கதை: ரோஸிக்குப் பூ கொடுக்காத மரம்!

By கீர்த்தி

‘அடுத்த மாதம் குட்டித் தங்கை ஜெஸிக்கு ஐந்தாவது பிறந்தநாள் வருகிறது. அக்கா நான் ஏதாவது அழகான பரிசு அவளுக்குக் கொடுக்க வேண்டுமே’ என்று நினைத்தபடியே தோட்டத்திற்கு வந்தாள் ரோஸி.

தோட்டத்தில் விதவிதமான செடிகளும் கொடிகளும் நின்றிருந்தன. ரோஸியின் அப்பாவும் அம்மாவும் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். பூச்செடிகள் ஒரு பக்கம், காய்கறிச் செடிகள் இன்னொரு பக்கம், பழம் கொடுக்கக்கூடிய மரங்கள் மற்றொரு பக்கம் என்று வைத்து, நன்றாகப் பராமரித்து வந்தார்கள்.

தோட்டத்தில் இருக்கும் பல செடிகளின் பெயர்கூட ரோஸிக்குத் தெரியாது. ஆனாலும், தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவாள். அந்தச் செடிகளில் பூக்கும் பூக்களைப் பார்த்து ரசிப்பாள். யாரும் அறியாதபடி பூச்செடிகளிடம் பேசுவாள். அந்தச் செடிகளும் ரோஸியிடம் பேசும்.

செடிகளோடு தான் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால், அது பற்றி ரோஸி யாரிடமும் சொல்ல மாட்டாள். விருந்தினர் வரும்போது ரோஸியின் அம்மா செடிகளிலிருந்து பூக்களைப் பறித்து, வரவேற்பறையில் இருக்கும் பூச்சாடியில் வைப்பார்.

“அம்மா தெரியாமல் பூக்களைப் பறித்துவிட்டார். இனி பூக்களைப் பறிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று அம்மாவுக்காக மன்னிப்பு கேட்பாள் ரோஸி.

இன்றும் செடிகளில் வண்ணப் பூக்கள் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன. அப்போதுதான் ரோஸிக்கு அந்த யோசனை வந்தது.

தங்கை ஜெஸியின் பிறந்தநாளுக்குப் பூக்களாலேயே உடை செய்து கொடுத்தால் என்ன? ஆனால், பூக்கள் வாடிவிடுமே என்றும் தோன்றியது. பூக்களைப் புத்தகத்தில் வைத்து, நீர்ச்சத்துப் போகும்படி பாடம் செய்து, பின்னர் சட்டையில் வைத்துப் பசையால் ஒட்டிவிடலாம் என்று முடிவெடுத்தாள் ரோஸி. ஆனாலும், செடிகளின் அனுமதி இல்லாமல் பூக்களைப் பறிக்கக் கூடாது என்கிற எண்ணமும் அவளுக்கு வந்தது.

முதலில் செம்பருத்திச் செடியின் அருகில் வந்தவள், “தோழி, என் தங்கை ஜெஸிக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் வருகிறது. உன் பூக்களைக் கொஞ்சம் தந்தால் தங்கைக்குச் சட்டை செய்து கொடுப்பேன்” என்றாள்.

“அதனால் என்ன ரோஸி, நீதானே தினமும் எனக்குத் தண்ணீர் ஊற்றுகிறாய்... தாராளமாகப் பூக்களைப் பறித்துக்கொள்” என்றது செம்பருத்திச் செடி. ரோஸி கொஞ்சம் செம்பருத்திப் பூக்களைப் பறித்துக்கொண்டாள்.

பிறகு முல்லைக் கொடியிடம் அனுமதி கேட்டாள். முல்லைக் கொடியும் சம்மதித்தது. ரோஸி கொஞ்சம் முல்லைப் பூக்களைப் பறித்துக்கொண்டாள்.

பிறகு ரோஜா செடியிடம் அனுமதி கேட்டாள். ரோஜாசெடியும் பூக்களைப் பறித்துக்கொள்ள சம்மதித்தது. ரோஜாப் பூக்களைப் பறித்துக்கொண்டாள்.

பிறகு செவ்வந்திப் பூச்செடியின் அருகில் வந்து பூக்களைக் கேட்டாள். செவ்வந்திச் செடியும் ரோஸிக்குக் கொஞ்சம் பூக்களைக் கொடுத்தது.

தோட்டத்தின் முன்பக்கம் நின்றிருந்த பெரிய செடி போன்ற மரத்துக்கு அருகில் வந்தாள் ரோஸி. அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. அதன் மெல்லிய கிளைகளில் அடர் சிவப்புப் பூக்கள் மிக அழகாகப் பூத்திருந்தன.

‘ஆஹா, இந்தச் சிவந்த பூக்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்த மரத்திடம் கேட்டாள் ரோஸி. “என்னை மன்னித்துவிடு ரோஸி. நான் பூக்களைத் தர மாட்டேன்” என்றது அந்த மரம்.

அதைக் கேட்டதும் ரோஸிக்கு அதிர்ச்சியும் வருத்தமுமாக இருந்தது. ‘எல்லாச் செடிகளும் எனக்குப் பூக்கள் தரும்போது இந்த மரம் மட்டும் பூக்களைத் தரமாட்டேன் என்கிறதே’ என்று நினைத்த ரோஸி, எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் போய்விட்டாள்.

தினமும் ரோஸி தோட்டத்திற்கு வந்து கொஞ்சம் பூக்களைப் பறித்து, புத்தகங்களில் வைக்க ஆரம்பித்தாள். பூக்களைத் தர மாட்டேன் என்று சொன்ன மரத்தின் மீது ரோஸிக்குக் கோபம் இருந்ததால், அந்த மரத்தின் பக்கமே அவள் போகவில்லை.

ஒரு மாதம் கழிந்தது.

காகிதம்போல் இருந்த பூக்களைக் கொண்டு, அழகான சட்டையை உருவாக்கிவிட்டாள் ரோஸி. அன்று ஜெஸிக்குப் பிறந்தநாள். மாலை வேளையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிடலாம் என்று ரோஸி தோட்டத்திற்கு வந்தாள்.

“ரோஸி” என்று அழைக்கும் குரல் கேட்டது. குரல் வந்த திசையில் பார்த்தாள். ரோஸியை அழைத்தது வேறு யாருமல்ல, பூக்களைத் தர மாட்டேன் என்று சொன்ன அதே மரம்தான்.

“ரோஸி, அருகில் வா. உன் தங்கையின் பிறந்தநாளுக்காக நான் பரிசு தர விரும்புகிறேன்” என்றது அந்த மரம்.

‘பூக்களைத் தர மாட்டேன் என்று சொன்ன மரம், என்ன பரிசு தரப் போகிறது?’ என்கிற சந்தேகத்துடன் ரோஸி அந்த மரத்துக்கு அருகே போனாள்.

“அன்று என் பூக்களைத் தர மாட்டேன் என்று சொன்னதற்காக என்மீது உனக்குக் கோபம் இருக்கிறதா? நான் எதற்காக அப்படிச் சொன்னேன் தெரியுமா? இதோ பாரேன், என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கின்றன! நான் உனக்கு என் பூக்களைக் கொடுத்திருந்தால் இந்தப் பழங்கள் கிடைத்திருக்காது. இதோ, என் பழங்களைப் பறித்து, ஜெஸியின் பிறந்தநாள் விருந்தில் எல்லாருக்கும் கொடு” என்றது அந்த மரம்.

அப்போதுதான் ரோஸி கவனித்தாள், அந்தச் செடியில் மஞ்சளும் சிவப்புமாகப் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

“ரோஸி, என் பெயர் மாதுளை. என் சிவந்த பூக்கள் அழகுதான். ஆனால், என் பழங்கள் சுவையானவை. சத்தும் நிறைந்தவை. என் பூக்களைவிடப் பழங்கள் சிறந்தவை. சிறந்த ஒன்றைப் பெறுவதற்காகச் சிறிது காலம் காத்திருப்பதில் தவறு இல்லை” என்றது மாதுளை மரம்.

பழங்களைப் பெற்றுக்கொண்ட ரோஸி, “தோழி, உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இன்றைய பிறந்தநாள் விழாவில் நீ தந்த பழங்கள்தான் முதல் உணவு” என்றபடி மாதுளை மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டு, ஓடினாள் ரோஸி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்