வெற்றி எதில் இருக்கிறது? - கதை

By செய்திப்பிரிவு

உமாதேவி பலராமன்


பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் குதிரைப் பண்ணை இருந்தது. அதில் உள்ள குதிரைகளுக்குத் தினமும் பயிற்சி கொடுத்து, பல்வேறு ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். பயிற்சி கொடுப்பதற்கு ஆள்கள் இருந்தனர். அவர்களும் குதிரைகளுக்குச் சத்தான உணவு கொடுத்து, காலை மாலை என இருவேளையும் குதிரைகளை ஓட விடுவார்கள்.

அந்தக் குதிரைகளில் ஒரு குதிரை மிகவும் கம்பீரமாக இருக்கும். எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசைப் பெற்றுவிடும். அதனால் அந்தக் குதிரைக்கு எல்லோர் மத்தியிலும் மதிப்பு அதிகம்.

அன்று காலை பயிற்சியாளர்கள் வந்து அந்தக் குதிரையைப் பயிற்சிக்கு அழைத்தார்கள். ஆனால், அது வராமல் படுத்துக்கொண்டே இருந்தது. சரி, இன்று ஒரு நாள் போகட்டும் என்று விட்டுவிட்டு மற்ற குதிரைகளுடன் பயிற்சிக்குச் சென்றார்கள். மறுநாளும் இப்படியே அது முரண்டு பிடித்தது. குதிரைக்குத் தான் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறோம் என்ற தலைக்கனம் வந்துவிட்டது. பயிற்சியாளர்களும் சரி, இந்தக் குதிரை எப்படியும் ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் சில நாட்கள் அதன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.

மறுநாள் போட்டிக்கு மற்ற குதிரைகளுடன் இதுவும் சென்றது. ஆனால், முன்பு போல் வேகமாக ஓட முடியவில்லை. போட்டியில் தோல்வி அடைந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. எல்லோர் மத்தியிலும் அந்தக் குதிரைக்கு இருந்த மதிப்பு குறைந்தது. அந்தக் குதிரையைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்ததால் உரிமையாளர், அந்தக் குதிரையை விற்க முடிவு செய்துவிட்டார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குதிரைக்கு அழுகை வந்தது. பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு குதிரை, “நண்பா, கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறியது.

“என்னை விற்கப் போகிறார். நான் எதற்கும் பயனில்லாதவன் ஆகிவிட்டேன். உங்களை எல்லாம் விட்டு நான் பிரியப் போகிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? இவ்வளவு நாள் நான் வெற்றி பெற்றுக்கொண்டுதானே இருந்தேன்? இப்போது எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை...” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது அந்தக் குதிரை.

“நண்பா, நீ தினமும் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தாய். திடீரென்று பயிற்சிக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாய். பயிற்சிதான் நம் செயலைச் சிறந்ததாக மாற்றும். உன் தோல்விக்குக் காரணம் பயிற்சியைக் கைவிட்டதுதான். சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும். இதை நீ புரிந்துகொள். இப்போதும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இன்று முதல் நீ பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். பழையபடி ஆகிவிடுவாய். உன் திறமையைக் காணும் உரிமையாளர், உன்னை விற்க மாட்டார். சரி, என்னுடன் பயிற்சிக்கு வருகிறாயா?” என்று கேட்டது அந்தக் குதிரை.

“நீ சொல்வது சரிதான். பயிற்சி இல்லாமல் வெற்றி பெற முடியும் என்று எண்ணி, முயற்சியும் பயிற்சியும் இல்லாமல் இருந்தது தவறுதான். இனி தினமும் பயிற்சிக்கு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தது குதிரை.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்