சிறுவயதில் நான் ஒரு பெரிய பெட்டிக்கடைக்காரனாக விரும்பினேன்.
இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கனவு காண்பதுதான் காண்கிறோம், ஒரு மளிகைக்கடை அளவுக்காவது கற்பனை செய்திருக்கலாம். ஆனால், கிணற்றில் பிறந்து, வளர்ந்த தவளைக்குப் பசிபிக் பெருங்கடல் தெரியாது, அதன் அளவில்தான் அதனால் கற்பனை செய்ய இயலும். எனக்கு அன்றைக்குப் பெட்டிக்கடைதான் பெரிய இலக்காகத் தோன்றியது.
காரணம், என் நண்பன் ஒருவனின் தந்தை நகரின் முக்கிய இடத்தில் பெட்டிக்கடை வைத்திருந்தார். அவருடைய கடையில் பல பொருட்கள் விற்பனையானாலும் அவற்றுள் என்னை மிகவும் ஈர்த்தது உருண்டை வகைகள்தாம். முழு வேர்க்கடலை உருண்டை, உடைத்த வேர்க்கடலை உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, எள் உருண்டை, இன்னும் ஏதேதோ வகைகள். அனைத்தையும் முழ நீளக் கண்ணாடி பாட்டில்களில் போட்டுக் கடைக்கு முன்னால் அடுக்கிவைத்திருப்பார். வருகிறவர்களுடைய தேவைக்கேற்ப ஓரிரு உருண்டைகளை எடுத்து, செய்தித்தாள் நறுக்கு ஒன்றில் வைத்து நீட்டுவார். அவர்களும் பேரின்பத்தோடு அதைத் தின்றபடி நடப்பார்கள்.
» மே 7: ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்: உங்களுக்கான சாந்திநிகேதன் எங்கே?
» ஒரு பேப்பர் ரோஸ்ட்டும் நான்கு கப் சாம்பாரும்! - தேவி நாச்சியப்பன்
அந்த வயதில் ஏழெட்டு வகை உருண்டைகளைக் கொண்ட கண்ணாடி பாட்டில்கள்தாம் எனக்கு அதிகாரத்தின் பேரடையாளமாகத் தோன்றின. அவரை ஒரு வணிகராக அல்லாமல் ஊரின் சிறுபசியைத் தீர்க்கிற அலுவலராக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த நகரமும் அந்த உருண்டைகளுக்காக அவரைச் சார்ந்திருப்பதுபோல் எனக்குள் ஒரு பிம்பம் தோன்றிவிட்டது.
எப்போதாவது, என் நண்பனின் தந்தை வீட்டுக்குச் சாப்பிடச் சென்றிருக்கும்போது அவருடைய இடத்தில் என் நண்பன் அமர்ந்திருப்பான். அப்போது அவனுடைய முகமும் சரி, உடல்மொழியும் சரி, ஓர் இளவரசனுக்குரிய கம்பீரத்துடன் மாறிவிடும். எங்களைத் துரும்பெனப் பார்த்து, ‘வியாபாரம் நடக்கற நேரத்துல தொந்தரவு செய்யாதீங்க, அந்தப் பக்கமா நில்லுங்க’ என்பான். ‘நம்மோடு பள்ளியில் சுற்றித் திரிந்த பயல்தானா இவன்’ என்று எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.
ஆனால், இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? அந்த ஏழெட்டுக் கண்ணாடி பாட்டில்களும் அவன் பொறுப்பில் வருகிறபோது அவனும் ஓர் அதிகார மையமாக மாறிவிடுகிறான் அல்லவா? இதனால், பெட்டிக்கடையின்மீது என் ஆசை மேலும் மிகுதியானது.
இன்னொரு காரணம், என் தந்தையின் நண்பர் ஒருவர் காவல் நிலையத்துக்கு அருகில் பீடாக்கடை வைத்திருந்தார். அவ்வப்போது அவருடைய கடைக்குச் செல்லும்போது சுற்றியிருக்கிறவர்கள் அவருக்குத் தருகிற மதிப்பும் அவருடைய கம்பீரமான பேச்சுகளும் என்னைக் கவர்ந்திழுக்கும். கடைக்காரர்கள் என்றால் ஊர் கும்பிடு போடும் என்ற எண்ணம் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
எங்கள் வீட்டில் யாரும் கடை வைத்தவர்கள் கிடையாது. தந்தை, தாய் இருவரும் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவர்கள். உறவினர்கள் வட்டத்தில்கூடத் தொழில்முனைவோர், கடைக்காரர்கள், வணிகர்கள் என்று யாரும் இல்லை. அதனால், நான் என்னுடைய பெட்டிக்கடை விருப்பத்தைச் சொன்னபோதும் அதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை, சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.
ஆனால், நான் கடை வைப்பதில் உறுதியாக இருந்தேன். எங்கு, எப்போது, எப்படி, என்னவெல்லாம் விற்பது என்று ஏதும் தெரியாது. ஆனால், கடை வைத்தாக வேண்டும், அது கட்டாயம். இந்த எண்ணம் உள்ளுக்குள் மேலும் மேலும் வலுவாகிக்கொண்டிருந்தது.
ஒருநாள், என் தாய் தேங்காய் பர்ஃபி வாங்கிவந்தார். வெல்லத்தில் செய்த பழுப்பு நிறக் குட்டிக் குட்டி பர்ஃபிகள் தேனைப்போல் இனித்தன. ஒரு பர்ஃபியைச் சாப்பிட்டதும் எனக்குள் சட்டென்று அந்த யோசனை வந்தது, ‘நாம பர்ஃபி கடை வெச்சா என்ன?’
அப்போது என் கைவசம் இருந்தது நான்கே நான்கு பர்ஃபிகள்தாம். அதனால் என்ன? சின்னப் பையன், சின்னக் கடை, சின்னப் பர்ஃபி. சரியாகதானே இருக்கிறது?
நான் சட்டென்று உள்ளறைக்குச் சென்று ஓர் அமர்பலகையைத் தூக்கிக்கொண்டேன். குடுகுடுவென்று வெளியில் ஓடினேன். எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த காலி நிலத்தின் ஒரு மூலையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டேன். எதிரில் அந்தப் பலகையை வைத்து அதன்மீது நான்கு குட்டி பர்ஃபிகளை வரிசையாக அடுக்கினேன். வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரம் ஆனது. யாரும் வரவில்லை, ‘பர்ஃபி என்ன விலை?’ என்று என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை கேட்டிருந்தால் என்ன விலை சொல்வது என்றுகூட எனக்குத் தெரிந்திருக்காது!
நான் விற்காத பர்ஃபிகளைக் கூர்ந்து கவனித்தேன். அவை விற்கவில்லை என்கிற வருத்தத்தைவிடப் பசியும் ஏக்கமும்தான் மிகுதியாக இருந்தன. அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு தெருவைப் பார்த்தேன், யாராவது வருவார்கள், இன்னும் சிறிது நேரம் காத்திருப்போம் என்று தோன்றியது.
நேரம் ஆக ஆக, என்னுடைய உறுதி குறைந்தது. முதலில், பர்ஃபிகளுக்கு இடையில் விழுந்திருந்த தேங்காய்த் துணுக்குகளை எடுத்துத் தின்றேன். பிறகு, ஒரு பர்ஃபியின் ஒரு மூலையை மட்டும் விண்டு ருசித்தேன். அதன்பிறகு, ‘இனிமே இதை யார் வாங்குவாங்க?’ என்றபடி மீதமிருந்த பர்ஃபியையும் எடுத்துத் தின்றேன். ‘இன்னும் மூணு இருக்கே, அதை வித்துக்கலாம்’ என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
ஆனால், என்னுடைய கடைக்கார மூளையைவிடத் தீனிக்கார நாக்கு என்மீது அதிக ஆதிக்கம் செலுத்தியதால், சிறிது நேரத்தில் கொஞ்சங்கொஞ்சமாக மற்ற மூன்று பர்ஃபிகளும் காலியாகிவிட்டன. மீதியிருந்தவை வெறும் பலகையும் நானும்தான்.
சரியாக அந்த நேரத்தில் எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் வந்தார், ‘என்னடா, இங்க உட்கார்ந்திருக்கே?’ என்றார். ‘ஒண்ணுமில்லை’ என்று சொல்லிவிட்டுப் பலகையைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டேன்.
அவர் நல்ல மனிதர், என்னிடம் எப்போதும் அன்பாகப் பேசுகிறவர். ஒருவேளை, அவர் ஐந்து நிமிடத்துக்கு முன்னால் வந்திருந்தால் எனக்காக ஒரு பர்ஃபியைக் காசு கொடுத்து வாங்கியிருக்கக்கூடும். நானும் என்னுடைய தொழில் முயற்சிகளைப் படிப்படியாகத் தொடர்ந்து இன்றைக்கு ஒரு மாபெரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உரிமையாளனாக இருந்திருக்கக்கூடும்.
பரவாயில்லை, அந்தக் கணத்தில் அந்த நான்கு பர்ஃபிகளும் ருசியாகத்தான் இருந்தன!
என். சொக்கன், எழுத்தாளர்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago