ஜூன் 27, ஹெலன் கெல்லர் பிறந்தநாள்: பார்வை இல்லாமல் பட்டம் பெற்ற முதல் பெண்!

By ஸ்நேகா

1880. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிறந்தார் ஹெலன். எல்லாப் பெற்றோரையும் போலவே ஹெலனின் அம்மாவும் அப்பாவும் அவரது ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். 19 மாதங்களில் தாக்கிய காய்ச்சல், ஹெலனின் பார்வையையும் கேட்கும் திறனையும் பறித்துக்கொண்டது. ஹெலனின் உலகம் இருண்டு போனது. பார்க்கவும் முடியாமல், கேட்கவும் முடியாமல், தான் நினைத்ததைச் சொல்லவும் முடியாமல் குழந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். மென்மையான ஹெலன், முரட்டுக் குழந்தையாக மாறினார்.

எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் போன பார்வை திரும்பக் கிடைக்கவில்லை. ஹெலனுக்கு ஆறு வயதானபோது, அலெக்சாண்டர் கிரஹாம்பெல் காது கேளாதவர்களுக்குச் சிறப்புப் பள்ளி நடத்திவருவது பற்றித் தெரிந்தது. ஹெலனை அவரிடம் அழைத்துச் சென்றனர். கிரஹாம்பெல் ஆன் சல்லிவன் என்கிற ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்தார்.

கூர்ந்த அறிவும் பொறுமையும் கொண்ட ஆன் சல்லிவன், ஹெலனை நெருங்குவதற்குச் சில வாரங்கள் பிடித்தன. படிப்படியாக ஹெலனைப் புரிந்துகொண்டார். பார்க்கும் சக்தியும் கேட்கும் சக்தியும் இல்லாதவர்களுக்குத் தகவல் பரிமாறுவது எவ்வளவு பெரிய சவால் என்பது ஆனுக்குத்தான் தெரியும்.

ஆன் சல்லிவனுடன் ஹெலன் கெல்லர்

தண்ணீருக்குள் ஹெலனின் ஒரு கையை வைத்து, மற்றோர் உள்ளங்கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார். இப்படிச் செய்தபோது ஹெலன் விஷயத்தைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார். ஆனுக்கு நம்பிக்கை வந்தது. நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். தான் தேடிக்கொண்டிருந்த நட்பு ஆன் சல்லிவன் என்பதை உணர்ந்துகொண்ட ஹெலன், அவர் மீது அன்பும் மரியாதையும் செலுத்த ஆரம்பித்தார். இருவருக்கும் நல்ல புரிதல் உருவானது.

அடுத்துப் பேசுவதைப் புரிந்துகொள்ள பயிற்சியளித்தார் ஆன். பிறர் பேசும்போது ஹெலனின் கையை உதடுகள் மீது வைத்து, புரிந்துகொள்ளப் பழக்கினார். பத்து வயதானபோது ஹெலன் காது கேளாதவர் பள்ளியில் சேர்ந்து, பேசுவதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டார். அத்துடன் பிரெயில் மூலம் படிக்கும் முறையையும் டைப்ரைட்டரைக் கையாளும் விதத்தையும் கற்றுக்கொண்டார். பிரெயில் மூலம் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன், கிரேக்கம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார் ஹெலன்.

எல்லாரும் படிக்கும் பாடங்களைப் பார்வையற்ற, காது கேட்காத ஹெலன் படிப்பது குறித்து வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. முக்கியமானவர்கள் பலரும் ஹெலனைச் சந்தித்தனர். அவரின் செயல்பாட்டையும் அறிவுக்கூர்மையையும் கண்டு வியந்தனர். அப்படி அறிமுகமான பிரபலங்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைன். ஹெலன் கல்லூரியில் படிப்பதற்கு அவர்தான் ஏற்பாடு செய்தார்.

21 வயதில் ஆன்னின் உதவியுடன் தன் சுயசரிதையை எழுதினார் ஹெலன். 24 வயதில் பட்டப்படிப்பை முடித்து, உலகிலேயே கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் பார்வையற்றவர் என்கிற சிறப்பைப் பெற்றார் ஹெலன்!

இனி மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அரசியல், தொழிலாளர்கள் பிரச்னைகள், பெண்கள் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு, ஏழ்மை, அணு குண்டுக்கு எதிர்ப்பு, முதல் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கேற்புக்கு எதிர்ப்பு என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதினார். நிறைய கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.

ஹெலன் கெல்லர்

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார் ஹெலன். மாற்றுத் திறனாளர்களுக்கான பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுக்காக நிதி திரட்டினார். புத்தகம் எழுதினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் அமைப்பை அவரே ஆரம்பித்து, சிறப்பாக நடத்தினார்.

ஹெலனும் ஆன் சல்லிவனும் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆன் சல்லிவன் உடல்நிலை அடிக்கடி மோசம் அடைந்ததால் பாலி தாம்சன் என்பவர் ஹெலனுக்கும் ஆனுக்கும் உதவியாளராகச் சேர்ந்தார். 49 ஆண்டுகாலம் நட்பாக இருந்த ஆன் சல்லிவன் மறைந்தார்.

அடுத்த பத்து ஆண்டுகள் கடினமாக வேலை செய்தார் ஹெலன். உலகப் பயணங்களை மேற்கொண்டார். இந்தியாவுக்கு வந்தபோது நேரு, தாகூர் போன்றவர்களைச் சந்தித்தார். அப்போது ஹெலனின் வயது 75.

1968ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று, 88 வயதில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே ஹெலனின் உயிர் பிரிந்தது.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE