செவ்வாய்க் கோளில் சூரிய கிரகணம்!

By ஸ்நேகா

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் பூமி மீது விழும். அப்போது சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். இதே போன்ற சூரிய கிரகணம் செவ்வாய்க் கோளிலும் நிகழ்கிறது என்பதை நாசா அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் ரோவர் கலம் படம்பிடித்து அனுப்பியிருக்கிறது.

பூமியும் செவ்வாய்க் கோளும்

செவ்வாய்க் கோளுக்கு இரண்டு சந்திரன்கள். அவற்றில் ஒன்றான போபோஸ் சந்திரன், செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்ந்ததைப் படம்பிடித்திருக்கிறது பெர்சிவரன்ஸ் ரோவர். இது 40 நொடிகளுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.

2022 ஏப்ரல் 2 அன்று பெர்சிவரன்ஸ் ரோவரில் உள்ள Mastcam-Z கருவி சூரிய கிரகணத்தைப் படம்பிடித்துள்ளதை நாசா விண்வெளி ஆய்வகம் வெளியிட்டிருக்கிறது. போபோஸ் 17 மைல்கள் (27 கிலோமீட்டர்) குறுக்களவு கொண்டது. சுமார் 3,700 மைல்கள் (6,000 கிலோமீட்டர்) தொலைவிலிருந்து செவ்வாய்க் கோளைச் சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை செவ்வாய்க் கோளைச் சுற்றி வருகிறது.

பெர்சிவரன்ஸ் ரோவர்

பூமியின் சந்திரன் போபோஸைவிட 157 மடங்கு பெரியது. செவ்வாய்க் கோளில் இருந்து போபோஸ் இருக்கும் தொலைவைப் போல், பூமியிலிருந்து 60 மடங்கு தொலைவில் சந்திரன் சுற்றுகிறது.

பெர்சிவரன்ஸ் ரோவர் 2021 பிப்ரவரியில் செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது. அதிநவீன கருவிகளுடன் செவ்வாய்க் கோளுக்குச் சென்ற முதல் கலம் இது. Mastcam-Z கருவியானது நாசாவின் கியூரியாசிட்டி ரோவரில் உள்ள Mastcam கருவியைவிட மேம்படுத்தப்பட்டது. 2012 இல் செவ்வாய்க் கோளுக்கு வந்த கியூரியாசிட்டி ரோவர், போபோஸ் மூலம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தைக் குறைந்த தெளிவுத்திறன் கொண்ட காட்சியாகப் படம்பிடித்தது. Mastcam-Z தான் தெளிவான காட்சியைப் படம்பிடித்துத் தற்போது அனுப்பியிருக்கிறது.

போபோஸ் சந்திரன்

Mastcam-Z கருவியானது, பெரிதாக்கக்கூடிய கேமராக்களைக் கொண்டுள்ளது. இது செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் உள்ள தொலைதூரப் பாறைகள், புவியியல் அம்சங்களைப் பற்றிய காட்சிகளை விஞ்ஞானிகளுக்கு வழங்கிவருகிறது.

செவ்வாய் சூரிய கிரகணத்தை, செவ்வாய்க் கோளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் பார்த்ததைப் போல, நாமும் இங்கிருந்து பார்க்க முடிகிறது என்பது ஆச்சரியமானது. செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் போபோஸின் சுற்றுப்பாதையை அளவிட இந்த கிரகணங்கள் குறித்த செய்திகள் உதவுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

போபோஸ் சந்திரன் 100 வருடங்களுக்கு ஒருமுறை சுமார் 6 அடி (1.8 மீட்டர்) தொலைவு செவ்வாய்க் கோளை நெருங்கிவருகிறது. இது சுமார் 5 கோடி ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதும், அல்லது உடைந்த துகள்கள் செவ்வாய் கோளைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE