மாய உலகம்: நான் ஏன் வரலாறு எழுதுகிறேன்?

By மருதன்

தகுதி இருக்கிறது, திறமை இருக்கிறது. எனவே எழுதுகிறேன் என்று சொல்ல மாட்டேன். நீங்கள் எழுதினால் அற்புதமாக இருக்கும், எழுதுங்கள் என்று அறிந்தவர்களும் அறியாதவர்களும் திரண்டு வந்து கேட்டுக்கொண்டதால் எழுதுகிறேன் என்று சொல்லலாம்தான். ஆனால், அது உண்மையல்ல. நானே ஆய்வு செய்து பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவற்றை நான் மட்டுமே எழுத முடியும் என்றும் நான் சொல்லப் போவதில்லை. அப்படியானால் நான் ஏன் வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறேன்?

உங்களுக்கே தெரியும், நான் கதை எழுதுபவன். எச்.ஜி. வெல்ஸ் தெரியுமா என்று கேட்டால் யார் இந்த ‘டைம் மெஷின்’ எழுதினாரே அவர்தானே என்றுதான் என் எழுத்தை வாசித்தவர்கள் கேட்பார்கள். விரும்பும் இடத்துக்குச் செல்வதற்கு வாகனங்கள் இருப்பதுபோல் விரும்பும் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல ஓர் இயந்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கற்பனையில் பிறந்ததுதான் கால இயந்திரம். என்னுடைய முதல் நாவல். இப்படி இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து எழுதுவதுதான் என் வேலை.

வரலாறு நேர் எதிரானது. கற்பனை அல்ல, அதன் வாசனைகூட அதற்கு ஆகாது. என்ன நடந்ததோ அதை மட்டும், எப்படி நடந்ததோ அப்படி மட்டும் எழுதினால்தான் அது வரலாறு. மரத்தடியில் காலை நீட்டி அமர்ந்துகொண்டு ஒரு முழு நாவல் எழுதிவிடலாம். வரலாறோ ஒரு விநாடிகூட நிம்மதியாக உட்கார விடாது. ஒரு வரி, வேண்டாம் ஒரு சொல், இல்லை ஒரேயொரு புள்ளி வைக்க வேண்டுமானால்கூடக் கால் வலிக்க, வலிக்க நூலகத்துக்கு நடக்க வேண்டும். கை வலிக்க, வலிக்க பல நூறு பக்கங்களைத் திருப்ப வேண்டும். இது சரியா? இதற்கு ஆதாரம் உண்டா? இதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்களா? இந்த ஆண்டு, தேதி, கிழமை எல்லாம் சரியா? இப்படி ஒவ்வொன்றையும் ஆயிரம் முறை சரி பார்க்க வேண்டும்.

ஒரு வரலாற்று ஆசிரியரால் எப்படிக் கால இயந்திரம் குறித்து எழுத முடியாதோ அதே போல்கால இயந்திரம் குறித்து எழுதுபவராலும் வரலாறுஎழுத முடியாது. ஆனால், யாரும் எதுவும் படிக்கலாம். அறிவியல் தொடங்கி வரலாறு வரை எல்லாவற்றையும் எனக்குப் படிக்கப் பிடிக்கும். அப்படி ஒரு நாள் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது. கிரேக்கத்தின் வரலாறு இருக்கிறது. எகிப்தின் வரலாறு இருக்கிறது. இந்தியா, துருக்கி, ரோம், இங்கிலாந்து, பிரான்ஸ் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் பல நூல்கள் இருக்கின்றன. மனிதகுலத்தின் வரலாற்றை விவரிக்கும் ஒரு நூல், ஒரேயொரு நூல் இருந்தால் எப்படி இருக்கும்?

உலகம் உருவானதிலிருந்து தொடங்க வேண்டும். உயிர்கள் உருவானது, உயிர்களில் ஒன்றாக மனிதன் உருவாகி வந்தது, அந்த மனிதன் குகைகளில் வாழ்ந்தது, ஓவியங்கள் வரைந்தது, வேட்டையாடியது, விவசாயம் செய்தது, வீடு கட்டியது, மதங்களை உருவாக்கியது, நகரங்களை உருவாக்கியது, போரிட்டது, நாகரிகத்தை வளர்த்தது, நாடுகளை உண்டாக்கியது அனைத்தையும் கோவையாகவும் எளிமையாகவும் ஒரே நூலில் விவரித்தால் எப்படி இருக்கும்!

என் ஆசையை நிறைவேற்றும்படி எனக்குத் தெரிந்த வரலாற்று ஆசிரியர்களிடம் கேட்டேன். ‘அதெப்படி வெல்ஸ், இதை நான் எழுதுவேன்?’ என்று எடுத்தவுடனே பதறினார் முதல் நண்பர். ‘ஏன், நீங்கள் வரலாற்று ஆய்வாளர்தானே? உங்களிடம்தானே இதைக் கேட்கவேண்டும்?’ என்றேன். ‘நான் அமெரிக்காவை ஆராய்பவன். நான் எப்படி மனிதகுலத்தின் முழுமையான வரலாற்றை எழுத முடியும்?’ என்றார் அவர்.

‘கிரேக்க வரலாற்றை மட்டும் வேண்டுமானால் எழுதுகிறேன்’ என்றார் இன்னொருவர். ‘ரோமாபுரியின் எழுச்சியை நானும் வீழ்ச்சியை இன்னொருவரும் எழுதுகிறோம். ஆனால், அதற்கே 25 ஆண்டுகள் தேவைப்படும்’ என்றார் இன்னொருவர். ‘அதை விட்டுவிட்டேன், இதை விட்டுவிட்டேன் என்று யாரும் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது இல்லையா? என்னது நான் உலக வரலாறு எழுத வேண்டுமா? என்னுடைய துறை 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு குட்டிப் பகுதி மட்டுமே அல்லவா’ என்றார் மற்றொருவர்.

எவ்வளவு பக்கப் புத்தகம் என்று கேட்டார் ஒரு பல்லைக்கழகப் பேராசிரியர். சுமார் 1000 பக்கங்கள் என்றேன். எகிப்து பற்றி எழுதுவதற்கே அது போதாதே, வெல்ஸ் என்று உதட்டைப் பிதுக்கினார். இதுவரை ஒவ்வொரு நாட்டையும் ஆண்ட மன்னர்களைப் பட்டியலிடுவதற்கே 500 பக்கங்கள் போய்விடுமே என்றார் மற்றொரு பேராசிரியர். ஓவியம், சிற்பம், இலக்கியம், தொழில்நுட்பம் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய வேண்டும் வெல்ஸ். ஒருவரே எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று எனக்கு எடுத்துச் சொன்னார் இன்னொருவர்.

ஓராயிரம் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. எதை எடுப்பீர்கள், எதை விடுவீர்கள்? உயிர்களின் கதை என்கிறீர்கள். அப்படியானால் விலங்கியல், பறவையியல் எல்லாம் வரவேண்டும் அல்லவா? அவையெல்லாம் வேறு துறைகள் இல்லையா என்று கலவரம் கொண்டார் மற்றொரு மூத்த ஆய்வாளர். அதில் பாருங்கள் வெல்ஸ், அரசியல் தெரிந்தவர்களுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் தெரியாது. அறிவியல் தெரிந்தவர்களுக்கு அரசியல் வராது. பொருளாதாரத்தின் வரலாற்றை எழுதக்கூடியவர்களால் மதங்களின் வரலாற்றை எழுத முடியாது. எல்லாமே ஒரே புத்தகத்தில் வருவது சாத்தியமேயில்லை என்று வெறுங்கையோடு என்னைத் திருப்பி அனுப்பினார் ஒரு புகழ்பெற்ற அறிஞர்.

ஒரு பல்கலைக்கழகமே திரண்டு வந்து பண்ண வேண்டிய வேலை என்றார் ஒருவர். எழுதுகிறேன். ஆனால், சாமானியர்களுக்குப் புரியும்படி கதைபோல் என்னால் எழுத முடியாது என்றார் இன்னொருவர். நான் விரும்பும் ஒரு நூலை ஏன் ஒரு வரலாற்று ஆசிரியரால் எழுத முடியாது என்பதற்கு இப்படியாக 100 விளக்கங்கள் வந்து சேர்ந்தன.

அதன்பிறகு ஒரு முடிவு செய்தேன். நான் விரும்பும் கதையை நான் எழுதுவதுபோல் நான் விரும்பும் ஒரு வரலாற்றை ஏன் நானே எழுதக் கூடாது? ஆய்வாளர்கள் பிற ஆய்வாளர்களுக்கு எழுதிக்கொள்ளட்டும். சாமானியனான நான் பிற சாமானியர்களுக்கு ஏன் ஒரு வரலாற்றை எழுதக் கூடாது? நான் புதியவன் என்பதால் குற்றம் இருக்குமோ, குறை இருக்குமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன செய்வாரோ என்று கலங்க வேண்டியதும் இல்லை. எனவே துணிவோடும் ஆர்வத்தோடும் எழுதப் போகிறேன்.

நான் கற்பதற்குத் தயாராக இருக்கிறேன். அதையே ஒரு தகுதியாகக் கொண்டு இதனை எழுதுகிறேன். ஒரு மாணவன் எழுதும் வரலாறு என்று இதனை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தை தீட்டும் எளிய சித்திரம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். சாமானியர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்னும்போது சாமானியன் ஒருவன் ஏன் அதனை எழுதக் கூடாது?

(இங்கிலாந்தைச் சேர்ந்த எச்.ஜி. வெல்ஸ் அறிவியல் புனைவுகளின் தந்தையர் என்று கருதப்படும் இருவரில் ஒருவர்.)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

52 mins ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்