கீரங்குடி அழகான ஊர். அந்த ஊர் மக்கள் அனைவரும் நல்ல உழைப்பாளிகள். தினமும் காலையில் எழுந்து அவரவர் வேலைகளைச் செய்வார்கள். எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பது அவர்களுக்குப் பிடிக்காது.
அப்படிப்பட்ட ஊரில் நான்கு சோம்பேறிகள் இருந்தனர். எந்த வேலையும் செய்யாமலேயே எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பேராசைக்காரர்கள் அவர்கள்.
தினமும் காலையில் எழுந்ததும் ஊர்க்கோயில் திடலுக்கு வந்துவிடுவார்கள். வெட்டிக்கதை பேசிக்கொண்டிருப்பார்கள். சாப்பிட மட்டும்தான் வீட்டுக்குப் போவார்கள்.
அந்த நான்கு இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் இவர்களை நினைத்து ஒரே கவலை.
“உழைக்க வேண்டிய வயசில இப்படி வெட்டித்தனமா இருக்கீங்களே! எங்களுக்குப் பிறகு, உங்க நிலை என்னாகும்னு, என்னைக்காச்சும் யோசிச்சுப் பாத்தீங்களா? பின்னாடி ரொம்ப கஷ்டப்படப் போறீங்க!” என்று பெற்றோர்கள் நால்வரையும் அழைத்துக் கூறினார்கள். பெற்றோர்கள் சொல்வதிலும் உண்மை இருப்பதை நால்வரும் உணர்ந்தார்கள். நால்வரும் கூடிப் பேசினார்கள்.
“ஆமாடா, இனிமே நம்ம கையிலேயும் நாலு காசு இருக்கணும். ஆனா, என்னால குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய முடியாது!” என்றான் முதல் இளைஞன்.
“பெரிசா கஷ்டம் ஏதுமில்லாம, உடனே பணக்காரனாக ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க, பார்க்கலாம்” என்றான் இன்னொரு இளைஞன்.
“ஏதாவது ஒருநாள் கஷ்டப்பட்டாலும், இனி காலத்துக்கும் உக்காந்து திங்கிற மாதிரி ஏதாவது ஒரு வேலையைச் செய்யணும்” என்றான் மூன்றாவது இளைஞன்.
‘எப்படியாவது நிறைய பணத்தைச் சேர்க்கணும். ஆனா உழைக்கக் கூடாது’ என்பதாகவே நான்கு பேரின் சிந்தனையும் இருந்தது.
உடனே, நான்காவது இளைஞன் சொன்னான். “அப்படீன்னா… ஒரே வழி நாம திருடித்தான் நிறைய பணத்தைச் சேர்க்க முடியும்!”
மற்ற மூவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல், “சரி… அப்படியே செய்வோம்!”என்றார்கள்.
நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து திருடுவது, அதைச் சமமாகப் பிரித்துக் கொள்வதென முடிவெடுத்தார்கள்.
அந்த ஊரில் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் திருடினால் நிறைய கிடைக்கும் என்று நால்வரும் முடிவெடுத்தார்கள். சரியான நேரம் வாய்க்கட்டுமென்று காத்திருந்தார்கள். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை.
பக்கத்து ஊரில் நடக்கிற திருவிழாவுக்கு அந்தக் கோடீஸ்வரர் குடும்பத்தோடு போனார். இத்தனை நாளாய்க் காத்திருந்த நால்வரும், ‘இதுதான் சரியான சமயம்’ என்று கிளம்பினார்கள்.
கோடீஸ்வரர் வீட்டுக்குள் சென்று பணம், நகை, பொருள் என மொத்தத்தையும் சாக்குப் பையில் போட்டு மூட்டைகளாகக் கட்டினார்கள்.
ஆளுக்கு ஒன்றாக சாக்குப்பைகளைத் தூக்கிக்கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த மண்டபத்துக்கு வந்தார்கள்.
“அப்பாடீ, முதல் திருட்டே வெற்றிகரமா முடிஞ்சு போச்சு. ஆளுக்கு எப்படியும் பத்து லட்சமாவது தேறும்” என்றான் முதல் இளைஞன்.
“ஆமாண்டா, நம்மளோட முதல் திருட்டே இவ்வளவு பெரிசா அமையும்னு நானே எதிர்பார்க்கலே!” என்றான் இரண்டாவது இளைஞன்.
“சரி…சரி... நீங்க ரெண்டு பேரும் இங்கேயே பணத்துக்குக் காவலா இருங்க. நாங்க ரெண்டு பேரும் போயி சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றோம். சாப்பிட்டுட்டு, திருடுன பொருள்களை நாம சரிசமமா பங்கு வச்சுப் பிரிச்சிக்கலாம்” என்று நான்காவது இளைஞன் சொல்ல, மற்ற இருவரும் ‘சரி’என்றனர்.
சாப்பாடு வாங்கிக்கொண்டு, இருவரும் திரும்பி நடந்து வந்தனர். அப்போது ஒருவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
“நாம திருடின பொருளை நான்கா பங்கு வச்சா, நாம கொஞ்சம் நாள்தான் சந்தோசமா இருக்கலாம். அதையே நீயும் நானும் மட்டும் இரண்டு பங்கு வச்சுப் பிரிச்சுக்கிட்டா நிறைய கிடைக்குமே!” என்றான்.
“அவங்க ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு, நாம மட்டும் பங்கு வச்சுக்கிறது தப்பு!” என்றான் அடுத்தவன்.
யோசனை சொன்னவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
‘செஞ்சதே திருட்டு. இதில போயி நீதி, நியாயம் பாத்துக்கிட்டு!’ என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டே நடந்தான்.
வருகிற வழியில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. தண்ணீரில்லாமல் பாழடைந்து கிடந்தது அந்தக் கிணறு.
“ஆகா, இந்தக் கிணத்தைப் பாரேன். இவ்வளவு அழகா நிலா மிதக்குது!” என்றான். உடனே, கூடவந்தவன் ஆவலாய் எட்டிப் பார்த்தான்.
இதுதான் சமயமென்று, “தொலைஞ்சு போடா. ஒரு பங்காச்சும் குறையட்டும்!” என்று அவனைப் பிடித்து, அப்படியே கிணற்றுக்குள் தள்ளிவிட்டான்.
“அய்யய்யோ, மோசம் போயிட்டேனே!” என்று அலறியபடியே கிணற்றுக்குள் விழுந்தான் அவன்.
‘என்னடா, சாப்பாடு வாங்கப் போனவங்களை இன்னும் காணோமே’ன்னு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் மற்ற இருவரும்.
அதில், ஒருவனுக்கு வேறொரு எண்ணம் வந்தது.
“அவங்க வர்றதுக்குள்ளே நாம இரண்டு பேரும் இதை இரண்டுப் பங்கா பிரிச்சு எடுத்துக்கிட்டு ஓடிப் போயிறலாமா?” என்று கேட்டான்.
“அய்யோ பாவம். அவங்கள ஏமாத்தக் கூடாது” என்றான் இன்னொருவன்.
உடனே, “நீ வராட்டிப் போ. எல்லா மூட்டைகளுமே இனி எனக்குத்தான்!” என்றவன், பக்கத்தில் இருந்த மரக்கட்டையால் அடிக்க, அவன் மயங்கி விழுந்தான்.
‘அய், இனி மொத்தமும் எனக்கே!’ என்ற சந்தோஷத்தோடு நான்கு மூட்டைகளையும் சேர்த்துக் கட்டினான்.
சாப்பாடு வாங்கிக்கொண்டு வருகிறவனுக்கு இப்போது இன்னொரு யோசனை தோன்றியது. கையில் இருந்த சாப்பாடுப் பொட்டலங்களைப் பிரித்தான். பக்கத்தில் இருந்த விஷச் செடியில் இருந்த இலைகளைப் பிய்த்தான். அந்தச் சாப்பாட்டில் அந்த இலைகளின் சாற்றைப் பிழிந்துவிட்டான்.
‘நீங்க ரெண்டு பேருமே ஒழிஞ்சுப் போங்கடா. மொத்தப் பணமும் எனக்கே வரட்டும்!’ என்று சொல்லிக்கொண்டே, வேகமாக வந்தான். நான்கு மூட்டைகளையும் ஒன்றாகக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன், தூரத்தில் வருகிறவனைப் பார்த்துவிட்டான்.
‘ச்சே, அதுக்குள்ளே வந்து தொலைஞ்சிட்டானே!’ என்றபடி, சுவரின் பின்னே ஒளிந்து நின்றுகொண்டான். அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு, மறைந்து நின்றான்.
வேகமாய் உள்ளே வந்தவன் மண்டையில் அடித்தான். அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான். அவன் கையிலிருந்த சாப்பாட்டுப் பொட்டலங்கள் கீழே தெறித்து விழுந்தன.
இவனுக்கு ஏக மகிழ்ச்சி. ‘இனிமே எல்லாம் எனக்கே!’ என்று சந்தோஷமானான். ரொம்ப நேரமாகக் காத்திருந்ததால் அவனுக்குப் பசியெடுத்தது. கீழே கிடந்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து கறிக்குழம்பு வாசம் சுண்டி இழுத்தது.
‘மூவரும்தான் தொலைந்தார்களே. நாம் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்’ என்று முடிவு செய்து, கீழே கிடந்த பொட்டலங்களை எடுத்துப் பிரித்தான்.
நல்ல பசி. ‘லபக் லபக்’கென்று அள்ளிச் சாப்பிட்டான்.
தலையைத் தூக்கிப் பெரிதாய் ஏப்பம் விட்டான். கண்கள் இருட்டிக்கொண்டுவந்தன. லேசாய் தலை சுற்றியது. வாயிலிருந்து நுரை தள்ளியது. அப்படியே மயங்கி, சுருண்டு விழுந்தான்.
யாராவது அந்தப் பக்கம் போனால் பார்க்கலாம். நான்கு மூட்டைகளிலும் இருந்த பணமும் நகையும் அந்தப் பாழடைந்த மண்டபத்திலேயே கிடக்கின்றன.
ச்சீ… அடுத்தவங்க பணம் நமக்கெதுக்கு? நான் சொல்றது சரிதானே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago