கோடை விடுமுறை தொடங்கினால் குழந்தைகளுக்கான முகாம்கள் களைகட்டத் தொடங்கிவிடும். படிப்பு, டான்ஸ், பாட்டு, விளையாட்டு எனப் பல முகாம்கள் குழந்தைகளை அன்போடு அழைக்கும். ஆனால், மதுரையைச் சேர்ந்த 35 குட்டிப் பசங்க போன முகாமோ ஜாலியான முகாம். அது சுற்றுலா முகாம்!
மதுரையிலுள்ள ‘செசி’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் பள்ளிக் குழந்தைகள் 35 பேரை வால்பாறை அருகே வில்லோனி என்ற ஆதிவாசிகள் கிராமத்துக்கு மூன்று நாள் முகாமுக்கு கூட்டிச் சென்றது. ‘குறிஞ்சியும் குழந்தைகளும்’ என்பதுதான் முகாமின் பெயர். கோடை முகாமை தனராஜ் என்பவர் வழி நடத்தினார். சரி எதற்காக இந்த முகாம்?
பூவிலிருக்கும் தேனை பூவைச் சேதப்படுத்தாமல் எடுத்துப் பழகும் வண்டுகளைப் போல, இயற்கையை சேதப்படுத்தாமல் அது தரும் வளங்களை உண்டு சூழலியலைப் பாதுகாக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையைக் குழந்தைகள் அறிந்துகொள்ளவே இந்த முகாம். ஐவகை நிலங்களுக்குத் தலையாக இருப்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சி சரியாக இருந்தால்தான், மற்ற நான்கும் சரியாக இருக்கும் என்பதால் குறிஞ்சி நிலத்தை குழந்தைகள் முகாமுக்காகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 30-ல் தொடங்கிய இந்த முகாமில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்தக் குழந்தைகள், தூரத்தில் தெரிந்த யானையையும் அருகில் வந்து வாலாட்டிச் சென்ற சிங்கவால் குரங்குகளையும் பல குரலில் பேசிய பறவைகளையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். பூத்துக் குலுங்கிய காட்டுப் பூக்களை கண்டு ரசித்தார்கள். தங்களைச் சுற்றிலும் மரங்கள் இருந்தாலும் அவைகளை அழிக்காமல் எளிமையான ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை அந்தக் குழந்தைகளுக்கு வியப்பைத் தந்தது.
விருந்தாளிகளுக்குத் தங்களின் காடர் இனத்தின் பேச்சு மொழியை சொல்லிக் கொடுத்தனர் ஆதிவாசிக் குழந்தைகள். அதைத் தத்தித் தத்திச் சொல்லிப் பழகிய பள்ளிக் குழந்தைகள், தாங்கள் எடுத்து போன பரிசுப் பொருட்களை ஆதிவாசிப் பிள்ளைகளுக்குக் கொடுத்து ஆனந்தப்பட்டார்கள். ஆதிவாசிகள் தந்த காட்டுப் பழங்களையும் உண்டு களித்தார்கள். அருவியில் குளித்து, ஓடையின் தெளி நீரை அள்ளிக் குடித்து, மலை தேசத்தில் மகிழ்ச்சியின் உச்சம் தொட்ட அந்தக் குழந்தைகள், ஆதிவாசி மக்களுக்குச் சில நாடகங்களையும் நடித்துக் காட்டினார்கள். மூன்றாம் நாள் மாலை ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்றதும், “இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போலாம் சார்” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். சில குழந்தைகள் கண் கலங்கி அழுதே விட்டார்கள்.
“இயற்கையோடு இணைந்த வாழ்க்கை குழந்தைகளை எந்த அளவுக்கு மகிழ்வித்திருக்கிறது என்பதை அந்தத் தருணத்தில் முழுமையாக உள்வாங்க முடிந்தது” என்று சொல்லும் தனராஜ்,
“சிறுவயதில் நமக்குக் கிடைத்த இயற்கையின் கொடைகள், இப்போது நம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஒரு சிலவும் அவர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
போர்வை, தலையணைகூட இல்லாமல் ஆதிவாசி மக்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஏ.சி. போட்டாலும் தூக்கம் வர மறுக்கிறது. இதையெல்லாம் எங்களோடு வந்த குழந்தைகளுக்கு அனுபவ ரீதியாகப் புரிய வைத்தோம். அவர்கள் இனி நிச்சயம் இயற்கை சார்ந்து வாழப் பழகுவார்கள். குழந்தைகள் மத்தியில் மாற்றம் வந்தால், அது சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று சொன்னார் தன்ராஜ்.
முகாம் அனுபவம் குறித்து மாணவர் திருமலை நிறைய விஷயங்களைச் சொன்னார். “விலங்குகளுக்கு மத்தியில் வாழும் ஆதிவாசி மக்கள் விலங்குகளோடு பேசுகிறார்கள். கஷ்டப் பட்டாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார்கள். கடுமையாக உழைத்து, கிடைப்பதை பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். இயற்கையை ரசிக்கவும், மாசுபடுத்தக் கூடாது என்பதை அந்த மக்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்றார்.
இது சமர்த்தான முகாம்தான் இல்லையா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago