டிங்குவிடம் கேளுங்கள்: காரமான உணவைச் சாப்பிட்டால் உமிழ்நீர் சுரப்பது ஏன்?

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மீது ஏற்படும் ஆர்வத்தை எப்படிக் கட்டுப்படுத்தலாம், டிங்கு?

- ஆ. ஹெனன் ஜொனிலா, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

நம்மை அறியாமலேயே அதிக நேரத்தைச் செலவிட வைத்துவிடக்கூடிய சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உண்டு. ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் தொடர்களைப் பார்க்காதீர்கள்.

தொடர் என்றால் அடுத்து என்ன, என்ன என்று யோசிக்க வைத்து, தொடர்ச்சியாக உங்களைப் பார்க்க வைத்துவிடும். அதனால், தொடர்களைத் தவிர்த்துவிடுங்கள். தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்தில் அமர்ந்து படிக்காதீர்கள். நிகழ்ச்சிகள் குறித்துப் பேசும் இடங்களில் நிற்காதீர்கள்.

‘பொழுதுபோகாதவர்களுக்குத்தான் இந்த நிகழ்ச்சிகள்; நமக்கோ பொழுது போதவில்லை’ என்று எண்ணிக்கொள்ளுங்கள். கூடுதல் நேரம் கிடைக்கும்போது புத்தகங்களைப் படியுங்கள், விளையாடுங்கள், தோட்ட வேலை செய்யுங்கள், நண்பர்களோடு அரட்டை அடியுங்கள், ஹெனன் ஜொனிலா.

காரமான உணவைச் சாப்பிட்டால் உமிழ்நீர் ஏன் அதிகமாகச் சுரக்கிறது, டிங்கு?

- அனஃபா ஜகபர், 11-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

காரமான உணவைச் சாப்பிடும்போது, உமிழ்நீர் அதிகம் சுரக்கும் என்பதைச் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். மிளகாயில் காரச் சுவையைக் கொடுக்கும் ‘கேப்சைசின்’ என்கிற வேதிப் பொருள், செயல் இழந்த உமிழ்நீர்ச் சுரப்பிகளைக்கூடத் தூண்டிவிடுகிறது. இதன் காரணமாகவே கார உணவைச் சாப்பிடும்போது, உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது, அனஃபா ஜகபர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE