மாய உலகம்! - நான் விஞ்ஞானி ஆனது எப்படி?

By மருதன்

நான் எப்படி விஞ்ஞானி ஆனேன் என்றோ எப்போது ஆனேன் என்றோ கேட்டால் யோசிக்க வேண்டியிருக்கும். யாரால் ஆனேன் என்று கேட்டுப் பாருங்கள். உடனே சொல்லிவிடுவேன். எறும்பால். எட்வர்ட் வில்சனாக அல்ல; எறும்பு வில்சனாக என்னை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம். இது பற்றி எறும்பின் கருத்து என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், உலகின் உன்னதமான உயிர்களில் ஒன்றுடன் என் பெயரை இணைத்ததில் எனக்குத்தான் ஏகப்பட்ட பெருமை. ஏகப்பட்ட மகிழ்ச்சி.

இன்றும்கூட யாருடன் என்ன முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருந்தாலும் ஓர் எறும்பைப் பார்த்துவிட்டால் போதும். அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவேன். எறும்பு, எறும்பு என்று கூப்பிட்டால் எப்படி அது திரும்பிப் பார்க்காதோ அப்படியே வில்சன், வில்சன் என்று எவ்வளவு கூப்பிட்டாலும் நகர மாட்டான் வில்சன்.

அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே மனிதர்களைவிட மற்ற உயிரினங்கள்மீதுதான் எனக்குப் பிடிப்பு அதிகம். நண்பர்களைவிடவா என்றால் ஆம். அப்பா, அம்மாவைவிடவா என்றால் ஆம். வீடா, காடா என்றால் காடு. உறவினர் வீடா, குளமா என்றால் குளம். புதரா, நாற்காலியா என்றால் புதர். இரண்டு காலா, நான்கு காலா என்றால் நான்கு கால். வாலா, வாலற்றதா என்றால் வால். பட்டாம்பூச்சியா, பள்ளிக்கூடமா என்றால் பட்டாம்பூச்சி. பணமா, பெயரா, புகழா, அறிவியலா என்றால் அறிவியல்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எனக்கு வயது 14. அடுத்து என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று ஐரோப்பாவும் நான் பிறந்த அமெரிக்காவும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தன. நான்? நீரிலிருக்கும் இலையின் மீது அமர்ந்து மிதக்கும் கட்டெறும்பு நல்லபடியாக கரை சேருமா, சேராதா? பகலும் இரவும் பார்த்துப் பார்த்து வலை பின்னும் சிலந்தியை ஒட்டடை அடிக்கிறேன் என்று அம்மாவோ அப்பாவோ கலைத்துவிட்டால் அது என்ன செய்யும்? விதவிதமான ஷூ அணிந்து எல்லா இடங்களிலும் நடந்து போகிறோம்; எவ்வளவு எறும்புகளை, பூச்சிகளை, புழுக்களை நாம் மிதித்திருப்போம்! இதையெல்லாம் தடுக்கவே முடியாதா?

பள்ளியில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்தபோது பாம்போடு நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்தேன். ஒருமுறை கோடைக் கால முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். உனக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்று என்னிடம் அதிகாரி கேட்டபோது, பாம்பு பிடித்துக் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். ஆகா, உனக்காகத்தான் காத்திருந்தேன் வா என்று அழைத்துச் சென்றார்கள்.

ஒரு குழுவாகச் சுற்றுவோம். வில்சன், வில்சன் என்று அலறல் சத்தம் கேட்டால், எங்கே, எங்கே என்று ஓடுவேன். பெரும்பாலும் பார்க்கும்போதே எனக்கு என்ன பாம்பு என்று தெரிந்துவிடும். ஒரு நத்தையை அல்லது ஓணானை எடுப்பதுபோல் குனிந்து மிக இயல்பாகப் பாம்பைத் தொட்டுத் தூக்குவேன். நஞ்சுள்ள பாம்பு என்றால் அதற்கான குச்சியைக்கொண்டு தலையை அழுத்திப் பிடித்துத் தூக்குவேன். எடுத்து, எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டே வருவேன். நிரம்பியதும் அருகிலிருந்த விலங்கியல் பூங்காவுக்குச் சென்று ஒப்படைத்துவிடுவேன்.

போர் வீரர்களோடும் தங்கியிருந்தோம். துப்பாக்கி, பீரங்கியோடு நடை போடுபவர்கள்கூட ஐயோ பாம்பு என்பார்கள். ஓடிப்போய் பிடிப்பேன். பாம்பு பற்றி அவர்களுக்குச் சின்ன சின்ன உரைகள் ஆற்றினேன். எச்சரிக்கையாகத்தான் இருந்தேன். அப்படியும் ஒருமுறை கட்டுவிரியன் குட்டியொன்று சட்டென்று சீறி என்னுடைய இடது ஆள்காட்டி விரலைக் கொத்திவிட்டது. என்னை இழுத்துச்செல்லும்வரை அந்த அழகிய குட்டியைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒருமுறை மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீன் முள் என் கண்ணைக் குத்திவிட்டது. வலது கண் பார்வை போய்விட்டது. இப்போது என்ன செய்வாய் வில்சன் என்று கேட்டார்கள். இருக்கும் ஒரு கண்ணால் விலங்குகளையும் பறவைகளையும் பூச்சிகளையும் காண்பேன். எனக்குப் பிடித்த எறும்புகளை ஒரு கண்ணால் ஆராய்வேன். என் ஆய்வுகளை ஒரு கண்ணைக் கொண்டு எழுதுவேன் என்றேன்.

ஏன் என்றார்கள். ஏனென்றால், நான் விஞ்ஞானியாக மாறவில்லை. விஞ்ஞானியாகப் பிறந்திருக்கிறேன் என்று சொன்னேன். உயிரியலில் ஆராய்ச்சி நடத்தி பட்டம் பெற்ற பிறகு அல்ல, உயிரியல் என்றால் என்னவென்று அறிந்துகொள்வதற்கு முன்பே எறும்புகளையும் வண்டுகளையும் சிலந்திகளையும் நான் ஆராயத் தொடங்கிவிட்டேன். அமெரிக்காவில் தீ எறும்புகள் இருப்பதை முதன் முதலாகக் கண்டுபிடித்தபோது நான் ஒரு பள்ளிச் சிறுவன் மட்டுமே.

ஆய்வாளராக மாறியதும் என்ன செய்தேன் என்று நினைக்கிறீர்கள்? பப்புவா நியூ கினியில் உள்ள 13,000 அடி உயர மலையில் ஏறி ஆய்வுகள் நடத்தினேன். அப்படி எதை ஆய்வு செய்தாய் வில்சன் என்று கீழே இறங்கும்போது கேட்டார்கள். அற்புதமான எறும்புகளை என்று சொன்னபோது, வில்சன் நீ இன்னும் வளரவேயில்லையா என்றார்கள்.

எனது ஐம்பதாண்டுகால ஆய்வில் நான் கண்டுபிடித்த உண்மை ஒன்றுதான். எந்த மனிதனாலும் ஓர் எறும்பைவிட அதிகம் வளர்ந்துவிட முடியாது. ஓர் எறும்பைவிட அதிகம் கற்றுக்கொண்டுவிட முடியாது. ஓர் எறும்பு செய்யாத எதையும் நாம் இதுவரை செய்துவிடவில்லை. எறும்போடு ஒப்பிட்டால் நான் இன்றும் ஒரு பள்ளிச் சிறுவன்தான். எறும்பிடம் பாடம் படிக்கும் சிறுவன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்