சிறுவர்கள் ஓட்டும் ரயில்!

By எஸ். சுஜாதா

குழந்தைகளால் இயக்கப்படும் சில ரயில் சேவைகளில் ஒன்று கியர்மெக்வசுட். ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் இயங்கிவருகிறது. இது குழந்தைகளுக்கான பொம்மை ரயில் அல்ல. பொழுதுபோக்குப் பூங்காவில் இயங்கிவரும் ரயிலும் அல்ல.

நிஜமான ரயில். நிஜமான ரயில் நிலையங்கள். டீசலில் இயங்கும் என்ஜின்கள் ரயில் பெட்டிகளை இழுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைகின்றன. இங்கே குழந்தைகள் பயணிகள் அல்ல, ரயில்வே ஊழியர்கள்!

10 முதல் 14 வயதுள்ள குழந்தைகள், பெரியவர்களின் கண்காணிப்பில் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். ரயிலை ஓட்டுவதும் பராமரிப்புப் பணிகளைச் செய்வதும் மட்டுமே பெரியவர்கள். மற்ற வேலைகள் அனைத்தையும் குழந்தைகளே செய்கிறார்கள். சிக்னல் மாற்றுகிறார்கள். கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார்கள். பயணச் சீட்டு கொடுக்கிறார்கள். பயணச் சீட்டைப் பரிசோதிக்கிறார்கள். ரயில் வருவது, கிளம்புவது குறித்த அறிவிப்புகளைச் செய்கிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது குழந்தைகள், ரயில்வே துறையைப் பற்றி அறிந்துகொள்ளவும் வேலைகளைக் கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற சிறிய தூரங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரயில் நிலையங்களும் தொடங்கப்பட்டன.

1932-ம் ஆண்டு மாஸ்கோவில் கார்கி பார்க்கில் முதல் குழந்தைகள் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் 1948-ம் ஆண்டு குழந்தைகள் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, 50 குழந்தைகள் ரயில் நிலையங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. எஞ்சிய சில ரயில் நிலையங்கள் இன்றும் இயங்கி வருகின்றன. இன்று இவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய முக்கிய இடங்களாக மாறிவிட்டன.

புடாபெஸ்ட் ரயில் நிலையம் தொடங்கி 69 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தன் சேவையைப் பிரமாதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது! 11.2 கி.மீ. தூரத்துக்குச் சமவெளி, குன்றுகளைக் கடந்து செல்கிறது இந்த ரயில். நடுவில் 4 நிறுத்தங்களில் நிற்கிறது.

ரயில்வேயில் ஊழியர்களாகப் பணியாற்ற இன்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், வேலை செய்ய வாய்ப்பு சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

அவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, 4 மாதங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. பிறகு ஓராண்டுக்கு ஊழியர் உரிமம், அடையாள அட்டை, சீருடை போன்றவை அளிக்கப்படுகின்றன.

மாதத்துக்கு 2 முறை ரயில்வேயில் பணிபுரியும் வாய்ப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும். அவர்களின் படிப்புக்கு இடைஞ்சல் இல்லாதவாறு இந்த வேலை கொடுக்கப்படுகிறது. இங்கே பணிபுரியும் குழந்தைகள் ரயில்வே அதிகாரிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில்களும் ரயில் நிலையங்களும் குழந்தைகளால் இயக்கப்படுகின்றன. இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இங்கே வேலை செய்திருக்கிறார்கள்! இன்னும் 500 பேர் வேலை செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.

குழந்தைகளால் அதிக காலம் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமை கியர்மெக்வசுடுக்குக் கிடைத்திருக்கிறது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்று விட்டது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்