என்னைச் சிந்திக்கத் தூண்டிய இரு சம்பவங்கள்! - த.வி. வெங்கடேஸ்வரன்

By த.வி.வெங்கடேஸ்வரன்

நான்காம் வகுப்பில் ஆசிரியர் திருக்குறளில் ‘புலால் உண்ணாமை’ குறித்துப் பாடம் எடுத்தார். மறுநாள் வகுப்புக்குள் நுழையும்போது பெரும் சலசலப்பு. வள்ளியின் பெற்றோர், ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

“இவளுக்கு மீன் குழம்புனா ரொம்பப் பிடிக்கும். இனிமேல் அசைவம் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா. எங்களையும் சாப்பிடக் கூடாதுனு சொல்றா” என்று வருத்தப்பட்டார் வள்ளியின் அம்மா.

ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளியிடம் காரணம் கேட்டார்.

“சார், நீங்கதானே புலால் உண்ண வேண்டாம்னு பாடம் எடுத்தீங்க... அதனாலதான் எனக்கு ஒரு உயிரைக் கொன்னு சாப்பிட விருப்பமில்லை” என்று வள்ளி சொன்னவுடன் ஆசிரியர் அதிர்ந்துவிட்டார்.

“அது என் கருத்து இல்லம்மா. திருக்குறளில் சொன்னதைத்தான் சொல்லிக் கொடுத்தேன்” என்று ஆசிரியர் சொன்னபோது பரிதாபமாக இருந்தது.

“வள்ளி சொல்லிருச்சுல்ல, இனிமேல் நம்ம வீட்ல அசைவம் சமைக்க வேணாம்” என்று வள்ளிக்கு ஆதரவாக நின்றார் அவள் அப்பா.

“இறைச்சி இல்லைனா எப்படி உடலுக்கு வலு வரும்?” என்று கோபத்துடன் கேட்டார் வள்ளியின் அம்மா.

ஒருவழியாகப் பிரச்சினை முடிந்து வள்ளியின் பெற்றோர் கிளம்பினார்கள். அன்று முதல் வள்ளியின் வீட்டில் அசைவம் செய்வதில்லை. தான் கொண்ட கொள்கையில் அவ்வளவு உறுதியாக இருந்தாள் வள்ளி.

வகுப்பில் குழுவாகப் பிரிந்து, அந்தந்த மாணவர்களோடு மட்டும்தான் நெருக்கமாகப் பழகுவார்கள். ஆனால், எந்த ஒரு குழுவோடும் அடையாளப்படுத்தப்படாத ஒரே ஒரு ஜீவன் வள்ளி மட்டும்தான்! அனைவரிடமும் நட்பாக இருப்பாள்.

பள்ளியில் விசித்திரமான தண்டனை இருந்தது. வகுப்பில் பேசினால், வீட்டுப் பாடத்தை முடிக்காமல் வந்தால், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், பெற்றோர் ஆசிரியரிடம் புகார் கூறினால் அந்தத் தண்டனை அளிக்கப்படும். மாணவராக இருந்தால் இரண்டு மாணவியர் இடையே அந்த வகுப்பு முழுவதும் உட்கார வேண்டும்; மாணவியாக இருந்தால் இரண்டு மாணவர்களுக்கு நடுவே உட்கார வேண்டும். அடித்தால்கூடத் தாங்கிக்கொள்வோம். இந்தத் தண்டனை அதைவிட வலியாக இருக்கும் அந்த வயதில்.

நடுவில் மாணவர் உட்கார்ந்தால், இரண்டு மாணவியரும் விலகி விலகி உட்காருவார்கள். முகத்தைச் சுளிப்பார்கள். மற்றவர்கள் அந்தக் காட்சியைக் கண்டு சிரிப்பார்கள். வள்ளியின் அருகே உட்கார தண்டனை கிடைத்தால் நிம்மதியாக இருக்கும். அவள் முகம் சுளிக்க மாட்டாள். நட்புடன் சிரிப்பாள். இயல்பாக இருப்பாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் சந்தித்த முதல் பெண் வள்ளிதான்!

திடீரென்று வள்ளி பள்ளிக்கு வரவில்லை. மஞ்சள் காமாலை என்று பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணி அடிக்கப்பட்டது. வள்ளி இறந்ததால் இன்று விடுமுறை என்று அறிவித்தார்கள்.

எல்லோரும் அவள் வீட்டுக்குச் சென்றோம். நான் நேரடியாகச் சந்தித்த முதல் மரணம். வள்ளியின் அம்மா கதறிக்கொண்டிருந்தார். அசைவற்று அமர்ந்திருந்த அவள் அப்பா, திடீரென்று வீட்டிலிருந்த சாமிப் படங்களை எடுத்து உடைத்தார்.

“நீ இருப்பது உண்மையாக இருந்தால் என் வள்ளியை உயிரோடு கொடு” என்று கத்தினார்.

எனக்குள் இந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டபோது, ‘இறைவா என் உயிரை எடுத்துக்கொண்டு, என் மகனைப் பிழைக்க வை’ என்று கடவுளிடம் வேண்டினார். ஹுமாயுன் பிழைத்துக்கொண்டார் என்று ஆசிரியர் கூறியது நினைவில் வந்தது. அதேபோல் சிவனேசரின் மகள் பூம்பாவை, சிறு வயதில் பாம்பு தீண்டி மடிந்து போக, அவளின் சாம்பலை கபாலீசுவரர் முன்வைத்து சம்பந்தர் தேவாரப் பதிகம் பாட, அந்தப் பெண் உயிர்பெற்று எழுந்தாள் என்கிறது சிவ புராணம். வள்ளி அப்பாவின் பக்தியைக் கண்டு, வள்ளி உயிரோடு வந்துவிடுவாள் என்று நம்பினேன். ஆனால், அவள் திரும்பவே இல்லை.

யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத, எல்லாரிடமும் அன்பும் பரிவும் கொண்ட வள்ளி ஏன் சிறு வயதில் மடிய வேண்டும்? எவ்வளவோ அநியாயங்கள் செய்வோர் நன்றாக இருப்பது ஏன்? வள்ளியின் அப்பா மனமுருகி வேண்டியபோதும் பூம்பாவைப் போல வள்ளி உயிரோடு வராதது ஏன்?

இப்படிப் பல்வேறு கேள்விகள் என்னுள் எழுந்தன. வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் கதாகாலட்சேபம் செய்ய வந்தவர்கள் பலரை என் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். பலரும் ‘நீ சின்னப் பயல் இப்போது உனக்கு ஏதும் புரியாது’ என்று துரத்திவிடுவார்கள். என் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி ராமகிருஷ்ண விஜயம், ஜோதிடம், குண்டலினி சக்தி போன்ற பல்வேறு நூல்களைப் படித்தேன். தேடலின் வழியே நான் வந்தடைந்தது பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ எனும் சிறு நூல். அதுதான் எனக்குப் புதிய வெளிச்சம் தந்தது.

*

முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை எனக்கும் புவனாவுக்கும்தான் போட்டி, யார் இரண்டாம் இடத்தைப் பிடிப்போம் என்று. முதலிடம் எப்போதும் பார்த்திபனுக்குத்தான். அதில் யாருக்கும் துளிகூடச் சந்தேகம் இருந்ததில்லை. ஆசிரியர்கள்கூட யார் இரண்டாம் இடத்துக்குப் போட்டி என்றுதான் கேட்பார்களே தவிர, முதலிடம் பற்றி மூச்சுக்கூட விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட பார்த்திபனைத்தான் அன்று அந்தக் கோலத்தில் சந்தித்தேன்.

பேருந்து செலவுக்கு என் வீட்டில் வசதி இல்லை. எனவே, ஆறாம் வகுப்பு முதல் நான் சேர்ந்த புதிய பள்ளிக்கு 40 நிமிடங்கள் நடந்துதான் செல்ல வேண்டும். வாரன் சாலை பிள்ளையார் கோயிலைத் தாண்டினால், சாலையின் இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் தந்துகொண்டிருக்கும்.

ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென்று, “ஏய் வெங்காயம்...” என்று ஒரு குரல் கேட்டது. வெங்கடேஸ்வரன் எனும் என்னை ஆரம்பப் பள்ளியில் சக மாணவர்கள் ‘வெங்காயம்’ என்றுதான் கூப்பிடுவார்கள். பார்த்திபனை நாங்கள் ‘பன்’ என்றுதான் கூப்பிடுவோம்.

பழகிய குரல். திரும்பிப் பார்த்த நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.

ஐந்து, ஆறு ஆடுகளை மேய்த்துக்கொண்டு, கையில் கழியுடன் பார்த்திபன் நின்றுகொண்டிருந்தான். அந்தக் கோலத்தில் அவனைக் கண்டதும் எனக்கு ஒரே படபடப்பு. என்ன செய்வது என்று தெரியாமல், அங்கிருந்து பள்ளிக்கு ஓடிவந்துவிட்டேன். ஏன் இப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. முதல் மதிப்பெண் வாங்கியவனை நான் ஆடு மேய்க்கும் கோலத்தில் எதிர்பார்க்கவில்லை.

அவன் குச்சியைத் தரையில் ஊன்றியபடி நிற்கும் கோலம் இன்றும் நினைவில் இருக்கிறது. அவன் முகத்தில் நண்பனான என்னைக் கண்டதில் மகிழ்ச்சி தெரிந்தது. அவன் எவ்வளவு ஆசையாக என்னுடன் பேச நினைத்திருப்பான்! எனக்கும் அவனிடம் பேச ஆசைதான். ஆனாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஏன் ஓடிவந்தேன் என்று இன்றுவரை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.

பீமண்ணபேட்டையில் வள்ளி வீட்டின் அருகேதான் பார்த்திபன் வீடு. தினமும் ஒன்றாகப் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்வோம். வழியில் பம்பரம், கோலிக்குண்டு விளையாடுவோம். அவன் குடும்பம் ஏழ்மையானது. நன்றாகப் படிக்கும் பார்த்திபன் ஏன் படிப்பைத் தொடரவில்லை? இப்படிச் சூழ்நிலையால் கல்வி மறுக்கப்பட்டு எவ்வளவு ராமனுஜன்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்? எவ்வளவு கலாம்களை இழந்திருப்போம்?

எங்கள் குடும்பமும் செல்வச் செழிப்பில் திளைத்ததில்லை. ஆனாலும், எனக்குக் கல்வி மறுக்கப்படவில்லை. சாதி, வறுமை, குடும்பச் சூழல் போன்றவை இந்தச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன என்று என்னை உணர வைத்த சம்பவம் இது.

பார்த்திபா, இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

த.வி. வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி


இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்