நிலா வானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டது. நல்லவேளை, கடலில் விழுந்ததால் அடி ஏதும் இல்லாமல் தப்பித்துக்கொண்டது. ஆனாலும், பயத்தில் நிலா அழ ஆரம்பித்தது. அப்போது, வெளிச்சமாக ஏதோ மிதக்கிறதே என்று மீன்களெல்லாம் நிலாவை நோக்கி வர ஆரம்பித்தன. மீன்களின் கூட்டத்தைப் பார்த்ததும் நிலாவின் அழுகை மேலும் அதிகரித்தது.
குட்டிப் பையன் மகி கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். கடலிலிருந்து ஏதோ அழுகைச் சத்தம் வருகிறதே என்று வந்து பார்த்தான். கொஞ்ச தூரத்தில் உருண்டையாக ஏதோ ஒன்று மிதப்பது தெரிந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு நன்றாகப் பார்த்தான். ஆ… நிலா!
நிலா அழுதுகொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. நிலா எப்படிக் கடலில் விழுந்தது என்று அந்தக் குட்டிப் பையனுக்கு சந்தேகம். சரி! முதலில் நிலாவைக் காப்பாற்றியாக வேண்டுமென்று அவன் நினைத்துக்கொண்டான். அங்குமிங்கும் தேடி ஒரு காகிதத்தைக் கண்டுபிடித்தான். அழகான காகிதப் படகு செய்தான்.
“அழாதே நிலா. நான் படகு அனுப்புறேன். அதுல ஏறி வந்துடு” என்று நிலாவுக்குக் கேட்கும் விதத்தில் சொல்லிவிட்டுப் படகை வேகமாகக் கடலில் தள்ளிவிட்டான். “அலையே அலையே படகை மூழ்கடிச்சிடாம நிலாகிட்ட சேர்த்துடு. திரும்பவும் படகைக் கரைக்குக் கொண்டு வந்துடு” என்று அலையிடம் கேட்டுக்கொண்டான்.
அலையும் “சரிசரி கவலைப் படாதே” என்று சொல்லிவிட்டுப் படகை நிலாவிடம் கொண்டுசேர்த்தது. படகில் நிலா ஏறிக்கொண்டதும் அலை மறுபடியும் படகைக் கரைக்குக் கொண்டுவந்தது. கரைக்கு வந்த படகிலி ருந்து நிலாவை எடுத்துக்கொண்ட மகி அலைக்கு நன்றி சொன்னான்.
நிலா இவ்வளவு அழகா என்று மகி ஆச்சரியப்பட்டான். அழுதுகொண்டிருந்த நிலாவை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
“வீட்டுக்குப் போகணும், வீட்டுக்குப் போகணும்” என்று நிலா அடம் பிடித்தது.
“அழாதே நிலா, நான் உனக்குக் கண்டிப்பா உதவி செய்யுறேன்” என்று மகிக்குட்டி அதற்கு ஆறுதல் கூறினான்.
ஒரே வெளிச்சமாக இருக்கிறதே என்று அங்கே ஒரு மினிமினிப் பூச்சி வந்தது. நிலாவைப் பார்த்ததும் அதற்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க முடியவில்லை. நிலா எப்படி இங்கே வந்தது என்று நிலாவிடம் மின்மினி கேட்டது. நடந்ததையெல்லாம் நிலா அழுதுகொண்டே மின்மினியிடம் சொன்னது.
“கவலைப்படாத நிலா. நீ மேல போறதுக்கு நான் உதவி செய்யுறேன்” என்றது மின்மினிப் பூச்சி.
“நீயோ ரொம்பச் சின்னதா இருக்கே. நீ எப்படி நிலாவ மேலக் கொண்டுபோவ?” என்று மகிக்குட்டி கேட்டான்.
“அதுக்கு ஒரு வழி இருக்கு” என்று சொல்லிவிட்டுப் பறந்துபோன மினிமினி, கொஞ்ச நேரத்தில் ஒரு மின்மினிப் பட்டாளத்தையே அழைத்துவந்துவிட்டது. வந்த மின்மினிகளெல்லாம் நிலாவைப் பார்த்த மகிழ்ச்சியில் அதைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தன. மகிக் குட்டி இவ்வளவு மின்மினிகளை ஒரே இடத்தில் இன்றைக்குத்தான் பார்க்கிறான். அவனுக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்த இடமே வாணவேடிக்கை நடப்பதுபோல் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது.
“நாங்க எல்லாரும் சேர்ந்து நிலாவ வானத்துல கொண்டுபோய் விடுறோம்” என்று மின்மினிகள் ஒரே குரலில் கூறின.
நிலாவுக்கு இப்போதுதான் நிம்மதி.
“நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என்று மகிக்குட்டியிடம் நிலா சொன்னது.
“நிலா நிலா என்ன விட்டுட்டுப் போகாத நிலா. நீ போனா நான் அழுவேன்” என்று நிலாவிடம் மகிக்குட்டி கெஞ்சினான்.
அதைப் பார்த்து நிலாவுக்கே மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது.
“நீ அழாத தம்பிக்குட்டி. மாசத்துக்கு ஒரு தடவ நான் உன்னப் பாக்க வருவேன். உன்னோட விளையாடிட்டு அப்புறம் மின்மினிப்பூச்சிகளோட என் வீட்டுக்குப் போய்விடுவேன்” என்று நிலா சொன்ன பிறகுதான் மகிக்குட்டி அழுகையை நிறுத்தினான்.
மினிமினிப் பூச்சிகள் கூட்டமாகச் சேர்ந்து நிலாவைத் தூக்கிக்கொண்டு வானத்தை நோக்கிப் பறந்தன. நிலா, மின்மினிக் கூட்டம் எல்லாம் வெளிச்சமாக மேலே போய்க் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக இருந்தது.
ஒருவழியாக நிலா மேலே போய்விட்டது. மேலே போன மின்மினிகள் கீழே திரும்பவில்லை. நிலாவைப் பிரிவதற்கு மனம் இல்லாமல் அவையெல்லாம் விண்மீன்களாகிவிட்டன.
வாண்டுகளே, மாதம் ஒருமுறை அமாவாசையின் போது “நிலா எங்கே போச்சு?” என்று கேட்பீர்கள் அல்லவா? மகிக்குட்டியை வந்து பார்த்தால், அமாவாசை நாளில் நிலா எங்கே போனது என்று உங்களுக்குத் தெரியும். ஆம், நிலாவும் மகிக்குட்டியும் மின்மினிகளும் கடற்கரையில் விளை யாடிக்கொண்டிருப்பார்கள். இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago