உலகம் முழுவதும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்று ‘தி ஜங்கிள் புக்’. எத்தனை முறை சினிமாவாக எடுத்தாலும், டி.வி. தொடராக எடுத்தாலும் பார்க்கப் பார்க்க அலுக்காத ஓர் அற்புதம்!
மனிதர்களுக்கும் விலங்கு களுக்குமான தொடர்பு பல நூறு ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. மனிதர்களுக்கு நல்ல பண்புகள், அறிவுரை போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்க, விலங்குகளைப் பயன்படுத்திக் கதை சொல்லும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. மனிதர்கள் மூலம் நல்ல விஷயங்களைச் சொல்வதைவிட, விலங்குகள் மூலம் சொல்லும்போது எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது. அப்படி ஒரு கதைதான் ஜங்கிள் புக்.
ஒரு மனிதக் குழந்தைக்கும் விலங்குகளுக்கும் இடையே ஏற்படும் அன்பு, நட்பு, விரோதம் போன்றவற்றை மிக அழகாகக் காட்டியிருக்கிறது. ஓநாய்கள் வளர்த்த குழந்தை மவுக்லி. அவனது நெருங்கிய தோழன் கருஞ்சிறுத்தை. காடுகளைப் பற்றியும் காட்டு விலங்குகளின் இயல்புகள் பற்றியும் அவன் பாடம் கற்றுக்கொண்டது கரடியிடம். அவனுடைய எதிரி புலி. இந்தத் தனித்தனி விலங்குகளின் குணங்கள் அனைத்தையும் மனிதன் என்ற ஓர் உயிரினத்திடம் பார்க்க முடியும். நாம் சந்திக்கிற மனிதர்களில் யார் கரடி, யார் கருஞ்சிறுத்தை, யார் புலி என்பதை வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் கற்றுத்தருகிறது.
உலகம் முழுவதும் காட்டு விலங்குகள் மனிதக் குழந்தையை வளர்த்த கதைகள் இருக்கின்றன. நிஜத்தில் மவுக்லியைப் போல ஓநாய்களோ, வேறு விலங்குகளோ ஒரு குழந்தையை வளர்த்திருக்கின்றனவா? அது சாத்தியமா?
உலகம் முழுவதும் தேடிப் பார்த்தால் அப்படிச் சில நிகழ்வுகள் உண்மையிலேயே நடந்திருக்கின்றன. ஓநாய்கள் மட்டுமல்ல நாய், ஆடு, கரடி, குரங்கு போன்ற விலங்குகள் மனிதக் குழந்தைகளுக்கு ஆதரவளித்து, வளர்ப்புப் பெற்றோராக இருந்திருக்கின்றன!
1991-ம் ஆண்டு உக்ரைனில் 7 வயது சிறுமி காட்டில் நாய்களுக்கு நடுவே கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டாள் அவள். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் கைவிடப்பட்டு, நாய்களோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறாள். அந்தச் சிறுமியால் பேசவே முடியவில்லை. நாய்களைப் போலவே தன்னைச் சுத்தம் செய்துகொண்டாள். நாய்களைப் போலவே பல செயல்களையும் செய்தாள். ஆக்ஸனா என்று பெயரிடப்பட்டாலும் அவளை ‘நாய்ப் பெண்’ என்றே மக்கள் அழைத்தார்கள். உறைய வைக்கும் குளிரிலிருந்து ஆக்ஸனாவை நாய்கள் காப்பாற்றியிருக்கின்றன. உணவுக் கொடுத்திருக்கின்றன. அவளை 5 ஆண்டுகள் வளர்த்திருக்கின்றன.
1998-ம் ஆண்டு மாஸ்கோ காவலர்களால் இவான் என்ற சிறுவன் மீட்கப்பட்டான். பிச்சை எடுத்து வாழ்ந்த அவன், 2 ஆண்டுகள் நாய்களுடன் வசித்தவன். அவனுக்கு மனிதர்கள் யாரிடமும் பழக்கம் இல்லை. நாய்கள்தான் கடும் குளிர்காலத்தில், அவன் மீது படுத்துக் குளிரிலிருந்து காப்பாற்றியிருக்கின்றன. அவனைத் தொந்தரவு செய்தவர்களை விரட்டி அடித்திருக்கின்றன. அவனையும் ‘நாய்ப் பையன்’ என்றே அழைத்தார்கள்.
ஆக்ஸனாவின் செயல்களில் பெரும்பாலும் நாய்களின் பண்புகள் இருந்தன. ஆனால் இவான் நகரத்தில் வசித்ததால் மனிதப் பண்புகளுடன் இருந்தான்.
ஆக்ஸனாவும் இவானும் தங்கள் பாதிப்பிலிருந்து விலகி, பிற்காலத்தில் இயல்பான மனிதர்களானார்கள். இவான் ராணுவத்தில் சேர்ந்தார். ஆக்ஸனா விலங்குகள் பண்ணையில் வேலை செய்தார்.
1988-ம் ஆண்டு உகாண்டாவில் 6 வயது சிறுவன் ஜான் ஸெபுன்யா காட்டில் குரங்குகளோடு வசித்தபோது கண்டறியப்பட்டான். அவனது அம்மா இறந்த பிறகு காட்டுக்குச் சென்றுவிட்டான். அடுத்த 3 ஆண்டுகள் குரங்குகளே அவனைப் பராமரித்து வந்தன. அவனுடைய கதையைக் கேட்டபோது நிஜமான மவுக்லி, டார்ஸான் போலவே இருந்தது. குரங்குகள் உணவு ஊட்டிவிட்டுள்ளன, மரத்துக்கு மரம் தாவும் வித்தையைக் கற்றுக்கொடுத்துள்ளன. மற்ற விலங்குகளிடமிருந்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றன. அவனுடன் சேர்ந்து விளையாடியிருக்கின்றன. குரங்குகளைப் போலவே அவனுடைய தோல் முழுவதும் ரோமத்தால் மூடப்பட்டிருந்தது.
ஜானுக்கு மருத்துவம் செய்தனர். அவனுக்கு மனிதர்களின் பழக்கங்களைக் கற்றுக்கொள்வது மிகச் சிரமமாக இருந்தது. மறுவாழ்வு மையத்தில் வளர்ந்த ஜான், 32 வயதில் இயல்பான மனிதனாக மாறினார். அருமையாகப் பாடுகிறார். உடல் ரோமங்கள் மறைந்துவிட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் யாகுடியா கிராமத்தில் வசித்த 4 வயது கரினா சிகிடோவா, தன் நாய் நைடாவுடன் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றுவிட்டாள். திரும்பி வர வழி தெரியவில்லை. ஓநாய்களும் கரடிகளும் வசிக்கும் அந்தக் காட்டில், கரினாவைக் காப்பாற்றியது நாய்தான். இரவில் உறைய வைக்கும் குளிர். பெரிய மரத்தின் வேர்களுக்குள் கரினவைப் படுக்க வைத்து, அவள் மீது நாய் படுத்துக்கொண்டது. இதனால் கரினா குளிரிலிருந்து காப்பாற்றப்பட்டாள். பெர்ரி பழங்களைச் சாப்பிட்டு, ஓடையில் நீர் அருந்தி, 9 நாட்களைக் கடத்தினாள். ஒரு காவல்படை கரினாவை மீட்டது. சில மாதங்கள் கரினா மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.
மனிதர்கள் விலங்குகளை வளர்க்கும்போது, அவற்றுக்குத் துன்பங்கள் வருவதில்லை. மனிதர்கள் பக்குவமாக விலங்குகளைக் கையாள்வார்கள். ஆனால், விலங்குகள் தங்களுக்கு இருக்கும் அறிவைக் கொண்டு குழந்தைகளை வளர்க்கும்போது அத்தனை பாதுகாப்பாகவும் முறையாகவும் இருக்காது. சிந்திப்பது, செயல்படுவது, பேசுவது, சாப்பிடுவது என்று அனைத்துமே விலங்கிலிருந்து வித்தியாசப்படுகிறான் மனிதன். விலங்குகளால் மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடிகிறதே தவிர, அவர்களை மனிதர்களாக வளர்க்க இயலாது. விலங்குகள் வளர்த்த குழந்தைகள் ஒவ்வொன்றுமே, மனித இயல்புகளோடு இயல்பாக மாறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது.
மவுக்லிக்கு இருந்தது போல காட்டு வாழ்க்கையும் விலங்குகளின் தோழமையும் நிஜ மனிதக் குழந்தைகளுக்குக் கிடைக்காது. இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் மவுக்லியைக் கொண்டாடலாம். நிஜத்தில் மனிதர்களால் கைவிடப்பட்டு, விலங்குகளால் வளர்க்கப்பட்டு, மீட்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் பரிதாபமானதே.
கதைகளில் மனிதக் குழந்தைகளை விலங்குகள் காப்பாற்றட்டும். வளர்க்கட்டும். அந்த சுவாரசியமான கற்பனையை ரசிப்போம். நிஜத்தில் ஒரு குழந்தைக்குக்கூட இந்த நிலை ஏற்படக் கூடாதல்லவா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago