ஒரு பெரிய காடு. அங்கே ஓர் அம்மா மானும் ஒரு குட்டி மானும் இருந்தன. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும்.
அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வருவார்கள். அவர்கள் கூடவே வேட்டை நாய்களையும் அழைத்து வருவார்கள். முயல், மான்களைத்தான் அவர்கள் அதிகமாக வேட்டையாடுவார்கள். ஏதாவது ஒரு முயல் அல்லது மானைக் கண்டுவிட்டால், உடனே வேட்டை நாயை ஏவிவிடுவார்கள்.
ஒரு நாள் அம்மா, “கண்ணு, இந்தக் காட்டிலே வேட்டை நாய் தொந்தரவு அதிகம். அதனாலே, நீ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்” என்று எச்சரித்தது.
“வேட்டை நாயா! அது எப்படியம்மா இருக்கும்?”
“பார்க்கவே பயமாயிருக்கும்.”
“பயமா! அது என்னம்மா?”
“நீயோ குட்டி. உனக்குப் பயத்தைப் பற்றி என்ன தெரியும்? தொலைவில் வேட்டை நாய் வரும் சத்தத்தைக் கேட்டால், உடனே நாம் எதிர்த் திசையில் வேகமாக ஓடிவிட வேண்டும்” என்று சொன்னது அம்மா மான்.
“அப்படியா! அது என்ன செய்துவிடும்?”
“என்ன செய்யுமா? வேகமாக ஓடிவந்து மேலே பாயும். பல்லாலே சதையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அப்போது, வேட்டைக்காரர்கள் ஓடிவந்து நம்மைப் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்” என்று விளக்கிச் சொன்னது அம்மா மான்.
“எல்லா மான்களுமே பயப்படுமா?”
“எல்லா மான்களுக்குமே பயம்தான். வேட்டை நாய்க்குப் பயப்படாத மானே இருக்காது.”
“ஆண் மானுக்குத்தான் கொம்பு இருக்கிறதே! அது ஏன் பயப்பட வேண்டும்? வேட்டை நாய் பக்கத்திலே வந்ததும், கொம்பாலே குத்திக் கீழே தள்ளிவிடலாமே? எனக்குக் கொம்பு முளைக்கட்டும். நான் என்ன செய்கிறேன் பார்” என்று பெருமையோடு சொன்னது குட்டி மான்.
“கொம்பு சண்டை போடுவதற்காக அல்ல.”
இப்படி அம்மா மானும் குட்டி மானும் பேசிக்கொண்டிருக்கும்போதே, தொலைவில் ஏதோ சத்தம் கேட்பது. உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக்கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது. “ஐயையோ, வேட்டைநாய் வருவதுபோல் தெரிகிறதே... சீக்கிரம் ஓடிவா” என்று கூறிவிட்டு, முன்னால் ஓட ஆரம்பித்தது அம்மா மான்.
ஆனால், குட்டி மான் ஓடவில்லை. இந்த வேட்டை நாய் எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தது. ஒரு புதரில் ஒளிந்துகொண்டது.
சிறிது நேரத்தில், வேட்டை நாய் அந்தப் பக்கமாக ஓடிவந்தது. ஆனால், அது ஒளிந்திருந்த மான்குட்டியைப் பார்க்கவில்லை! வேட்டை நாய் போன பிறகு, குட்டிமான் வெளியே வந்தது. அம்மா மான் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தது.
“நல்ல காலம். நாயிடம் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்தாய். நான் ஓட ஆரம்பித்த உடனே நீயும் ஓடி வந்திருக்க வேண்டும். நீயும் வருவாய் என்று நினைத்துத்தான் நான் முன்னால் ஓடினேன். இனி, இந்த மாதிரி செய்யாதே. ஆபத்து!” என்று புத்தி சொன்னது அம்மா மான்.
“அம்மா, மிகவும் பயப்படுகிறாய். வேட்டை நாய் உன் உயரம்கூட இல்லை. கொம்பும் இல்லை. அதனால் நம்மை என்ன செய்ய முடியும்? எனக்கு மட்டும் கொம்பு முளைக்கட்டும், ஒரே குத்திலே அதைக் கீழே சாய்த்துவிடுகிறேன்” என்று வீரமாகச் சொன்னது குட்டி மான்.
அம்மா மான் சிரித்துக்கொண்டே, “நீ பெரிய தைரியசாலிதான். இருந்தாலும் வேட்டை நாய், சிங்கம், புலிக்கு எல்லாம் நாம் பயப்படாமல் இருக்க முடியாது” என்றது.
“இந்தக் காட்டில் சிங்கம்கூட இருக்கிறதா?”
“இருக்கிறது. ஆனால், எப்போதாவதுதான் இந்தப் பக்கம் வரும்.”
“அதையும் ஒரு நாளைக்குப் பார்த்துவிடுகிறேன்!”
“ஐயையோ, அது நம்மைக் கொன்றுவிடும்.”
“போம்மா, எதைச் சொன்னாலும், அது கடித்துவிடும், இது கொன்றுவிடும் என்கிறாய்...”
“வா, தண்ணீர் குடித்துவிட்டு வரலாம்” என்றது அம்மா மான்.
தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பி வரும்போது, அம்மா மான் தரையைப் பார்த்தது. “ஐயையோ, சிங்கமல்லவா இங்கே வந்திருக்கிறது” என்று பயத்தோடு சொன்னது.
“என்னம்மா, சிங்கமா?”
“இதோ பார் சிங்கத்தின் காலடி தெரிகிறது. நாம் இப்படிப் போவது ஆபத்து. வந்த பக்கமாகவே ஓடிவிடலாம். சிங்கம் நம்மைப் பார்த்தால், விடாது.”
“நீ வேண்டுமானால், போம்மா. நான் சிங்கத்தைப் பார்த்துவிட்டுத்தான் வருவேன்.”
அதே நேரம் தொலைவிலே சத்தம் கேட்டது. “ஐயோ, வேட்டை நாய் வேறு வருகிறதே... சீக்கிரம் வா” என்று கூறிக்கொண்டே ஓட ஆரம்பித்தது அம்மா மான்.
குட்டி மான் ஓடவில்லை. ஒரு பெரிய புதருக்குள் மறைந்துகொண்டது. வேட்டை நாய் எந்தப் பக்கம் வருகிறது என்று இடுக்கு வழியாகப் பார்த்தது. புதருக்குச் சிறிது தொலைவில் வந்ததும் வேட்டை நாய் நின்றது. இங்கும் அங்குமாக மோப்பம் பிடித்தது. பிறகு, புதருக்குப் பக்கத்தில் வந்தது. அப்போது ‘ஹா’ என்கிற சத்தம் கேட்டது. உடனே அந்தக் காடே கிடுகிடுத்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும், வேட்டை நாய் பதுங்கிக்கொண்டது. சிறிது நேரத்தில் சிங்கம் வந்தது. புதருக்குள் மறைந்திருந்த குட்டி மான் சிங்கத்தை உற்றுப் பார்த்தது. ‘ப்பூ, இந்தச் சிங்கத்திற்குத் தானா அம்மா பயப்படுகிறாள்! இது நம்மை என்ன செய்து விடும்? இது அம்மா உயரம்கூட இல்லை. தலையிலே கொம்பையும் காணோம். சத்தம்தான் பலமாகப் போடுகிறது’ என்று நினைத்தது.
சிங்கம் ஒளிந்துகொண்டிருந்த வேட்டை நாயைப் பார்த்துவிட்டது. வேட்டை நாயைக் கண்டாலே, சிங்கத்துக்குக் கோபம் வந்துவிடும். ‘இந்த வேட்டை நாய்களால்தானே காட்டிலுள்ள முயல்களும் மான்களும் குறைந்துகொண்டே வருகின்றன! இதைச் சும்மா விடக் கூடாது’ என்று நினைத்துக்கொண்டே சிங்கம் வேகமாகப் பாய்ந்தது. வேட்டை நாய்க்குத் தப்ப வழியில்லை. அதனால், அது சிங்கத்தை எதிர்த்துச் சண்டைபோட ஆரம்பித்தது. ஒளிந்திருந்த மான் குட்டி சிங்கத்தையும் வேட்டை நாயையும் பார்த்துக்கொண்டே இருந்தது.
குட்டிமானின் உடல் நடுங்கியது. பயத்தில் ஓட ஆரம்பித்தது. அம்மா மானைப் பார்த்த பிறகுதான் ஓட்டம் நின்றது. குட்டி மானைப் பார்த்த பிறகுதான் அம்மா மானின் கவலை தீர்ந்தது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago