விடுமுறையில் வாசிக்கலாமே! - வாசிக்க வாசிக்க திகட்டாது!

By ஆதி

“ஹாய் புத்தகப் புழு, எங்கே போயிருந்த நீ? இவ்வளவு நாளா காணலியே” என்று கேட்டாள் நேயா.

“வணக்கம், வணக்கம். எனக்கும் பள்ளிக்கூடமெல்லாம் இருக்குல்ல. நாங்களும் படிச்சுப் பெரிய ஆளா ஆக வேண்டாமா. அதனால படிப்புல மூழ்கியிருந்தேன். இப்போதான் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டாங்கள்ல. அதான் திரும்ப வந்துட்டேன்”.

“ஓ! நீயும் ஸ்கூலுக்கெல்லாம் போய்ப் படிக்கிறியா, நல்ல விஷயம்தான். சரி, ரொம்ப நாளைக்குப் பின்னாடி வந்திருக்க. நிச்சயம் நிறைய ஜாலியான, சுவாரசியமான புத்தகங்களைப் பத்தி சொல்வேன்னு நம்புறேன்”.

“ஆமாமா, விடுமுறையில படிக்கணும்னு நிறைய புத்தகங்களை எடுத்து வச்சிருந்தேன். இப்போதான் பரீட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சே. தினசரி புதுசுபுதுசா புத்தகங்களை எடுத்து, அதோட உலகத்துல உலவிட்டு இருக்கேன்.”

“அந்தப் புத்தகங்களைப் பத்தி எனக்கும் சொல்லக் கூடாதா?”

“நிச்சயமா சொல்வேன். உனக்குச் சொல்லாம, வேற யாருக்குச் சொல்லப் போறேன். ஆனா, நான் சொல்றதக் கேட்கிறதோட நிறுத்திடக் கூடாது. வாங்கி வாசிக்கணும்.”

“கட்டாயமா வாசிப்பேன். நீ சொல்ற புத்தகங்களை விடுவேனா?”

“சமீபத்துல புதுப்புது உலகத்துக்குப் போனேன்னு சொன்னேன் இல்ல. அதுல ரெண்டு கதைகள் முக்கியமானவை. இரண்டும் குட்டிக்குட்டி கதைகள். நிறைய படங்களோட, கீழே கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகள் எழுதியிருக்கும் கதைப் புத்தகங்கள். நாமளே படிச்சிடலாம்.

முதல் கதை என்னன்னா, ஹரால்டுன்னு ஒரு குட்டிப் பையன். அவனுக்கு நிலா வெளிச்சத்துல நடக்கணும்னு ஆசை. அவன்கிட்ட கத்தரிப்பூ நிறத்துல ஒரேயொரு கிரேயான் மட்டும்தான் இருக்கு. அந்த கிரேயானை வச்சு அவனே ஒரு நிலாவை வரைஞ்சான். அதன் வெளிச்சத்துல நடந்தான். அப்படியே போனா ஒரு காடு மாதிரி இருந்துச்சு, அதுக்குள்ள போனா வழி தெரியாதே. அதனால ஒரேயொரு ஆப்பிள் மரத்தை வரைஞ்சான். அதிலிருக்கும் ஆப்பிள் பழங்களைப் பாதுகாக்க, பயங்கரமான ஒரு டிராகனையும் வரைஞ்சான். அதை வரைஞ்சு முடிச்ச உடனே ஹரால்டுக்கே பயமாயிருச்சு.

கை நடுங்க அப்படியே பின்வாங்கினான். கை நடுக்கத்தில் கிரேயான் கடல் அலைகளைப் போல வரைய, அது ஒரு கடலா மாறி அதுக்குள்ள அவன் மூழ்கிக்கிட்டு இருந்தான். அய்யய்யோ என்ன செய்றது? ஹரால்டுகிட்டதான் கிரேயான் இருக்கே. உடனே ஒரு படகு வரைஞ்சான், அந்தப் படகுல ஏறிப் போனான். ஆனா, அவன் கீழே இறங்குறதுக்குத்தான் நிலப்பகுதியையே காணலை. அவனே நிலப்பகுதியையும் வரைஞ்சான்.

சரி, நிலப்பகுதிக்கு வந்தாச்சு. இனி ஆபத்து இல்ல. ஆனா சாப்பிடணுமே, வயிறு பசிக்குதே. உடனே சாப்பாட்டை வரைஞ்சு, சாப்பிட்டு முடிச்சான். அப்புறம் அப்படியே நடந்து போனா ஒரு வீட்டைக்கூட காணோம். சும்மா இருப்பானா ஹரால்ட், வீட்டை வரைஞ்சான். புதுசுபுதுசா நிறைய வீடுகளை அவன் வரைஞ்சாலும், எதுவுமே அவனோட வீட்டு ஜன்னல் மாதிரி இல்ல. அவனுடைய ஜன்னல் வழியா பார்த்தா, நிலா எப்படித் தெரியுமோ, அது மாதிரி ஒரு ஜன்னலை கற்பனை செஞ்சு வரைஞ்சான். திரும்பவும் நிலாவோட பாதையிலேயே நடக்க ஆரம்பிச்சான்.

இப்படி அந்த குட்டிப் பையன் ஹரால்டு, தான் நினைச்சதை எல்லாம் வரைஞ்சு நிஜமாக்கிக்கிட்டே வந்தான்...”

“அப்புறம் என்னதான் ஆச்சு?”

“அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் நேயா. நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கோ. ‘அரோல்டும் ஊதா கலர் கிரேயானும்' என்ற இந்தக் கதையை எழுதினவரு அமெரிக்க ஓவிய-எழுத்தாளர் கிராக்கெட் ஜான்சன்.”

“நீ சொல்றதைப் பார்த்தா இந்தக் கதை ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஆனா, இதைத் தமிழ்ல படிக்க முடியுமா?”

“நிச்சயமா, எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கார். புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டிருக்காங்க.”

“ஓ! அப்படியா? அப்ப, என்னால படிக்க முடியும்.”

“ஹரால்டு கதை ஒரு மாதிரின்னா. ‘சிங்கத்தின் குகையில் சின்னக் குருவி' இன்னொரு மாதிரி.”

“அது என்ன கதை, அது என்ன கதை? சீக்கிரமா சொல்லேன்.”

“எல்லா சிங்கமும் மஞ்சள் நிறத்துலதான் இருக்கும். இந்தக் கதையில வர்ற சிங்கமும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா, அதோட வால் குஞ்சம் மட்டும் அடர்ந்த காட்டோட நிறமான பச்சை நிறத்துல இருந்துச்சு.

“அதெப்படி இருக்க முடியும்?”

“அதுதான் கதையே. வி்த்தியாசமான இந்த வால் குஞ்சம் ஒரு சின்னக்குருவியை ஆச்சரியப்படுத்தியது. வால் குஞ்சம் ஏன் இப்படி இருக்குண்ணு சிங்கத்திடம் சின்னக் குருவி கேட்டுச்சு. ஆனா, குருவி பேசினது சிங்கத்துக்குப் புரியலை. அது பேசாம போயிடுச்சு. சிங்கத்தோட வால் குஞ்சம் எப்படிப் பச்சையான்னு தெரிஞ்சுக்க, குருவி ஆசைப்பட்டுச்சு. அதனால சிங்கத்தோட குகைக்கு எதிரே இருந்த மரத்துல போய் தங்குச்சு.

அடுத்த நாள் சிங்கம் வெளில வந்தப்ப, அதோட வால் நிறம் ஆரஞ்சா மாறி இருந்துச்சு. அதற்கு அடுத்த நாள் நீல நிறம். அதற்குப் பிறகு செர்ரி பழ சிவப்பு நிறம். இப்படியே ஒவ்வொரு நாளும் சிங்கம் குகையை விட்டு வெளியே வரும்போது, அதன் வால் குஞ்சம் ஒவ்வொரு நிறத்துக்கு மாறி இருந்தது. இந்தச் சிங்கம் மந்திரவாதியா இருக்குமோன்னு குருவிக்கு சந்தேகம்.

ஒரு நாள் பெரிய சூறாவளிக் காத்து, மழை, இடி, மின்னல். குருவி இருந்த மரம் தலையை விரிச்சுக்கிட்டு ஆடுச்சு. அப்போ, சிங்கம் குகையிலேர்ந்து வெளிய வந்து குருவியைக் காப்பாத்தி, தன்னோட குகைக்கு கூட்டிட்டு போச்சு. உள்ளே போனா, அது வழக்கமான குகையைப்போல, இருட்டா இல்ல. அழகழகான, அற்புதமான ஓவியங்கள் குகை சுவர்ல வரையப்பட்டிருந்துச்சு. ஒவ்வொரு நாளும் இருந்த சிங்க வால் குஞ்சத்தோட நிறமும், அங்கேயிருந்த ஓவியங்களும் ஒரே நிறத்தில் இருந்தன. இப்போ புரிஞ்சிடுச்சா, சிங்கத்தோட வால் குஞ்சம் ஏன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்துல இருந்துச்சுன்னு...”

ஒரு நாள் பெரிய சூறாவளிக் காத்து, மழை, இடி, மின்னல். குருவி இருந்த மரம் தலையை விரிச்சுக்கிட்டு ஆடுச்சு. அப்போ, சிங்கம் குகையிலேர்ந்து வெளிய வந்து குருவியைக் காப்பாத்தி, தன்னோட குகைக்கு கூட்டிட்டு போச்சு. உள்ளே போனா, அது வழக்கமான குகையைப்போல, இருட்டா இல்ல. அழகழகான, அற்புதமான ஓவியங்கள் குகை சுவர்ல வரையப்பட்டிருந்துச்சு. ஒவ்வொரு நாளும் இருந்த சிங்க வால் குஞ்சத்தோட நிறமும், அங்கேயிருந்த ஓவியங்களும் ஒரே நிறத்தில் இருந்தன. இப்போ புரிஞ்சிடுச்சா, சிங்கத்தோட வால் குஞ்சம் ஏன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்துல இருந்துச்சுன்னு...”

“ஆஹா, அற்புதம் புழு.”

“இந்தக் கதையை எழுதியவர் அமெரிக்க ஓவிய-எழுத்தாளர் எலிசா க்லெவென் என்ற பெண். அவரைத்தான் நீ பாராட்டணும்.”

“ரெண்டு கதையுமே ரொம்ப சுவாரசியமா இருக்கு.”

“இந்த இரண்டு கதைகள் மட்டுமில்ல. இது எட்டு குட்டிப் புத்தகங்களைக் கொண்ட 'கதைப் புதையல் 2' அப்படீங்கற ஒரு தொகுப்பு. இந்தத் தொகுப்பை வாங்குனா, ஒவ்வொரு நாளைக்கும் நாமளே ஒவ்வொரு கதையைப் படிச்சிடலாம்.”

“நிச்சயமா, இந்த லீவைப் புத்தக வாசிப்போட தொடங்குவோம்.”

கதைப் புதையல் 2, கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. தொலைபேசி: 044-2433 2424

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

34 mins ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்