மாய உலகம்: ஒரு கிராமத்தின் கதை

By மருதன்

‘இவ்வளவு பெரிய எழுத்தாளரா இருக்கீங்க. என்னென்னவோ விருதெல்லாம் வாங்கி யிருக்கீங்க. எங்க இடத்துக்கு வாங்க, பேராசிரியரா இருங்கன்னு பல்கலைக்கழகத்துல இருந்து எல்லாம் உங்களைக் கூப்பிட்டிருக்காங்க. இவ்வளவு பெரிய ஆளா மாறும்படி நீங்க அப்படி என்னதான் படிச்சிருக்கீங்க? எங்கே படிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன், ராஜநாராயணன்?’

இப்படி என்னைக் கேட்கறவங்க எல்லாம் நான் சொல்லும் பதிலைக் கேட்டு ஆன்னு வாயைத் தொறந்துடறாங்க. நம்பவே முடியலைன்னு சொல்றாங்க. ஒருவேளை கதை விடுகிறானோ என்றுகூட அவங்க நினைக்கலாம். என்ன செய்ய? சில நேரம் கதை உண்மை போல இருக்கு. உண்மை கதை போல மாறிடுது. என்னைக் கேட்டா இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னுதான் சொல்வேன்.

நான் பொறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இடைசெவல் என்னும் கிராமத்துல. எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். ஃபெயில் ஆகிவிட்டேன் என்பதால் அதைக் கணக்கில் சேர்த்துக்க முடியாது. சிலர் மழைக்குப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினதா சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்க கிராமத்துல அவ்வளவு சீக்கிரம் மழைன்னு ஒண்ணு வந்துடாது. பிடிச்சிக்கிட்டா பிலுபிலுன்னு கொட்டித் தீர்த்துடும். அப்ப பசங்களெல்லாம் ஓடிப்போய் பள்ளிக்கூடத்துல ஒதுங்குவாங்க.

அப்படி ஒதுங்கும்போது, என்னதான் நடக்குதுன்னு உள்ளே எட்டிப் பார்ப்பாங்க. வாத்தியார் ஏதோ ஒரு பாடம் எடுப்பார் இல்லையா? அதில் அரையாவோ குறையாவோ அவங்க காதில் வந்து வார்த்தைங்க விழும். படிப்பு வாசனைன்னு சொன்னா அவங்களுக்கு அதுதான்.

எனக்கும் அவங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவங்களாவது வகுப்பறையை எட்டிப் பார்த்தாங்க. நான் பள்ளிக்கூடத்துல ஒதுங்கி நிற்கும்போதுகூட மழையைத்தான் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். மழையோட சத்தம் மட்டும்தான் என் காதில் இருந்தது. நான் பள்ளிக்கூடம் படிச்ச ‘அளகு’ இதுதான்.

யாமறிந்த மொழிகளிலே என்றெல்லாம் நான் சொல்லவே மாட்டேன். இங்கிலீஷைப் பார்த்தா அசப்புல ஜடாமுனியைப் பார்த்த மாதிரியே இருக்கும். வாயேன், கிட்ட வந்துதான் பாரேன் என்று அது என் காதில் வந்து கூப்பிடற மாதிரியே தோணும். பேயாவது, ஒண்ணாவது என்று சத்தம் போட்டுப் பகலில் சிரிப்பவர்கள்கூடக் கும்மிருட்டானால் புளியமரம் பக்கம் போக மாட்டார்கள் அல்லவா? அப்படி நானும் ஆங்கிலத்தைப் பார்த்தால் எதுக்கு வம்பு என்று ஒதுங்கிடுவேன்.

தமிழிலும் கரை கண்டவனெல்லாம் கிடையாது. ழகரம் ளகரம், ரகரம் றகரம் எல்லாம் தெரியாமதான் எழுதினேன். எங்கே இக்கு போடணும், எங்கே இச்சு போடணும்னு சூதானமா யோசிச்சுப் போடற பழக்கமெல்லாம்கூட இல்லை. இருந்தாலும், எழுத ஆரம்பிச்சிட்டேன்.

முதல் முதலா எங்க கிராமத்துக்கு காபி அறிமுகமானப்போ அதை எப்படிக் குடிக்கறதுன்னு பலருக்கும் தெரியாது. மேயன்னான்னு ஒருத்தர் இருந்தார். சாப்பிட்டு முடிச்ச கையோடு அதே கும்பாவில் காபியைக் கொண்டுவந்து கொட்டுவாங்க. ஒரு கலக்கு கலக்கிக் குடிச்சிடுவார். கீயன்னாவுக்கு எப்படின்னா முக்கால் லோட்டா காபி சுடச்சுட வேணும். ஒரு விரலை விட்டுப் பார்ப்பார். ஆ, ரொம்ப சூடுன்னு அதில் பச்சத்தண்ணீர் ஊத்திப்பாரு. ஒரு முழுங்கு குடிப்பார். ஐயோ சூடு என்று இன்னும் கொஞ்சம் தண்ணி சேர்த்துப்பாரு. மீண்டும் விரலை விட்டுப் பார்த்துட்டு நிதானமா எடுத்து குடிப்பார்.

முதல் முதல் பஸ் விட்டப்போ ஒரு பயலும் அதில் ஏறலை. இங்கே இருக்கிற வயலுக்கும், அங்கே இருக்கிற பங்காளி வீட்டுக்கும் போக பஸ்ஸா? அதுக்கு காசு வேறு கொடுக்கணுமான்னு சிரிப்பாங்க. அப்படியெல்லாம் சொல்லாதீங்க, ஏறிக்கிடுங்க என்று வருந்தி, வருந்தி பஸ்காரர் கூப்பிடுவார். காசெல்லாம் வேண்டாம், பங்காளி வீட்டு வாசல்லயே இறக்கி விடறேன், ஒருமுறை வந்துதான் பாருங் களேன்னு பாவம் அவர் கெஞ்சுவார்.

இப்ப காபி, டீ இல்லாம யார் கண்ணை முழிக்கறாங்க? யார் இப்பவெல்லாம் நடக்கறாங்க? திருவள்ளுவர் என்று பெயர் வைத்து ஒரு பஸ் ஓடுது. ஆனால், திருவள்ளுவரே வந்து நிப்பாட்டச் சொன்னாகூட நிக்கறதில்லை.

எல்லாரும் வந்து முடிச்ச பிறகு ரொம்பவும் தாமதமா வந்தது மின்சாரம். இனி எதுக்கு இந்தக் குரங்கு என்று விளக்கை ஊதி அணைச்சிட்டு லைட்டை போட்டுட்டு நிம்மதியா சாப்பிட உட்காருவேன். இரண்டு பருக்கை உள்ளே போயிருக்கும். மினுக், மினுக்குன்னு இரண்டு வாட்டி மின்னிட்டு படக்குன்னு பல்பு போயிடும். கோச்சிக்கிடாதே ராசா வா என்று எண்ணெய் விளக்கை மறுபடியும் ஏத்துவோம்.

ஒருமுறை வெளியூரில் தமிழ்ப் பண்டிதர் யாரிடமோ போய் படித்துவிட்டு ‘அன்னாய் தாதாய்’ என்று பேசத் தொடங்கிய சிறுவனைப் பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து அறைக்குள் பூட்டிவிட்டார்கள். பசி பிராணனை வாங்கியதும் பையன் ‘ஆத்தோவ் கஞ்சி ஊத்து’ என்று கத்திவிட்டான். தேன் வந்து பாயுது காதினிலே என்று ஊரே மகிழ்ந்தது.

இந்தக் கதைகளைத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். எங்க கிராமத்து மக்களின் எளிய கதைகள். புளியமரத்துப் பிசாசுகளின் கதைகள். ரெண்டுமே கறுப்பு என்பதால் ஆட்டை விட்டுட்டு நாயைத் திருடி கூடைக்குள்ளே போட்டுக்கொண்டு ஓடிய திருடனின் கதை.அரண்மனை நெல்லுக்குப் பெருச்சாளி அடித்துக்கொள்வதுபோல் சதா சண்டையிட்டுக்கொள்ளும் ஆள்களின் கதை. அமைதியான குழந்தைகளின் கதை.

சிலர் பெரிய பெரிய ஆராய்ச்சிப் புத்தகங்கள் படித்துவிட்டு எழுத வருவார்கள். நான் என் கிராமத்தையும் அதில் வாழும் மக்களையும் புரட்டிப் புரட்டிப் படித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். மக்கள் என்ன பாஷையில் பேசுவார்களோ அப்படியே எழுதினேன். அப்படி மட்டும்தான் எழுத முடியும் என்னால். அது போக, எனக்கு அவ்வளவு ஆசை என் மண் மீது. என் மக்கள் மீது. என் மக்களின் மொழி மீது. எனவே, பயப்படாமல் எழுத ஆரம்பித்தேன்.

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக நகரத்தில் இருப்பவர்களுக்கும் என் கதைகள் பிடித்துவிட்டன. எங்கள் சாப்பாடு, எங்கள் கடவுள், எங்கள் முனி, எங்கள் மரம், எங்கள் வயல், எங்கள் வெயில், எங்கள் மழை, செருப்பில்லாத எங்கள் கால் எல்லாமே அவங்களுக்குப் புதுசா இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனா, எங்க கிராமத்துக்காரங்க என் கதைகளைப் படிச்சா நிச்சயம் சிரிப்பாங்க. ‘ஏப்பா, நீ என்னமோ அதிசயமா கதை எழுதியிருப்பன்னு பாத்தா, நம்ம பொழப்பை இல்ல எழுதி வச்சிருக்கே. இதுல என்ன இருக்குன்னு அங்க இருக்கறவங்க எல்லாம் படிக்கறாங்க?’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்