எனக்கு நான்கு வயது இருக்கும். சிறிய ஸ்பூனும் அதற்குள் ஓர் இரும்புக் குண்டும் வைத்துக்கொண்டே சுற்றிவருவேன். ஒரு நாள் ஸ்பூனையும் இரும்புக் குண்டையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். அங்கிருந்து வேடிக்கை பார்ப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, என் கையிலிருந்த ஸ்பூனும் இரும்புக் குண்டும் கீழே விழுந்துவிட்டன. இரண்டாவது மாடியிலிருந்து இவை இரண்டும் கீழே இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் சென்றுவிட்டன! அங்கே குளித்துக்கொண்டிருந்த ஒருவர் பயந்து அலறிவிட்டார்!
சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த எங்கள் வீட்டு மனிதர்கள், நான் வெள்ளி குங்குமச் சிமிழைப் போட்டுவிட்டதாக நினைத்துவிட்டனர்.
வேகமாகக் கீழே இறங்கினர். தொட்டிக்குள் இறங்கி தேடினர். அந்தச் சிறிய ஸ்பூனும் குண்டும் கிடைக்கவே இல்லை. களைத்துப் போய் எல்லாரும் வீட்டுக்கு வந்தனர். என்னை அவர்கள் பார்த்த பார்வையில், எனக்கு அழுகை வந்துவிட்டது.
அப்போது என் உறவினர் அலமாரியிலிருந்து குங்குமச்சிமிழை எடுத்துக்கொண்டு வந்தார். “இதோ சிமிழ் இருக்கு... வேற என்ன விழுந்தது?” என்று கேட்டார்.
அதைப் பார்த்ததும் எல்லாருக்கும் நிம்மதியாக இருந்தது. “அடடா, குழந்தையைத் தப்பா நினைச்சுட்டோமே” என்று பேசிக்கொண்டார்கள். உடனே என் அழுகை அதிகமாகிவிட்டது.
“அழாதே, என்ன விழுந்தாலும் பரவாயில்லை” என்று என்னைச் சமாதானப்படுத்தினார்கள்.
நானோ அழுகையை விடுவதாக இல்லை. ஒவ்வொருவரும் என்னென்னவோ சொல்லி, என் அழுகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். நீண்ட நேரம் அழுததில் ஜலதோஷம், காய்ச்சலே வந்துவிட்டது.
இப்படி எதற்காவது நான் அடிக்கடி அழுவேன். காய்ச்சல் வந்துவிடும். அதனால் எனக்கு ‘நித்ய வியாதிக்காரி’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்! செல்லமாக என்.வி.கே.
என் எட்டு வயதில் பூனாவில் குடியிருந்தோம். பள்ளிச் சுற்றுலாவுக்குக் கிளம்பினேன். மதியச் சாப்பாடு (பெரும்பாலும் பூரியும் உருளைக்கிழங்கும்தான்), சிற்றுண்டி, தண்ணீர் எல்லாம் கொண்டு சென்றிருந்தோம்.
இரண்டு இரண்டு பேராக, வரிசையில் ஊர்வலம் போல ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நான்கு ஆசிரியர்கள் எங்களை வழிநடத்திச் சென்றார்கள்.
டெலகானில் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையைப் பார்வையிட வேண்டும். அதற்கு முன்னால் சிறிய மலை ஏற்றம். அதை மலை என்றுகூடச் சொல்ல முடியாது, சிறு குன்றுதான்.
எல்லாரும் உற்சாகமாக ஏற ஆரம்பித்தோம். நானும் தோழியும் இன்னொரு வழியாக வேகமாக ஏறலாம் என்கிற எண்ணத்தில், வரிசையைத் தவறவிட்டோம். நாங்கள் தேர்ந்தெடுத்த வழியில் சாண் ஏறினால், முழம் சறுக்கியது. எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தோம். தட்டுத்தடுமாறி ஏறினாலும் கோயிலை அடைய முடியவில்லை. மலையின் விளிம்புக்கு வந்துவிட்டோம். சுற்றிலும் மலைத்தொடர்கள். கீழே பள்ளத்தாக்கு. நடுவில் நாங்கள்! வெகு தொலைவு வரை மனிதர்களே இல்லை.
அப்போதுதான் வழிதவறிவிட்டோம் என்பதை உணர்ந்தோம். என்ன செய்வது என்று யோசித்தோம். தூரத்தில் புகை கக்கிக்கொண்டு ஒரு ரயில் சென்றது.
“ஐயையோ... தொலைந்துவிட்டோமே...” என்று சொல்லிக்கொண்டே நாங்கள் இருவரும் அழ ஆரம்பித்துவிட்டோம்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பேச்சுக் குரல் கேட்டது. மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்த்தால், எங்களுடன் வந்த மாணவர்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
“எங்களுக்கு முன்னால எப்படி நீங்க வந்தீங்க?” என்று ஆச்சரியத்துடன் சக மாணவன் கேட்க, சிரித்தபடி அவர்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டோம்.
அன்று கணக்குப் பரீட்சை. கணக்கு என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு பயம்தான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் பயந்துகொண்டே சென்றேன். எப்படியோ பரீட்சை எழுதி முடித்துவிட்டேன்.
ஆசிரியர் ஒவ்வொருவரின் சிலேட்டையும் வாங்கி, மதிப்பெண் போட்டுக்கொண்டே வந்தார். என் முறை வந்தது. நாற்பது மதிப்பெண்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தேன். வீட்டில் என்ன சொல்வார்கள் என்று யோசித்தேன். சட்டென்று மதிப்பெண்ணை மாற்றினேன். தைரியமாக வீட்டுக்குச் சென்றேன்.
யாரும் கேட்காமலே சிலேட்டை எடுத்துக் காட்டினேன்.
ஒவ்வொருவரும் சிலேட்டைப் பார்த்துவிட்டு, சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல மதிப்பெண் என்பதால் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, நானும் சிரித்தேன். அதைப் பார்த்து எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“நாற்பத்தி ஐந்துக்கு நாற்பது என்றால் சரி. நீ என்ன நாற்பதுக்கு நாற்பத்தி ஐந்து மதிப்பெண் வாங்கியிருக்கே! அது எப்படி?” என்று என் இரண்டாவது அக்கா கேட்டபோதுதான் என் தவறு புரிந்தது.
அப்போதும் எனக்குக் குற்றவுணர்வு வரவில்லை, கோபம்தான் வந்தது. சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தேன்.
என் தவறைச் சுட்டிக் காட்டி கண்டிக்காததோடு, என்னைச் சமாதானம் செய்து சாப்பிடவும் வைத்தார்கள். எங்கள் குடும்பத்தினரின் இந்தப் பண்பினால், அதற்குப் பிறகு அப்படி ஒரு விஷயத்தை நான் செய்யவே இல்லை.
கட்டுரையாளர், ஓவியர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago