், எண்ணெய், காய்கறிகள் என்று அத்தனை பொருள்களும் குடுவையிலிருந்து கீழே விழுந்தன.
"இது சாதாரண குடுவை இல்ல. மந்திரக் குடுவை!” என்றாள் அங்கவை.
“நாம வசதியா வாழ பொன்னும் பொருளும் கேட்போமா?” என்றாள் சங்கவை.
“வேணாம், பெருசா எதையும் கேட்க வேணாம். அப்படிக் கேட்டாலும் குடுவை அதைக் கொடுக்குமான்னு தெரியல” என்றாள் அங்கவை.
உடல்நிலை சரியானதும் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். குடுவை என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டனர்.
ஒருநாள், "நாம் கடினமாக உழைத்தாலும் பெரிதாகச் சேமிக்க முடியவில்லை. நம் வாழ்க்கை இப்படியே இருக்குமா?” என்று வருத்தத்துடன் சொன்னாள் சங்கவை.
அப்போது குடுவை ஆடியது. இருவரும் பார்த்துக்கொண்டிருந்த போதே, பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் கொட்ட ஆரம்பித்தது.
“தேன்... ஒரு பாத்திரத்தைக் கொண்டு வா சங்கவை” என்றாள் அங்கவை.
இருவரும் பெரிய பாத்திரங்களில் தேனைச் சேமித்தார்கள்.
"தினமும் தேன் கொட்டினால், நாம் அதை விற்று, நல்லா சம்பாதித்துவிடலாம். நம்ம கஷ்டம் எல்லாம் தீரும்.”
"தினமும் தேன் கொடுக்காது குடுவை. இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கு. இதை விற்றுக் கிடைக்கும் பணத்தை வைத்து, தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.”
தேன் ருசியாக இருந்ததால் அதிக விலைக்குப் போனது. அந்த வருமானத்தில் தேனீ வளர்ப்பில் இருவரும் ஈடுபட்டனர். அங்கவை, சங்கவை உழைப்பில் வியாபாரம் பெரிதாகிக்கொண்டே சென்றது.
குடிசை வீட்டைப் பெரிய வீடாக மாற்றினார்கள். பலருக்கும் வேலை வழங்கினார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதற்குப் பிறகு குடுவையின் நினைப்பே அவர்களுக்கு வரவில்லை. அதற்கான தேவையும் உருவாகவில்லை!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago