26 மே, சாலி ரைடு பிறந்தநாள்: விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்!

By ஸ்நேகா

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்கிற பெருமையைப் பெற்றவர் சாலி ரைடு. விண்வெளிக்குச் சென்ற மூன்றாம் பெண் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

1951மே 26 அன்று கலிபோர்னியாவில் பிறந்தார். படிப்பில் ஆர்வம் இருந்தாலும் டென்னிஸ் வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரால் முடியாது என்று ஒருகட்டத்தில் தெரிந்தது. பிறகு இயற்பியல் துறையில் கவனத்தைச் செலுத்தி, பட்டம் பெற்றார்.

1977ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பெண்களை அனுப்புவதற்காகச் செய்தித்தாளில் விளம்பரம் செய்திருந்தது ‘நாசா’ அமெரிக்க விண்வெளி மையம். சாலியும் விண்ணப்பித்தார். சுமார் எட்டாயிரம் விண்ணப்பங்களில் இருந்து நாசா தேர்ந்தெடுத்த வெகு சிலரில் சாலியும் ஒருவர். ஆறு ஆண்டுகள் நாசாவில் பயிற்சி எடுத்த பிறகு, 1983ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று சாலி விண்வெளிக்குப் பறந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி வந்தார். சாலியின் திறமையால் 1984ஆம் ஆண்டு மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

1987ஆம் ஆண்டு நாசாவிலிருந்து வெளியேறி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அறிவியலும் கணிதமும் படிக்க விரும்பும் பெண்களுக்கு உதவினார். பள்ளி மாணவர்களுக்கு விண்வெளித் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.

2003ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தி அஸ்ட்ரானட் ஹால் ஆஃப் ஃபேம் ஹானர்ஸ்’ இவருக்கு வழங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் மரணம் அடையும்வரை, மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தார். சிறார்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் அறிவியல் புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்கா முழுவதும் அறிவியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE