நிஜக் கதைகளை என் கதைகளில் கலந்துடுவேன்! - ‘அலை’ யுவராஜன்

By செய்திப்பிரிவு

கதைகளால் நிறைந்தது என் குழந்தைப் பருவம். நினைச்சுப் பார்த்தா, ‘அது எப்படி’ என்று எனக்கே ஆச்சரியமா இருக்கு. முதல் வகுப்புப் படிக்கிறப்பவே கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். வகுப்பில் மதிய நேரம், வகுப்பு ஆசிரியை எல்லோரையும் கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லிட்டு, அவங்களும் மேஜை மேலே தலையைச் சாய்ச்சு தூங்குவாங்க. சில பசங்க புத்தகப் பையை மடியில வெச்சுக்கிட்டு அதுல தலையைச் சாய்ச்சு தூங்குவாங்க. நிறையப் பேர் பேசிக்கிட்டு இருப்பாங்க. என்னைச் சுற்றி பன்னீர்செல்வம், ரமேஷ், கோபி இன்னும் ஒன்றிரண்டு நண்பர்கள் சூழ்ந்து உட்கார, நான் கதை சொல்ல ஆரம்பிப்பேன். புலி கதை, யானை கதை என வாய்க்கு வந்ததைச் சொல்வேன். விடுமுறை நாளிலும் இதே கதை சொல்லும் கதைதான்.

நான் பிறந்து வளர்ந்த ஊர், ஆரணி. பட்டுப் புடவைகளுக்கும் அரிசிக்கும் புகழ் பெற்ற ஊர். நான் இருந்த தெருவிலும் பாதி வீடுகளில் கைத்தறி நெய்யும் ‘தடக் தடக்’ சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். ‘அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெரு’… ரொம்பப் பெரிய தெரு. ஒரு பக்கத்துக்கு 30 வீடுகள் என இரண்டு வரிசையிலும் 60 வீடுகளுக்கு மேலே இருக்கும். ஒவ்வொரு வீடும் ரொம்ப நீளமான, அகலமான வீடுகளா இருக்கும். எல்லா வீட்டு வாசலிலும் பெரிய பெரிய திண்ணைகள் இருக்கும். ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் ஒண்ணு கூடுவோம். ஒவ்வொருத்தரும் அவங்க வீட்டிலிருந்து சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வருவாங்க.

வீட்டுத் தோட்டத்தில் காய்க்கும் கொடிகடலைக்காய், வீட்டிலேயே சுட்ட முறுக்கு, இல்லைன்னா புளியங்காய்… அப்போ எல்லாம் மரத்தில் பறிச்ச, ஓட்டோடு இருக்கிற புளியங்காயைத் தோப்புக்காரர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பாங்க. வீட்டுப் பெண்களோடு பசங்களும் சேர்ந்து உரிச்சுக் கொடுத்தா, அதுக்கு இவ்வளவு காசு எனக் கொடுப்பாங்க. கொஞ்ச நேரம் உரிச்சுட்டு அந்தப் புளியங்காய்களைக் கொஞ்சம் கொண்டுவந்துடுவோம். அதைச் சாப்பிட்டுக்கிட்டே கதை சொல்ல ஆரம்பிப்பேன். நரி கதை, புலி கதைகளோடு, பார்த்த சினிமாவின் பாதிப்பில் எம்.ஜி.ஆர் கதை, சிவாஜி கதை, ரஜினி-கமல் கதைகளையும் கற்பனை கலந்து அடிச்சுவிடுவேன். இப்படிக் கதைகள் சொல்றதில்தான் என் குழந்தைப் பருவம் அதிகம் போச்சு.

என் அப்பா தினமும் ராத்திரியில் பக்கத்தில் படுக்க வெச்சுக்கிட்டு கதைகள் சொல்வார். வால் இழந்த குரங்கு கதை, (வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்று பாடல் வரும்), எல்லோரையும் விழுங்கி வயிறு பெருத்த குருவி, சித்தியின் கொடுமையால் கஷ்டப்படும் இளவரசி என ஒரு நான்கைந்து கதைகளைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார். ஆனாலும், சலிப்பே இல்லாமல் கேட்பேன். எனக்கு ஒரு அக்கா, ரெண்டு அண்ணன்கள். நான் கடைசிப் பிள்ளை என்பதால் செல்லம் அதிகம். அதோடு, அம்மா ஊருக்குப் போகும்போதெல்லாம் என்னையும் கூட்டுட்டிப் போய்டுவாங்க. ஏன்னா, ஒருநாள் அம்மா இல்லைன்னாலும் எனக்குக் காய்ச்சல் வந்துடும். அதனால், சொந்தக்காரர்கள் வீட்டுக் கல்யாணம் போன்ற எந்த விசேஷம் என்றாலும் போய்டுவேன்.

இப்போது போலச் சரியாக விசேஷ நேரத்துக்குப் போய்ட்டு முடிஞ்சதும் திரும்பற நவீன பரபரப்பு கலாச்சாரம் கிடையாது. ரெண்டு நாள் முன்னாடியே போய்ட்டு, விசேஷ வீட்டுக்காரர்களுக்கு உதவியா இருந்து பலகாரங்கள் சுடறது உட்பட பல வேலைகளை எல்லோரும்… குறிப்பாகப் பெண்கள் கூடிக் கூடிச் செய்யற காலம். அம்மாவோடு போகிற நானும், வேலைகளுக்கு நடுவில் அவங்க பேசற பல உறவுக்கார நிஜக் கதைகளைக் கேட்டு, அவற்றையும் என் கதைகளில் சேர்த்துடுவேன்.

ஆறாம் வகுப்பு வந்த பிறகு கதைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். எங்க ஊரில், தர்மராஜர் கோயில் தெரு என்ற இடத்தில் ஒரு வாடகை நூல் நிலையம் இருந்துச்சு. 24 மணி நேரத்தில் திருப்பிக் கொடுக்கணும். 3 ரூபாய் புத்தகத்துக்கு 30 பைசா, 5 ரூபாய் புத்தகத்துக்கு 50 பைசா. அங்கே இருந்து அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம், பூந்தளிர், ரத்ன பாலா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று தினமும் வாங்கிட்டு வந்து படிப்பேன்… படிப்பேன்… அப்படிப் படிப்பேன். அந்தக் கதைகள் எல்லாம் நம் கற்பனையைத் தூண்டும். இது போதாதுன்னு அரசு நூலகத்துக்கும் போவேன்.

நான் படிச்ச ஆரணி கோட்டை அருகே இருந்த ‘சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி’ பக்கத்தில் ஒரு கிளை நூலகம் இருக்கும். அந்த நூலகத்தின் உதவியாளர் சின்னப் பசங்களை உள்ளேயே விடமாட்டார். துரத்துவார். ஆனாலும், நான் பல நாட்கள் போய் கெஞ்சி, அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டேன். அவருக்கு உதவியா புத்தகங்களை அடுக்கியும் கொடுப்பேன். அங்கும் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். இப்படியே கதைகள் சொல்றது, கதைப் புத்தகங்கள் படிக்கிறது என இருந்தபோது, ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் ஒரு கதைப் போட்டி பார்த்தேன். அப்போது எட்டாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்தேன். பாதி கதையைக் கொடுத்துட்டு, மீதிக் கதையை முடிக்கும் போட்டி. அதுக்கு எழுதி அனுப்பினேன்.

ரெண்டு மாசம் கழிச்சு அது ஆண்டுத் தேர்வுகள் முடிஞ்சு வீட்டில் இருந்த நேரம். வாசலில் இருந்து, ‘யுவராஜ்… யுவராஜ்…’ என போஸ்ட்மேன் கூப்பிடற சத்தம். ‘என்னடா இது எப்பவும் அப்பா பெயரைத்தானே கூப்பிடுவாரு’ என ஆச்சரியத்தோடு போனேன். மேல் உறை போடப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். பிரிச்சுப் பார்த்தால், ‘கோகுலம்’. என் கதைக்கு முதல் பரிசு. 35 ரூபாய்.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிச்சேன். நண்பர்களிடம் காட்டினேன். அந்தத் தெருவில் இருந்த ஒவ்வொரு வீடாகப் போய் காண்பித்தேன். எல்லோரும் பாராட்டினாங்க. அதன்பிறகு நிறையக் கதைகள், நிறையப் புத்தகங்களில் வந்துச்சு. பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டு… நண்பர்களின் வியப்பு….

அப்புறம் ஒரு விஷயம் என்ன தெரியுமா? பல வருடங்கள் கழிச்சு, என்னோட முதல் கதை வெளியான ‘கோகுலம்’ பத்திரிகையில் நான் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். என்னை மாதிரி நிறையக் குட்டிப் பசங்களின் கதைகளைப் படிச்சு, திருத்தி வெளியிட்டேன். அதில், பலர் இப்போ பெரியவங்க ஆகிட்டாங்க. அவங்களும் வேற வேற பத்திரிகைகளில் நிறைய விஷயங்களைச் செஞ்சுட்டு இருக்காங்க!

அலை யுவராஜன், எழுத்தாளர்

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்