படிக்கும் ஆர்வத்தில் மாட்டைத் தொலைத்தேன்! - சோ. மோகனா

By செய்திப்பிரிவு

பச்சைப் பசேல் என்று எப்போதும் மரகதப் பட்டைப் போர்த்திக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு கிராமமான சோழம்பேட்டைதான் எங்கள் ஊர். அன்றைய கிழக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தது. இன்றும் ஊரை நினைத்தாலோ வீட்டை நினைத்தாலோ நினைவில் வருவது, வீட்டுக்குப் பின்னால் உள்ள குளம்தான். வரிசையாக ஆறு தென்னை மரக்கட்டைகளைப் போட்டு, படித்துறை அமைத்திருப்பார்கள். அதில் இறங்கி, குளத்தில் நீச்சல் அடித்தால் நேரம் போவதே தெரியாது. பக்கத்து வீட்டில் இருந்த அம்பா பாய்தான் எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தார்.

சிறுமி மோகனா

அந்த ஊருக்கு அருகில் உள்ள ராமாபுரம் பள்ளியில்தான் 5ஆம் வகுப்பு வரை படித்தேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே அப்பாவுக்குத் தெரியாமல், கதைகளை வாசிப்பேன். அப்பா சாப்பிடச் செல்லும்போது, தினமணி கதிரில் உள்ள கதைகளைப் படித்துவிடுவேன். அப்பா யாரிடமிருந்தோ ‘காளிங்கராயன் நர்த்தனம்’ என்கிற கிருஷ்ணனின் லீலைகள் பற்றிய புத்தகத்தை வாங்கி, எனக்குத் தெரியாமல் கடையில் ஒளித்து வைத்திருப்பார். ஆனால், நான் அப்பாவுக்குத் தெரியாமல் தேடி எடுத்துப் படித்துவிட்டு, இருந்த இடத்தில் வைத்துவிடுவேன். கடைக்காக அப்பா வாங்கும் ஆனந்த விகடனையும் படிப்பேன்.
கையில் கிடைக்கும் எல்லா அச்சுத் தாள்களையும் படித்துவிடுவேன். மிக்சர் கட்டிய தாள், சுழியன் வாங்கி வந்த தாள் என ஒன்றையும் விடமாட்டேன்.

வீட்டுக்குப் பின்னால் உள்ள இடத்தில் வாழை, எலுமிச்சை, நாரத்தை, மா, புளி போன்ற மரங்கள் இருக்கும். கேழ்வரகு, மஞ்சள், கத்தரி, அவரை, புடலை, கொத்தவரை எல்லாம் பயிரிடுவோம். எங்கள் ஊர் காவிரிக்கு அருகில் உள்ளதால் வண்டல் மண் நிறைந்த வளமான பூமி. வேண்டாம் என்றாலும் தேவைக்கு மேல் கொட்டித் தீர்க்கும் பருவ மழை.

அப்பா நீர் இறைக்கும்போதும் கொல்லை கொத்தும்போதும் நானும் அப்பாவோடு சேர்ந்து வேலை செய்வேன். பாத்தி கட்டி, ஏற்றம் இழுப்பேன். எந்த வேலையையும் செய்யத் தயங்க மாட்டேன். தோட்டத்தில் விளைந்த மாங்காய்களை எடுத்துச் சென்று விற்று வருவேன்.

சோழம்பேட்டையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருந்தது சித்தர்காடு. அங்கு வாரம்தோறும் திங்கள் கிழமை சந்தை நடக்கும். தென்னந்துடைப்பம், கூரை வேயும் பாளை, வாழை இலை, தேங்காய், வாழைக்காய், எலுமிச்சை, நாரத்தை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மயிலை ஆச்சி துணையோடு காலை 5 மணிக்கே புறப்பட்டுவிடுவேன். சந்தையில் பொருள்களை எல்லாம் விற்றுவிட்டு, ஒரு வாரத்துக்கு வீட்டுக்குத் தேவையான கத்தரி, உருளைக்கிழங்கு, கருவாடு, பருப்பு போன்ற பொருள்களை வாங்கிக்கொண்டு நடந்தே வீட்டுக்கு வருவேன்.

எங்கள் ஊரிலிருந்து ஆறாம் வகுப்புக்கு வெளியூர் பள்ளிக்குப் படிக்கச் சென்ற ஒரே பெண் நான் மட்டுமே. மாணவர்கள் எல்லாம் சீக்கிரமே கிளம்பிச் சென்றுவிடுவார்கள். நான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவதற்குத் தாமதமாகிவிடும். அதனால், ஒரு விளக்குக் கம்பத்திலிருந்து இன்னொரு விளக்குக் கம்பத்துக்கு ஓடிக் கடப்பேன். அடுத்து நடந்து கடப்பேன். மீண்டும் ஓடிக் கடப்பேன். இப்படியே பள்ளிக்கு முக்கால் மணி நேரத்தில் சரியாகச் சென்று சேர்ந்துவிடுவேன்.

எங்கள் வீட்டில் பசு மாடுகளும் பெரிய எருமை மாடும் இருந்தன. விடுமுறை நாட்களில் மாட்டுக் கொட்டகையில் சாணி அள்ளி சுத்தம் செய்வதும், மாட்டுக்கு வைக்கோல் போடுவதும், புண்ணாக்குடன் தீவனம் போடுவதும் என் வேலைதான். பயத்துடன் பால் கறப்பதும் உண்டு. சாணியை வரட்டியாக்கி, விற்றுவிடுவேன். பொருள்களை விற்பதிலும் பேரம் பேசி வாங்குவதிலும் நான் கில்லாடி!

மாடுகளை மேய்க்கும் பொறுப்பும் குளிப்பாட்டும் பொறுப்பும் எப்போதும் எனக்குத்தான். நான் 6ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, எருமை மீது கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு செல்வது பிடிக்கும்.

அப்படி ஒரு முறை மாடு மேய்த்துக்கொண்டு போனேன். ஒரு மரத்தடியில் அமர்ந்து பள்ளிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று நிமிர்ந்து பார்த்தால் அந்த மாட்டைக் காணவில்லை. மாடு இல்லாமல் வீட்டுக்கு எப்படிப் போவது? என்னால் மாலை வரை மாட்டைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

மாடு இல்லாமல் வீட்டுக்கு வருவதைப் பார்த்த ஆத்தா லட்சுமி பதைபதைத்துப் போனார். பயத்தில் அழுகை வந்துவிட்டது. அப்பாவை நினைத்தபோது பயம் இன்னும் அதிகமானது. இரவு அப்பா வீட்டுக்கு வந்தவுடன் தகவல் சொல்லப்பட்டது. அடித்த அடியில் முதுகே புண்ணாகிவிட்டது. வலியில் அழுதுகொண்டே தூங்கிவிட்டேன். நான்கு நாட்களுக்குப் பிறகு தொலைந்த மாடு தானாகவே வீட்டுக்கு வந்துவிட்டது! ஆனால், நான் வாங்கிய அடிகளைத் திரும்ப வாங்க முடியுமா?

கட்டுரையாளர், பேராசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்