நாட்டுக்கொரு பாட்டு 1 - என்ன சொல்கிறது நமது தேசிய கீதம்?

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

குழந்தைகளே வணக்கம். ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் காலையில் பள்ளி தொடங்கும் வேளையின் என்ன செய்வீர்கள்? பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவார்கள். நீங்கள் எல்லாம் ஒன்றுகூடி தேசிய கீதம் பாடுவீர்கள். அந்த தேசிய கீதத்துக்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா? நம் தேசிய கீதத்துக்கு ஒரு வரலாறு இருப்பது போல, வெளிநாட்டு தேசிய கீதங்களுக்கும் வரலாறு இருக்குமல்லவா? அவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இனி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கீதங்களின் வரலாறு ஒலிக்கும். இந்த வாரம் நம் நாட்டு தேசிய கீதம்.



எத்தனை ஆண்டுகள்...?

50...? 60...? 70...? 80..?

நூறு ஆண்டுகள்....?

இல்லைஇல்லை, 104 ஆண்டுகள், இன்னும் சில மாதங்கள்.

சரி, சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போமா?

நாள்: 1911, டிசம்பர் 27.

இடம்: கல்கத்தா.

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு.



பிஷண் நாராயண் தார் (தலைவர்), பூபேந்திர நாத் போஸ், அம்பிகா சரண் மஜும்தார் உள்ளிட்ட தலைவர்களின் முன்னிலையில், சரளாதேவி சோத்ராணி பாடுகிறார். குறித்து வைத்துக் கொள்கிறீர்களா?

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின், இந்தப் பாடல், மிக உயரிய இடத்தை அடைய இருக்கிறது.

பல நூறு கோடி மக்கள் இப்பாடலைத் தம்முடைய உயிருக்கு உயிராக இசைக்கப் போகிறார்கள்.

அது என்ன பாடல்? இதோ அந்தப் பாடல்?

'ஜன கன மன...'

# காங்கிரஸ் மாநாட்டுக்குச் சில நாட்கள் கழித்து, 1912-ம் ஆண்டு ஜனவரியில், தாகூர் ஆசிரியராக இருந்த, பிரம்ம சமாஜம் இயக்கத்தின் 'தத்துவ போதினி' பத்திரிகையில் இப்பாடல் வெளிவந்தது.

# இது நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1919-ம் ஆண்டு பிப்ரவரியில், ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் 'தியோசாபிகல் சங்கம்' நடத்திய கூட்டத்தில், தாகூர், தானே இப்பாடலைப் பாடுகிறார்.

# இதன் பிறகு, வங்க மொழியில் தாம் இயற்றிய பாடலை, ரவீந்திரநாத் தாகூரே ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கிறார். தனது உறவுக்காரப் பெண்மணி மார்கரெட் துணையுடன், பாடலுக்கு மேற்கத்திய இசை வடிவம் தருகிறார்.

# 1947-ம் ஆண்டு. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். ஐ.நா. சபையின் பொதுச்சபை கூடுகிறது.

# இந்தியக் குழுவினர், தமது தேசிய கீதத்தைப் பாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

# அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள் - 'ஜன கன மன...'

# “மிகவும் வித்தியாசமான கம்பீரமான இசை வடிவத்தை கைதட்டி வரவேற்றனர் பிற நாட்டு அங்கத்தினர்”. இந்த நிகழ்வை இவ்வாறு பதிவு செய்கிறார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு.

# 1950-ம் ஆண்டு. ஜனவரி 24. அரசியல் சாசன நிர்ணயக் குழுக் கூட்டம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கையெழுத்து இடுவதற்காகக் கூடி இருக்கிறது. அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், 'ஜன கன மன' பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

# கூட்டத்தில் நிறைவாக, அவையின் துணை நாயகராக இருந்த அனந்தசயனம் ஐயங்கார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், அனைவரையும் தேசிய கீதம் பாடும்படி கேட்டுக் கொள்கிறார்.

# இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் இப்பாடல் ஐந்து பத்திகள் கொண்டது.

# பாடலை இசைக்க ஆகும் நேரம் - 52 வினாடிகள்.



என்ன சொல்கிறது நமது தேசிய கீதம்?

“இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே

எல்லார் மனங்களிலும் ஆட்சி செய்கின்றாய்.

நின் திருப்பெயர் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒரிசா, வங்காளத்தை

உள்ளக் கிளர்ச்சி கொள்ளச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது.

யமுனை, கங்கை இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடல் அலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை போற்றுகின்றன. நின் புகழை பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! நினக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!”



(பாடல்கள் இசைக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்