தமிழ்க் குழந்தைகளைத் தம் கவிதைகளாலும் கதைகளாலும் மகிழ்வித்து வரும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் கடைசிக் குழந்தை நான். எனக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணன். அலுவலகம் தவிர, அப்பா எங்கு சென்றாலும் அவரின் விரல் பிடித்துச் சென்றுவிடுவேன்.
நடைப் பயிற்சி, சிறுவர் நிகழ்ச்சிகள், இலக்கிய விழாக்கள், கோயில்கள், நண்பர்களின் இல்ல நிகழ்வுகள் என எல்லாவற்றுக்கும் அப்பாவுக்கு முன்பாகத் தயாராகிவிடுவேன்.
'ஆஹா... குழந்தைப் பருவத்திலேயே பக்தியும் இலக்கிய ஆர்வமுமா?' என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அவசரம் வேண்டாம்.
அப்பா வெள்ளிக் கிழமை கபாலீஸ்வரர் கோயிலுக்கும் செவ்வாய்க் கிழமை தேனாம்பேட்டை சுப்பிரமணியர் கோயிலுக்கும் செல்வார். கபாலீஸ்வரர் கோயிலில் அழகான மயிலைக் கண்டு ரசிக்கலாம். மணல் பரப்பில் ஓடி விளையாடலாம். பக்கத்திலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அம்பிகா அப்பளம் கடையில் பிடித்த தின்பண்டங்கள் வாங்கிக்கொள்ளலாம். இதற்காகவே வெள்ளிக் கிழமைகளை எதிர்பார்த்திருப்பேன்.
அப்பாவோடு சுப்பிரமணியர் கோயிலுக்கும் ஆர்வமாகச் செல்வேன். கோயிலுக்கு அருகில் எல்டாம்ஸ் ஹோட்டல் இருக்கும். அதில் பேப்பர் ரோஸ்ட் பிரமாதமாக இருக்கும்! வாரம் தவறாமல் அப்பாவை ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றுவிடுவேன். ஒரு பேப்பர் ரோஸ்ட்டுக்கு 3, 4 கப் சாம்பார் வாங்கிக் குடிப்பேன்! என்னைப் பார்த்ததுமே சர்வர், 'ஒரு ரோஸ்ட், 4 கப் சாம்பார்' என்று உரக்கச் சொல்லிவிடுவார்!
சிறுவர் நிகழ்ச்சிகளில் தயக்கமில்லாமல், 'நானும் ஒரு பாடல் பாடுகிறேன்' என்று மேடையேறிவிடுவேன்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள 'சில்ரன் கார்டன்’ பள்ளியில் படித்தேன். வீடு எல்டாம்ஸ் சாலையில். அப்பா மேலாளராகப் பணியற்றிய இந்தியன் வங்கி முன்புறம். பின்புறம் வீடு. காலை 8.30 மணிக்குப் பேருந்து வரும். சீக்கிரமாகக் குளித்து, சீருடை அணிந்து, சாப்பிட்டு, 8.15 க்கு வாசலில் நின்றுவிடுவேன். கால் கடுக்க நிற்பேன். பள்ளி வாகனம் வருகிறதா என்று எட்டி, எட்டிப் பார்ப்பேன். எல்டாம்ஸ் சாலை மிகவும் நீளமானது.
இன்று போல் வாகன நெரிசல் இல்லாததால், தூரத்தில் வரும்போதே தெரிந்துவிடும். வாகனத்தின் முன் பகுதி ஆஞ்சனேயர் முகம் போலிருக்கும். தூரத்தில் வரும்போதே வாகனத்தைப் பார்த்துவிடுவேன். வாசலில் நிற்கும் காவலாளியிடம், " பையைப் பார்த்துக்குங்க அண்ணா. இதோ வரேன்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடிவிடுவேன். வீட்டில், "பாத்ரூம் போக வந்தேன்" என்று சொல்லிவிட்டு, அங்கு தஞ்சமடைந்துவிடுவேன்.
பள்ளி வாகனத்தில் ஒரு விதி உண்டு, மூன்று முறை ஒலி எழுப்பியும் அந்த மாணவர் வராத பட்சத்தில், மாணவரை விட்டுவிட்டு வாகனம் சென்றுவிடும்.
பாத்ரூமிலிருந்து 1…2…3... என்று எண்ணுவேன். மூன்று முறை ஒலித்துவிட்டு வாகனம் புறப்பட்டுவிடும். வேகமாக வெளியே ஓடி, "ஐயோ, பஸ் போயிடுச்சா? நான் எப்படிப் பள்ளிக்குச் செல்வது?" என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்பேன்.
ஓரிரு நாள் என்றால் கண்டுபிடிக்க முடியாது. பல நாட்கள் இப்படிச் செய்ததும், வீட்டுக்கு அருகில் இருக்கும் 'பாரத் மெட்ரிக்குலேஷன்’ பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். அங்கும் வயிற்று வலி, கால்வலி, காது வலி என விதவிதமான வலிகளைக் கண்டுபிடித்து டிமிக்கி கொடுப்பேன்.
இப்படிக் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு மட்டம் போட்ட நான், பிறகு 58 வயது வரை ஆர்வமாகப் பள்ளி சென்றேன் ஆசிரியராக!
எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது, 'கவிமணி குழந்தைகள் சங்கம்' அமைப்பாளர் என்ற பொறுப்பை அப்பா என்னிடம் கொடுத்தார். நானும் மாதம் ஒரு முறை குழந்தைகளை அழைத்து கூட்டம் நடத்துவது, சென்னை வானொலி, தொலைக்காட்சிகளில் எங்கள் சங்கக் குழந்தைகளின் நிகழ்ச்சிகளை வழங்குவது, ஆண்டு விழா நடத்துவது என அப்பாவின் ஆலோசனைப்படி செயல்பட்டேன்; பாராட்டுப் பெற்றேன். அங்கு பெற்ற பயிற்சிதான் பின்னர் என்னைக் குழந்தை எழுத்தாளராக்கியது.
வானொலி சிறுவர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் அண்ணா கூத்தபிரான், ஐயா தணிகைஉலகநாதன் போன்ற பெரியவர்களுக்கு மத்தியில் நானும் அமைப்பாளராக அமரும் வாய்ப்பு 13 வயதிலேயே கிடைத்தது.
விடுமுறை நாட்களில் அப்பாவின் நண்பர்களான மீ.ப.சோமு, தம்பிசீனிவாசன் போன்றோரின் பிள்ளைகள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுடன் ஓயாத விளையாட்டுத்தான். அப்பா கதை, பாடல், பேச்சுப் போட்டிகளை நடத்தி, பரிசும் கொடுப்பார். அனைவருக்கும் பரிசு உண்டென்றாலும் முதலிடம் பெறப் போட்டி போடுவோம்.
"நித்தம் இளமை நிலைக்கும்படி
ஈசன் என்னை வைத்திலனே" என்ற கவிமணி பாடல்தான் நினைவுக்கு வருகிறது. மிக மகிழ்ச்சியான காலங்கள் அவை.
தேவி நாச்சியப்பன், எழுத்தாளர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 mins ago
சிறப்புப் பக்கம்
57 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago