தேச பக்தியை வளர்த்த கிரிக்கெட்! - அகிலாண்ட பாரதி

By செய்திப்பிரிவு

சிறுவயதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தின் மேல் ஆர்வம் காட்டுவேன். பெரும்பான்மையான பொழுதுகளைப் பிடித்துக்கொண்ட விஷயங்கள் மூன்று. சைக்கிள் சாகசங்கள், பள்ளி வேன் பயணங்கள், இடைகால் தெருக்களில் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த பொழுதுகள்.

சிறுமி அகிலா

சைக்கிளும் நீச்சலும் ஒவ்வொரு குழந்தையும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொல்வார். எங்கள் ஊரில் ஆறு இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது குளத்தில் தண்ணீர் இருக்காது. எனவே நீச்சலுக்கு ‘பாஸ்’ சொல்லிவிட்டேன். நான்காம் வகுப்பு கோடை விடுமுறையில் வாடகை சைக்கிள் எடுத்துச் சுற்றினேன். தெருவில் சைக்கிள் ஓட்டத் தெரிந்த அண்ணன்கள் எல்லாரும் எனக்குப் பயிற்றுநராக இருந்தார்கள்! வாடகை சைக்கிளில் ஒரு கையைவிட்டு ஓட்டுவது, இரண்டு கைகளை விட்டு ஓட்டுவது, வேகமாகப் போய்க்கொண்டே இரண்டு கால்களையும் தூக்கி ஹாண்டில் பாரில் வைப்பது போன்ற சாகசங்களை முயன்று பார்த்தேன். கீழே விழவில்லை என்பதை அறிந்த என் பெற்றோர், ஐந்தாம் வகுப்பில் எனக்கு ஹீரோ ஜெட் சைக்கிளை வாங்கிக் கொடுத்தார்கள்.

விடுமுறை நாள்களும் மாலை நேரங்களும் சைக்கிள் பயணங்களில் கழிந்தன. இதன் மூலம் சில நண்பர்கள் கிடைத்தார்கள். முடியும்வரை சைக்கிள் ஓட்டுவோம். பிறகு சீட்டு, பிஸினஸ், ப்ரெயின்விட்டா, பல்லாங்குழி, தாயக்கட்டம் இப்படிப் பல விளையாட்டுகளை விளையாடுவோம்.

நான் படித்த பள்ளி குற்றாலத்தில் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவு போக வேண்டும். பள்ளி வாகனம் இல்லை என்பதால் ஒரு வேனை ஏற்பாடு செய்து, அப்போது மூன்றாம் வகுப்பு படித்த என்னுடைய தலைமையில் எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு படித்த பத்துப் பதினைந்து பிள்ளைகளை ஏற்றி அனுப்பினார்கள். அவ்வளவாகப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. எங்கள் ஊரில் நிறைய பேருந்துகள் நிற்காது. அந்தப் பச்சை வேனின் கடைசியில் நாங்கள் அனைவரும் அமர்ந்துகொள்ள, மீதமுள்ள சீட்டுகளில் வெளியாள்களை ஏற்றுவார்கள். இப்படி ஊரெல்லாம் சுற்றிவிட்டுத் தாமதமாகவே எங்கள் ஊருக்கு வேன் வந்துசேரும். எங்களை எதிர்பார்த்து பெற்றோர் காத்திருப்பார்கள். பிறகு எங்கள் ஊருக்கு என்றே தனியாக ஒரு வேன் விடப்பட்டது. இது வெள்ளை மகேந்திரா. அதிலும் ‘ரூட்டு தல’ நான்தான். கிட்டத்தட்ட 40 பிள்ளைகள். அப்போதுதான் எங்கள் வீடுகளில் தொலைக்காட்சி வாங்கியிருந்த காலம். வெள்ளிக்கிழமை மாலையில் ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மாலை திரைப்படங்கள், பத்திரிகைகளில் படிக்கும் திரைப்படச் செய்திகள் எல்லாவற்றையும் பேசிப் பேசி சிரிப்பும் விளையாட்டுமாகக் கழியும்.

அப்பா சொன்ன கதைகள், படித்த கதைகள் எல்லாம் தீர்ந்து போனபோது நாங்களே கதைகளை உருவாக்கினோம். நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து, எங்கள் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து, ‘அலிஉருநி புரொடக்‌ஷன்ஸ்’ என்கிற ஒன்றை ஏட்டளவில் ஆரம்பித்தோம். அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாகப் படம் எடுப்பதற்காகக் கதை எல்லாம்கூட எழுதினோம்.

நாங்கள் மட்டும் தனியாக ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்த வேனில் எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவரும் சேர்ந்து கொண்டார். அவர், ‘Don't talk about cinema!’ என்று கூற மெல்ல எங்கள் பேச்சு கிரிக்கெட்டை நோக்கித் திரும்பியது.

“டிவில என்ன போட்டாலும் பாப்போம்டா” என்கிற காலகட்டம் அது. டென்னிஸ் போட்டால் டென்னிஸ், ஒலிம்பிக் ஒளிபரப்பினால் ஒலிம்பிக். கிரிக்கெட்தான் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்திருந்தது. மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டை விழுந்து விழுந்து பார்ப்போம். எங்கள் தேச பக்தியை நிரூபிக்கும் அளவுகோலாகவும் கிரிக்கெட் பார்ப்பது அப்போது இருந்தது.

உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்றே தெரியாத இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளையும்கூட வாயில் கொசு போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்போம். இந்தியாவுக்கு எதிராக எந்த நாடு விளையாடினாலும் இந்தியாவுக்குத்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதே நேரம் இங்கிலாந்துக்கு எதிராக எந்த நாடு விளையாடுகிறதோ அந்த நாட்டுக்குத்தான் எங்கள் ஆதரவு. இவை எல்லாம் எங்களிடையே எழுதப்படாத விதிகள்.

கிரிக்கெட் பைத்தியம் உச்சத்தில் இருந்த நேரம், வழியில் தென்படும் கோயில்களில் எல்லாம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எங்கள் பள்ளி வளாகம் பெரியது. அதனுள் வாட்ச்மேன் வீடு இருக்கும். கிரிக்கெட் போட்டி நடக்கும் நாள்களில் அங்கு மணிக்கொரு முறை போய் ‘தண்ணி குடுங்க’ என்று கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, ஸ்கோர் தெரிந்துகொண்டு வருவோம்.

பெற்றோர், தங்கையுடன் அகிலா

எல்லா வகுப்புகளிலும் எங்களுக்கு ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்தார்கள். எங்களால் ஸ்கோர் கேட்க முடியாத போது, பிற வகுப்பு மாணவர்கள் போய், தகவலைத் தெரிந்துகொண்டு சொல்ல வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒருமுறை வாட்ச்மேனின் வீடு பூட்டியிருந்தது. தாழ்வான சுவர் மீது ஏறிக் குதித்து, பக்கத்தில் இருந்த தேவாலய ஃபாதர் வீட்டுக்குச் சென்று ஸ்கோர் கேட்ட கதையும், அவர் வந்து எங்கள் பிரின்சிபாலிடம் போட்டுக்கொடுத்த கதையும்கூட நடந்தது!

‘ஆசை’ சாக்லேட் பிரபலமான காலம் அது. ஒரு சாக்லெட்டின் விலை 25 பைசாதான். வேனில் ஏற்றிவிட வரும் எங்கள் பெற்றோர் தினமும் ஏதாவது ஒன்று வாங்கிக் கொடுப்பதற்கு பட்ஜெட்டில் இடம் ஒதுக்கியிருப்பார்கள். சாக்லேட்டின் தாள் இழுக்க இழுக்க விரிந்துகொண்டே போகும். அதில் எங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதி, அனைத்தையும் முடிச்சுப்போட்டு வேனில் தொங்க விடுவோம். இதுவே எதிரி நாட்டு வீரர்களாக இருந்தால் அவர்கள் பெயர்கள் எழுதிய சாக்லேட் தாள்களை, கல்லைக் கட்டிச் சுற்றி சாக்கடையில் எரிந்துவிடுவோம்! சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்திய பவுலருக்கு மறுநாள் செம ‘கவனிப்பு’ உண்டு. ஒருவரைத் திட்டினால் அவருக்கு விக்கல் வரும் என்பது மட்டும் உண்மையானால், ஷோயப் அக்தர், ஷேன் வார்னே போன்றவர்களுக்குத் தொடர்ந்து விக்கல் வந்து விளையாடவே முடியாமல் போயிருக்க வேண்டும், பாவம்!

வேனிலும் வகுப்பிலும் பேச வேண்டும் என்பதற்காகவே கிரிக்கெட் கமென்ட்ரியில் கூறும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிப்பேன். அதற்காகவே இந்திகூடக் கற்றுக்கொண்டேன்!

மருத்துவர் அகிலாண்ட பாரதி

சில ஆண்டுகளில் தபால்தலை சேகரிப்பதும் நாணயம் சேகரிப்பதும் எங்கள் வட்டத்தில் பிரபலமாகியிருந்தது. அரிதான தபால்தலைகளை ஏழாம் வகுப்பு வரை சேகரித்து வைத்திருந்தேன். அவற்றைப் பள்ளியில் காட்டி பெருமையடிக்க எடுத்துச் செல்ல, யாரோ சுட்டுவிட்டார்கள். அன்று அழுத அழுகையை இன்னும் மறக்கவில்லை.

எனக்குக் கிடைத்ததைப் போன்ற மகிழ்வான குழந்தைப்பருவம் என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் அவர்களது நண்பர்களையும் அடிக்கடி சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறேன். குழந்தைப் பருவத்தின் மிச்சம் என்னில் இன்னும் ஒட்டியிருப்பதாகவே நினைக்கிறேன். அதுவே என்னை இயக்குகிறது என்றும் தோன்றுகிறது!

கட்டுரையாளர், மருத்துவர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்