சித்திரக் கதை: மூக்கு நீ...ண்ட குருவி

By கன்னிக்கோவில் ராஜா

அந்தக் காட்டின் நடுவே மிகவும் குண்டான ஒரு மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் நிறைய பறவைகள் வசித்து வந்தன.

நாள்தோறும் சூரியன் விழிப்பதற்கு முன்பாகவே எழுந்து, தங்களுக்குத் தேவையான இரையைத் தேடிப் பறவைகள் செல்லும். அப்படி சேகரித்த இரையைத் தனது குஞ்சுகளுக்குக் கொண்டு வருவதையும் அவை வழக்கமாகக் கொண்டிருந்தன.

அவ்வளவு பெரிய மரத்தின் ஒரு கிளையில் சின்னக் குருவி ஒன்று தன்னுடைய கூட்டை அமைத்து வசித்து வந்தது.

எல்லாப் பறவைகளைப் போலவே, இந்தச் சின்னக் குருவியும், காலையில் எழுந்து இரையைத் தேடிச் செல்லும். வழியில் எங்கேயாவது தண்ணீர் தென்பட்டால் ஒரு குளியலைப் போடும். எப்போதும் நீராடிவிட்டுத்தான் தன் கூட்டுக்குத் திரும்பும்.

ஒரு நாள் உணவைத் தேடி நீண்ட தூரம் சென்றது. ஆனால், அன்று ஏனோ எந்த உணவும் குருவியின் கண்களுக்கு அகப்படவே இல்லை.

பசி மயக்கத்தில் ஒரு சிறிய பாறை மீது அமர்ந்து சற்றே இளைப்பாறியது.

அப்போது அங்கே ஒரு புழு, தன் குட்டிப் புழுவுக்கு உணவைத் தேடிப் பசியாற்றிக் கொண்டிருந்தது.

இதை தூரத்திலிருந்து பார்த்துவிட்டது அந்த சின்னக் குருவி. ‘அடடா! இன்று நல்ல வேட்டைதான். ஒரு பெரிய புழுவோடு, குட்டிப் புழுவும் கிடைத்துவிட்டதே...’ என மனதில் நினைத்து மகிழ்ந்தது.

அதன் சிறிய இறக்கையை விரித்தது. அந்த இறக்கையின் நிழல் புழுக்களின் மீது விழுந்தது.

“என்ன இது இப்போதே இருட்டாக ஆகிவிட்டதே” என்று சொல்லியவாறே நிமிர்ந்து பார்த்தது அம்மா புழு. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. ‘ஐயையோ! குருவி. இப்படிக் குருவியிடம் மாட்டிக்கொண்டேமே... எப்படித் தப்பிப்பது’ என நினைத்து பயந்தது.

சின்னக் குருவி புழுக்களுக்குப் பக்கத்தில் வந்தது.

உடனே யோசனை செய்த அம்மா புழு, “சின்னக்குருவியே! பசியாக இருக்கிறாயா?, எங்களை சாப்பிடப் போகிறாயா?, உண்மை தெரியாமல் இந்த வயலுக்கு வந்துவிட்டாயா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டது.

“இது என்ன இப்படிக் கேள்விகளை கேட்டுக்கொண்டே போகிறாய். உங்களைச் சாப்பிட வராமல், உங்களோடு ஓடிப் பிடித்து விளையாடவா வந்திருக்கிறேன்” என்றது கோபத்துடன்.

அவ்வளவு பெரிய இறக்கையைக் கண்ட குட்டிப் புழு, நடுங்கியபடியே அம்மாவிடம் ஒட்டிக்கொண்டது.

“அவசரப்படாதே! நான் சொல்வதைக் கேள். அப்புறம் எங்களைச் சாப்பிடலாம்” என்றது அம்மா புழு.

“என்ன சொல்லப்போகிறாயோ, அதை சீக்கிரம் சொல். எனக்குப் பசிக்குது. நீங்கள் என் பசிக்குச் சிறு உணவுதான். நான் வேறு உணவை வேறு தேடிப் போக வேண்டும்” என்றது சின்னக்குருவி.

“குருவியே! கோபப்படாதே. நாங்கள் இந்த வயலில் காலம் காலமாக வாழ்கிறோம். இந்த வயலுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம். அதனால்தான் ‘விவசாயிகளின் நண்பன்’ என்ற பெயரைப் பெற்றுள்ளோம்” என்றது.

“இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்ற? எனக்குப் பசி அதிகமாகிவிட்டது. இரையைப் பார்த்த பிறகு அதனுடன் நேரத்தை வீணாக்கிப் பயனில்லை” என்றது.

“சரி! கடைசியாக நான் சொல்கிற உண்மையை மட்டுமாவது கேள்” என்றது குருவி அம்மா புழு.

“ம்... சரி சொல்” என்றது சின்னக்குருவி.

“இந்த வயலில் உள்ள புழுக்களை, எந்தப் பறவை சாப்பிட்டாலும், அந்தப் பறவையின் மூக்கு நீளமாக வளர்ந்து, நீண்ட மூக்காகிவிடும்” என்றது அம்மா புழு.

“என்ன, நீண்ட மூக்காகிவிடுமா?” என்று அதிர்ச்சி கலந்த வியப்புடன் கேட்டது சின்னக் குருவி.

“ஆமாம்! உண்மைதான். நீண்ட மூக்காகிவிட்டால், அப்புறம் உன்னால் எதையும் சாப்பிட முடியாது. பசியோடு செத்துப்போய்விடுவீர்கள்” என்றது.

சற்றே பயந்த சின்னக்குருவி, “இதெல்லாம் இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே. உன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொய் சொல்கிறாய்” என்றது.

“இல்லை. உனக்கு சந்தேகமாக இருந்தால். இந்தச் சேற்றில் உன் மூக்கை வைத்து அளந்து பார். அப்புறம் எங்களைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அளந்து பார். கொஞ்சம் நீண்டு இருக்கும்” என்றது அம்மா புழு.

அப்படியா சொல்கிறாய். சரி அளந்து பார்க்கிறேன்” என்று கூறி சேற்றில் தன் மூக்கை வைத்து அழுத்தியது. சேற்றில் குருவியின் மூக்கு அச்சு பதிந்தது.

இதுதான் சரியான சமயம் என எதிர்ப்பார்த்த, அம்மா புழு தனது குட்டிப் புழுவை இழுத்துக்கொண்டு மண்ணுக்குள் வேகமாகப் போனது.

அச்சு வைத்துவிட்டுத் திரும்பிய சின்னக்குருவி, “பார்த்தீர்களா என் மூக்கின் அச்சு” என்றது. ஆனால் புழு அதற்குள் மண்ணுக்குள் போய்க் கொண்டிருந்தது.

“அட! என்னையே ஏமாற்றவா பார்த்தீர்கள்” என்று சொல்லியவாறு, தனது மூக்கால் இரண்டு புழுக்களையும் பிடித்துச் சாப்பிட்டது.

“அப்பாடா! ஓரளவுக்குப் பசி தீர்ந்தது” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

‘அந்தப் புழு சொன்னது உண்மையாக இருந்தால்...’ என மனத்துக்குள் எண்ணியது. ‘சரி! நம் மூக்கு நீண்டு இருக்கிறதா என சோதித்துப் பார்த்துவிடலாம்’ என எண்ணிச் சேற்றில் மீண்டும் மூக்கை வைத்து அழுத்தியது.

புழு சொன்னதிலிருந்து குழப்பத்தில் இருந்ததால், அதனால் மூக்கின் அச்சை சரியாக வைக்க முடியவில்லை. பலமுறை அச்சு வைத்தும் ஒரே அளவாக இல்லாமல் இருந்தது.

“ஐயையோ! புழு சொன்னது உண்மைதான் போல. இந்த அச்சுகளில் என் மூக்கு கொஞ்சம் நீண்டுதான் இருக்கிறது” என வருந்தியது.

அந்தக் காடு முழுவதும் பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய கதையைச் சொல்லி வருந்திக்கொண்டிருக்கிறது அந்தச் சின்னக்குருவி.

குழந்தைகளே, உங்கள் வீட்டருகே அந்தச் சின்னக்குருவி வந்தால், உண்மையைச் சொல்லி, அதன் வருத்தத்தைப் போக்குகிறீர்களா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்