மாய உலகம் | ஒரு போர் என்ன செய்யும்?

By மருதன்

ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். இழந்திருக்கிறேன். அழுதிருக்கிறேன். என் பெயர் ராபர்ட் கிரேவ்ஸ். இனி வருவது என் கதை.

உள்ளம் நிறைந்த கனவுகளோடு நான் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியில் வந்தபோது இரு கரம் நீட்டி எனக்காகக் காத்திருந்தது போர். உன்னைப் போன்ற துடிப்பான இளைஞனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன், வா என்னோடு என்றது அது. போரின் குரல் என்னை அச்சுறுத்தியது. அதன் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. என்னை நோக்கி நீண்டு வந்த அதன் கரங்களைக் கண்டதும் நான் பின்னால் நகர்ந்துகொண்டேன். மாட்டேன். நான் கவிதை எழுதப்போகிறேன். ஒரு கவிஞனாக மாறுவதுதான் என் கனவு என்றேன் திடமான குரலில்.

போர் என்னை நெருங்கி வந்தது. கிரேவ்ஸ், கண்களைத் திறந்து பார். நீ பிறந்து வளர்ந்த இங்கிலாந்து ஆபத்தில் இருக்கிறது. எதிரிகள் எல்லையில் குவிந்திருக்கிறார்கள். கவிதை எழுதும் நேரமா இது? மேகத்தையும் மலரையும் மலையையும் நீ மாய்ந்து, மாய்ந்து பாடி முடிக்கும்போது உலகின் மேகங்கள் எல்லாம் கறுத்துப் போயிருக்கும். மலர்கள் எல்லாம் உதிர்ந்திருக்கும். மலைகள் குண்டு விழுந்து சிதறியிருக்கும். அப்போது என்ன செய்வாய் கிரேவ்ஸ்? உன் நாடு இருந்தால்தானே நீ கனவு காண முடியும்? உன் மக்கள் இருந்தால்தானே உன் கவிதையைப் படிக்க முடியும்? எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம் என்று சொல்லி உன் தேசத்தையும் உன் மக்களையும் கைவிடப் போகிறாயா கிரேவ்ஸ்?

ஒரு கணம் தயங்கி நின்றேன். அந்த ஒரு கணத்தில் போர் என் கையிலிருந்த பேனாவையும் காகிதங்களையும் அகற்றிவிட்டு, ஒரு துப்பாக்கியைத் திணித்துவிட்டது. புதிய சீருடை ஒன்றை மாட்டிவிட்டது. பெரிய, கறுப்பு பூட்ஸைக் கால்களில் பொருத்தியது. தலையில் ஒரு முரட்டுத் தொப்பியை வைத்தது. இனி நீ ஒரு போர் வீரன் என்று என்னைப் பார்த்துப் புன்னகைத்தது.

நான் அழைத்துச் செல்லப்பட்டேன். போர் வீரனாக இனி என் பொறுப்புகள் என்னென்ன? நான் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? எப்படி அதிகாரிகள் சொல் பேச்சுக் கேட்டு நடந்துகொள்வது? எப்படி என் துப்பாக்கியைப் பாதுகாப்பது? எப்படி அதைச் சுத்தம் செய்வது? எப்படிக் குறி பார்த்துச் சுடுவது? எப்படி எதிரியிடமிருந்து ஒளிந்துகொள்வது? சிக்கிக்கொண்டால் எப்படித் தப்பிப்பது? அவசர அவசரமாகப் பலவற்றைச் சொல்லிக்கொடுத்தார்கள்.

அதன்பின் ஒரு நாள் எங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு கண்காணாத ஓரிடத்தில் நிறுத்தினார்கள். ஒரு துப்பாக்கி எப்படி வெடிக்கும் என்பதை அன்று நான் கண்டேன். அது வெடிக்கும்போது காது அறுந்து விழும் அளவுக்கு எப்படி ஓசை எழுப்பும் என்பதையும் அன்று தெரிந்துகொண்டேன். ஒரு மனிதன் என் கண் முன்னால் சரிந்து விழுவதையும் அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன்.

அவன் கையிலிருந்த துப்பாக்கி தள்ளிப்போய் விழுந்தது. அவன் அணிந்திருந்த தொப்பி உருண்டு, உருண்டு ஓடி எங்கோ இருளில் சென்று மறைந்தது. விழுந்து கிடந்த அவன் பூட்ஸின் அடிப்பகுதியில் ரத்தம். அவன் துடித்துக்கொண்டிருந்தான். அவனால் பேச முடியவில்லை. அவன் மொழி எனக்குத் தெரியாது. அநேகமாக அவன் தன் அம்மாவையோ அப்பாவையோ அழைத்துக்கொண்டிருக்கிறான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

கிரேவ்ஸ், அவன் நம் பகைவன். நீ சுடுவதை நிறுத்தாதே என்று யாரோ என்னிடம் கத்தினார்கள். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். விழுந்து கிடந்த ‘பகைவன்’ என்னைப் போலவே இருந்தான். நடுங்கிக்கொண்டிருக்கும் அவன் விரல்களைப் பார்த்ததும் என் விரல்களும் நடுங்க ஆரம்பித்துவிட்டன.

என்னைப் போல் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, பெருங்கனவோடு அவன் வீட்டுக்குச் சென்றிருப்பான். அவனிடமும் இதே போர் சென்று பேசியிருக்கும். உன் தேசத்துக்காக இதைக்கூடச் செய்ய மாட்டாயா? இங்கிலாந்து உன் எல்லைக்கு வந்துவிட்டதை நீ அறிவாயா என்று சொல்லியிருக்கும். இல்லை, நான் மருத்துவனாக வேண்டும் என்றோ எழுத்தாளன் ஆகவேண்டும் என்றோ ஓவியன் ஆகவேண்டும் என்றோ அவன் சொல்லியிருப்பான். போர் அவனை விட்டிருக்காது. விழுந்து கிடக்கும் இந்தத் துப்பாக்கியை அதுதான் அவனிடம் திணித்திருக்கும்.

என்னைப் போலவே அவனையும் இங்கே வந்து இறக்கிவிட்டிருப்பார்கள். அதோ பகைவன் சுடு என்று அவன் அதிகாரிகள் என்னைக் காட்டியிருப்பார்கள். நான் யார் என்றே தெரியாமல் என்னைப் பார்த்து அவன் சுட்டிருப்பான். நானும் அவன் யார் என்றே தெரியாமல் பதிலுக்குச் சுட்டிருப்பேன். இப்போது அவன் காயமடைந்து கீழே விழுந்திருக்கிறான்.

எனக்குக் காயமில்லை. என்றாலும் நானும் விழுந்துதானே கிடக்கிறேன்? நானும் அவனைப் போல் தவித்துக்கொண்டுதானே இருக்கிறேன்? நானும் அவனைப் போலவே என் வீட்டைத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறேன்? நானோ அல்லது என்னைப் போன்ற வேறொரு வீரனோதான் இவனைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். என் நாட்டில் தயாரான குண்டுகள்தாம் இவன் உடலில் இருக்கின்றன. இவன் பெயர் என்ன? இவன் சீருடையின் நிறம் வேறு என்பதால் இவன் எனக்குப் பகைவன் ஆகிவிட்டானா?

மனிதனை அல்ல, முதலில் அவன் கனவைக் கொல்கிறது போர். அதன்பின் அவன் உள்ளத்தை. இறுதியாகவே அவன் உடலை. துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குனிந்தேன். அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் என் கண்களைப் போலவே இருந்தன. கண்ணின் நிறம் மட்டுமே வேறு. என் கைகளை அவன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

அந்த நொடியே என் சீருடையைக் கழற்றி வீசவேண்டும் போலிருந்தது. என் சட்டையில் குத்தப்பட்டிருந்த சின்ன சின்ன நட்சத்திரங்களைப் பிய்த்து மண்ணில் எறியவேண்டும் போலிருந்தது. கவலைப்படாதே நீ என் நண்பன் என்று அவன் காதில் சொன்னேன். என் மொழி அவனுக்குப் புரிந்திருக்காது. புரிந்தாலும் இந்த இரைச்சலில் அவனுக்கு எதுவும் கேட்டிருக்காது.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு கவிதை எழுதி முடித்ததுபோல் இருந்தது.

(இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் கிரேவ்ஸ் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர். போர் அனுபவங்கள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்திருக்கிறார்.)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்